மேற்கத்திய நாகரிகத்தின் நீட்சியாக, இப்போது, நட்சத்திர தம்பதியினரின் விவாகரத்துக்கள், புதிய பரிணாம வளர்ச்சியை எட்டியுள்ளது. இதில், அண்மை வரவாக சேர்ந்துள்ளனர் தனுஷ்- ஐஸ்வர்யா.
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யாவை, கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மணந்தார். இது, காதல் திருமணம்.
இவர்களுக்கு, இரு மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், தனுஷ், ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மெல்ல மெல்ல முற்றியது. இருவரும் பிரிந்து வாழப்போவதாக 2022 ஆம் ஆண்டு அறிவித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம், இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், ‘2004 ஆம் ஆண்டு நடைபெற்ற, தங்களின் திருமணப் பதிவை ரத்து செய்ய வேண்டும்’ என கோரி இருந்தார்கள்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் நேரில் ஆஜராக, மூன்று முறை உத்தரவிட்டது. ஆனால், மூன்று முறையும் தனுஷும், ஐஸ்வர்யாவும் ஆஜராகவில்லை.
விசாரணைக்கு ஆஜராகாததால், இருவரும் சேர்ந்து வாழப்போவதாக தகவல் பரவியது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், ரஜினி இல்லத்தில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் தனுஷும் ஐஸ்வர்யாவும் பங்கேற்றனர்.
இந்தச் சூழலில், இந்த விவாகரத்து வழக்கு, நீதிபதி சுபாதேவி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதி, தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
பின்னர் நீதிபதி, ‘இந்த விவகாரத்தில் சுயமாக சிந்தித்து, ஒரு முடிவை எடுக்கும் வகையில், உங்களுக்கு ஆறு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது – இப்போதும் பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறீர்களா? அல்லது உங்கள் முடிவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு இருவருமே, “எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை – பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறோம்” என்று பதிலளித்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் வரும் 27ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்’’ என, அறிவித்தார்.
இந்த விவகாரத்தில் இன்னும், ஐந்து நாட்களில் ஏதேனும் திருப்பம் ஏற்படுமா என்பது தெரியவில்லை.
– பாப்பாங்குளம் பாரதி.