இயக்குநர் நந்தா பெரியசாமி – சமுத்திரக்கனி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திரு. மாணிக்கம்’.
இந்தப் படத்தில் அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சீதா ராமம் புகழ் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஜிபி. ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
இத்திரைப்படம் டிசம்பர் வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு, படம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.

படத்தைப் பற்றி நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அமீர், “எனக்கு இயக்குநர் நந்தாவுக்கு முன்னால் அவரது அண்ணைத் தெரியும்.
அவரது ‘ஒரு கல்லூரியின் கதை’ படம் வருவதற்கு முன்னதாகவே அந்தப் படம் பற்றி நல்ல பேச்சு இருந்தது.
நந்தா ஒவ்வொரு முறையும் ஏதாவது புதிதாக செய்துகொண்டே இருப்பார்.
‘மாத்தி யோசி’ என்றே டைட்டில் வைத்து படமெடுத்தார். நந்தாவிடம் உழைப்பு முயற்சி தேடல் இருந்து கொண்டே இருக்கும். நடிகர் சமுத்திரகனியிடமும் இதைப் பார்த்துள்ளேன். இந்தப் படம் பார்த்து இரு காட்சியில் கண்கலங்கி விட்டேன்.
படம் வெற்றி பெறுகிறதா இல்லையா என்பது வேறு விசயம். ஆனால் நாம் அடைய நினைத்ததை செய்து விட்டோமா என்பது தான் முக்கியம், அதை இப்படம் செய்துள்ளது. வாழைக்குப் பிறகு எனக்கு மிக நெருக்கமான படைப்பாக இப்படம் உள்ளது.
இந்தக் காலத்தில் நேர்மையாக வாழ்வது என்பதே கடினமாகிவிட்டது. இது நேர்மையை பற்றிப் பேசும் படைப்பு.
வறுமையில் நேர்மையாய் வாழ்வது கடினம், அதை கற்றுத்தருவது தான் இந்தப் படம். நடிகர்கள் கமலஹாசன், சிவாஜி ஆகியோரை எதிர்த்து நடித்த ஒரே ஆளுமை வடிவுக்கரசி.
இதில் பாராதிராஜாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். இயக்குநர் பாராதிராஜா இப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அற்புதமாக நடித்துள்ளார்.
அனன்யாவும் சிறப்பாக நடித்துள்ளார். இப்படம் ஒரு நிறைவான படைப்பு. சுகுமார் பிரமாதப்படுத்திவிட்டார். ஒரு நல்ல படைப்பு, தரமான படைப்பு.
இயக்குநர் நந்தா தனக்கான இடத்தை அடைந்து விட்டார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள சமுத்திரகனியின் கதாப்பாத்திரத்தை இவரைவிட யாராலும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது. அவர் தேர்ந்த நடிகனாக மாறிவிட்டார் வாழ்த்துக்கள்”என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.