Take a fresh look at your lifestyle.

கிராம மக்களை பகைத்த வடிவேலு!

ஊர்க்கோயிலை அபகரிக்கும் முயற்சியா?

தமிழ் சினிமாவில், சர்ச்சைகளை மொத்த குத்தகைக்கு எடுத்திருப்பவர் என ‘வைகைப்புயல்’ வடிவேலுவைச் சொல்லலாம். சக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர் – நடிகைகள் என இவர் பகைக்காத ஆட்களே இல்லை.

பகிரங்கமாக முதல் மோதலை, தனது சொந்த ஊர்க்காரரான விஜயகாந்துடன் ஆரம்பித்தார் ‘புயல்’. விட்டகுறை தொட்டகுறையாக இருவர் வீடுகளும் சென்னை சாலிகிராமத்திலே உள்ளன.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்தை வசை மாறி பொழிந்தார். கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் சென்று வரம்பு மீறிய வார்த்தைகளை பிரயோகம் செய்தார் வடிவேலு. தேர்தல் முடிந்ததும், வினை விதைத்தற்கான பலனை அனுபவித்தார்.

அவரது ஆபீஸ் கல்வீசி தாக்கப்பட்டது. வீடும் தாக்குதலுக்கு ஆளானது. பல தரப்பில் இருந்தும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதால், ‘அரசியலே வேண்டாம்’ என ஒதுங்கிக் கொண்டார். ஆனாலும் சினிமாவில் சண்டைகளைத் தொடர்ந்தார்.

‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ என்ற படத்தைத் தயாரித்து வடிவேலுவை நாயகனாக அறிமுகம் செய்தவர் டைரக்டர் ஷங்கர்.

வடிவேலுவின் இன்னொரு பரிமானம் அந்தப் படத்தில் வெளிப்பட்டது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்தார் ஷங்கர். அந்தப் படத்துக்கு வடிவேலு அளித்த நெருக்கடிகளால், படப்பிடிப்பைத் தொடர முடியவில்லை.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு போனார் ஷங்கர். வடிவேலுவுக்கு ‘ரெட்கார்டு’ போட்டது தயாரிப்பாளர் சங்கம். இதனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர் அண்மையில்தான் மீண்டும் நடிக்க அனுமதிக்கப்பட்டார்.

இடைப்பட்ட காலத்தில் சிங்கமுத்து உள்ளிட்ட சக நண்பர்களோடு மோதல். நீதிமன்றம் வரை சென்றார்.

இப்போது சொந்த கிராமத்திலேயே வம்பை விலைக்கு வாங்கி இருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் காட்டு பரமக்குடியில் அய்யனார் கோயில் உள்ளது.

அய்யனார், இவரது குலதெய்வம். அங்கே அடிக்கடி சென்று வருவார். ஆனாலும் இந்தக் கோயில், கிராமத்துக்கு பாத்தியப்பட்டது.

அந்தக் கோயிலுக்கு தனக்கு வேண்டியவர் ஒருவரை அறங்காவலராக நியமித்து, அய்யனார் கோயிலை அபகரிக்க வடிவேலு முயல்வதாக ஊர் பொதுமக்கள் கொதித்து போய் உள்ளனர்.

அய்யனார் கோயில் முன்பு, வடிவேலுவை கண்டித்து, கிராம மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.

ஊர்க்கோயிலை கையகப்படுத்த நினைக்கும் வடிவேலு மீது விரைவில் போலீசில் புகார் அளிக்கவும் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

வைகைப்புயலுக்கு இந்த வம்பு தும்பெல்லாம் தேவையா?

– மு. மாடக்கண்ணு