Take a fresh look at your lifestyle.

விஜயை சீண்டும் ரஜினி ரசிகர்கள்!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கும், ‘தளபதி’ விஜய்க்கும், இங்கே மட்டுமில்லாமல், கடல் தாண்டியும் திரளான ரசிகர் கூட்டம் உள்ளது. இருவருமே ஒரு படத்தில் நடிக்க ரூ.200 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் உச்ச நட்சத்திரங்கள்.

சினிமா தாண்டி, ஆன்மீகப் பாதையில் செல்பவர் ரஜினி. அரசியல் சாலையில் கொஞ்ச மாதங்களுக்கு முன் அடி எடுத்து வைத்தவர் விஜய்.

இரண்டு கலைஞர்களும் அவரவர் பாதையில் போய்கொண்டிருக்க, அவர்களது ரசிகர்களோ அராஜகப் பாதைக்கு வழிபோட ஆரம்பித்துள்ளனர்.

இருதரப்பும் போதை வஸ்துவைவிட, இப்போது கொடிய விஷமாகிவிட்ட சமூக வலைத்தளங்களில், ஒருவருக்கொருவர் அம்பு, ராக்கெட் ஏவிவிட்ட வண்ணம் உள்ளனர்.

ஆமாம். வலைத்தளங்களிம் யுத்தம் செய்ய ஆரம்பித்துள்ளனர். போரை தொடங்கியவர், ரஜினி ரசிகர் எனத் தெரிகிறது.

அண்மையில், விஜய் குறித்து, அந்த ரஜினி ரசிகர், ட்விட்டரில், அவதூறான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் பேசிய பதிவு வைரலானது. விஜய் மீது முட்டையை வீச வேண்டும் என்றும், வேறு சில விஷயங்கள் குறித்தும் ரஜினியின் ஆள் பேசியிருந்தார். இது சர்ச்சையை உருவாக்கியது.

இதனை சாக்காக வைத்து ரஜினி ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் இணையவழியில் யுத்தம் செய்தார்கள். தாக்குதல், எதிர் தாக்குதல் – என போர் உக்கிரமானது.

சண்டையை வளரவிட ரஜினி விரும்பவில்லை. தனது தரப்பில் இருந்து ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், “ரஜினிகாந்தின் ரசிகராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் நடிகர் விஜய்க்கு எதிராக வெளியிட்ட கருத்துகள் கண்டிக்கத்தக்கது.

இத்தகைய கருத்துகள் ஏற்க முடியாதவை. மேலும் உண்மையான ரஜினி ரசிகர்கள் யாரும் இப்படிபட்ட செயலில் ஈடுபட மாட்டார்கள்.

ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இத்தகைய எதிர்மறையான நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவதை அல்லது பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்.

இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பது தேவையற்ற பகைமையையும் பிளவுகளையுமே உருவாக்குகிறது.

அதே நேரத்தில், அனைத்து ரசிகர்களும் கண்ணியத்தையும் பரஸ்பர மரியாதையையும் காத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

திரைப்படம் என்பது மக்களை ஒன்றிணைப்பதற்காக இருக்க வேண்டுமே தவிர, அது பிளவை ஏற்படுத்துவதற்காக அல்ல.

ரசிகர் என்ற உணர்வின் பெயரில் எந்த நடிகருக்கும் அல்லது சகமனிதருக்கும் எதிராக வெறுப்பைப் பரப்பக் கூடாது’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி தரப்பில் இருந்து அவரது பி.ஆர்.ஓ. ரியாஸ் அஹ்மது இந்த அறிக்கையை வெளியிட்டு, வெள்ளைக்கொடி வீசியுள்ளார். இந்த ரியாஸ்தான் தான், விஜய்க்கும் பி.ஆர்.ஓ. என்பது குறிப்பிடத்தக்கது.

– மு. மாடக்கண்ணு