Take a fresh look at your lifestyle.

பிளாக் கோல்டு: தலைமுடியை வைத்து ஒரு தரமான படம்?

வெற்றி, பிரியா லயா, லிவிங்ஸ்டன், அபிராமி வெங்கடாச்சலம், ஏ.வெங்கடேஷ், ராமர், அருள் டி சங்கர், துளசி, நடிப்பில் தீரன் அருண்குமார் எழுதி இயக்கி இருக்கும் படம்.

எம்.எம்.ஸ்டுடியோஸ் சார்பில் மூர்த்தி தயாரித்து ஒரு முக்கிய வேடத்தில் நடித்தும் இருக்கிறார்.

இந்த வாரப் படங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் படம் எப்படி இருக்கிறது? பார்ப்போம்.

இரண்டு தாதாக்களுக்குள் (வெங்கடேஷ்- அருள் சங்கர்) கடத்தல், சரக்கு, அடிமாட்டு விலைக்கு சொத்துக்கள் வாங்குவது… இவற்றில் பகை.

இதைப் பயன்படுத்தி இரண்டு தரப்பிடமும் காசு பார்க்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி (தயாரிப்பாளர் மூர்த்தி).

தாதாக்களில் ஒருவரின் (வெங்கடேஷ்) நிறுவனத்தில் பணியாற்றும் டிரைவருக்கு (லிவிங்ஸ்டன்), மனைவி (சுதா), மகன் (வெற்றி) மற்றும் ஒரு மகள்.

கார் சர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் மகனுக்கும் ஒரு பெண்ணுக்கும் (பிரியா லயா) காதல். ஆனால், பிரியாவின் அப்பாவுக்கு (ஜீவா ரவி) மகளின் காதலனை பிடிக்கவில்லை.

ஒருமுறை இன்ஸ்பெக்டர் அப்பாவை அடித்து அவமானப்படுத்த, பதிலுக்கு அவரது முகத்தை மூடி அடி வெளுத்து விடுகிறான் மகன்.

ஊருக்குள் நுழைந்து குறைந்த விலையில் காய்கறி விற்பது போன்ற வேலைகளை செய்யும் ஒரு கும்பல் (கராத்தே வெங்கடேசன் மற்றும் சிலர்) அப்படியே நோட்டம் பார்த்து, பெண்கள் தனியாக இருக்கிற – அல்லது முதியோர்கள் மட்டும் இருக்கிற வீடுகளுக்குள் நுழைந்து, கொடூரமாக தாக்கிக் கொள்ளை அடிக்கிறது.

காதலனின் அப்பா வேலை செய்யும் நிறுவன முதலாளிக்கு தலைமுடி வியாபாரம் எவ்வளவு பெரிய லாபம் என்பது தெரியவருகிறது. அவர் அதில் ஈடுபட, சக தாதாவும் ஈடுபடுகிறார்.

தவிர காய்கறி விற்றுக் கொள்ளையடிக்கும் கும்பலும், மேற்படி தாதாக்கள் வாங்கிக் கொண்டு போகும் தலைமுடி வாகனங்களை மறித்துக் கொள்ளையடித்து, தங்கள் சரக்கு போல விற்பனை செய்து காசு பார்க்கின்றனர்.

இந்த நிலையில், தனது முதலாளியின் பல கோடி மதிப்புள்ள தலைமுடி சரக்கை கொண்டு போகும் அப்பா வழியில் லாரியோடு காணாமல் போகிறார்.

நாயகனை அழைக்கும் முதலாளி, ”உன் அப்பா சரக்கைக் கடத்தி கொண்டு போய் விட்டார்” என்று குற்றம் சாட்டுகிறார்.

அப்பாவின் நேர்மை அறிந்த மகன் அப்பாவைத் தேடுகிறான்.

அப்பாவுக்கு என்ன ஆனது? அடுத்து நாயகன் செய்தது என்ன என்பதே படம்.

‘சாமிக்கு முடி காணிக்கை செய்யும் பழக்கம் காலகாலமாக உள்ள நம் நாட்டில், ஆரம்பத்தில் அந்த முடி எல்லாம் குப்பை போல கொட்டி எரிக்கப்பட்டன.

ஆனால், செயற்கை முடி விக்குகள், சவுரி முடிகள் இவை அப்பட்டமாக பல்லிளிக்கிற சூழலில், முடி காணிக்கை செய்யப்படும் இயற்கையான முடிக்கு உலக அளவில் மவுசு ஏற்பட்டது.

அதுவும் பொதுவாக இந்தியப் பெண்களின் நீளமான முடி, சிகைக்காய் போன்ற இயற்கை பொருட்களால் பராமரிக்கப்படும் அதன் தரம்.. தவிர சாக்லேட், பிரட் உள்ளிட்ட உணவுப் பொருட்களிலும் தலை முடி பயன்படுத்துவது,

இது போன்ற காரணங்களால் பன்னாட்டு நிறுவனங்கள் தலை முடிக்காக இந்தியக் கோவில்களை முற்றுகையிட,

கோவில்கள் விலை உயர்த்த, முடிகளை கைப்பற்றுவதில் நிறுவனங்கள் மற்றும் ஏஜெண்டுகளுக்குள் இருக்கும் போட்டி, பொறாமை போன்றவை, கடத்தல், அடிதடி கொலை வரை போய்க்கொண்டிருக்கிறது.

அப்படி பதப்படுத்தப்பட்டு தரக் கூட்டல் செய்யப்பட இந்திய முடியின் விலை, கிலோ ஒரு லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.

போகப்போக தங்கத்துக்காக பெண்களின் கழுத்துச் செயினை அறுப்பது போல, தலைமுடிக்காக பெண்களின் கூந்தலை அறுக்கும் சமூக விரோதச் செயலும் நடக்கலாம்…”

என்ற, இந்த அட்டகாசமான, பரபரப்பான, பெரிதாக சினிமாவில் பயன்படுத்தப்படாத விஷயம்தான் இந்தப் படத்தின் அடிப்படை.

சும்மா சொல்லக் கூடாது.. கொஞ்சம் அதீத கற்பனை போல தெரிந்தாலும் ஒர்த்தான விஷயம்தான். தீரன் அருண்குமாரை பாராட்டலாம்.

தனது அட்டகாசமான பின்னணி இசையால் படத்துக்கு பெரும்பலம் சேர்க்கிறார் இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ். சபாஷ். சபாஷ்.

சந்தோஷ் குமார் வீரசாமியின் ஒளிப்பதிவும் சிறப்பு.

சுருள்வாள் சண்டைக்காட்சியில் ஹலோ சொல்ல வைக்கிறார் ஸ்டண்ட் இயக்குநர் மெட்ரோ மகேஷ்.

வெற்றி வழக்கம்போல் நடிக்கிறார்.

அழகின் லயத்தில் வளைய வருகிறார் பிரியா லயா.

உழைக்கும் நேர்மையான எளிய அப்பாவாக கவனம் கவர்கிறார் லிவிங்ஸ்டன்.

போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார் தயாரிப்பாளர் மூர்த்தி.

காய்கறி விற்று நோட்டம் பார்த்துக் கொடூர கொலை கொள்ளை செய்யும் கேரக்டரில், தனது தோற்றம் காரணமாகவே மிரட்டுகிறார் கராத்தே வெங்கடேசன்.

சுருள்வாள் சுழற்றும் காட்சியில் அழகாக ஸ்டெப் போடுகிறார் அருள் சங்கர்.

ஏனோ வெங்கடேஷ் நடிப்பில் செயற்கைத் தனம் அதிகம். ரதகஜ துரக பதாதிகள் என்பதற்கு பதில் ‘துரதிபதிகள்’ என்கிறார் வெங்கடேஷ். கவனிக்க வேண்டாமா?

படத்தின் முதல் காட்சி துவங்கி காட்சிகளின் அமைப்பு, வசனம்கூட செயற்கையாக இருக்கிறது.

திரைக்கதையிலும் நேர்த்தி இல்லை. அருள் சங்கர் கேரக்டர் செத்து விட்டது என்று சொன்ன பிறகு பிளாஷ்பேக்கில் அது எப்படி வீரதீரமாக சண்டை போட்டது என்று காட்டுவதால் என்ன பலன்? அவர்தான் செத்துட்டாரே.

தவிர, அந்த கேரக்டருக்கு அப்படி ஒரு சண்டைக்காட்சி எதற்கு? வெற்றி சுருள்வாள் வைத்து நடிக்க முடியாது என்று சொல்லி விட்டாரா என்ன?

தவிர அது ஒரு அயோக்கியத்தனமான கேரக்டர். அவர் மரணத்துக்கு எல்லாம் சோகப் பாடல் எதுக்கு?

பொதுவாகவே காட்சிகளிடையே சரியான இணைப்போ, பிணைப்போ இல்லை.

தாதாக்கள் சண்டை, காதல் கதை, காய்கறிக் கொள்ளை இப்படி ஒவ்வொன்றும் துண்டு துண்டாக இருக்கினறன. இதனால் தினேஷ்குமாரின் படத்தொகுப்பும் பலனற்றுப் போகிறது.

தலைமுடி மாபியா என்ற சிறப்பான கதைக்கரு பிடித்தவர்கள் அதை வைத்து சரியாக திரைக்கதை அமைக்கவில்லை.

ஒருநிலையில் படத்தில் தலைமுடி விஷயம் ஒரு ஓரமாக சுருண்டு கிடக்க, வழக்கமான சண்டை, பாசம், பகை, இவையே படத்தை ஆக்கிரமிக்கின்றன.

சரியான திரைக்கதை என்பது விளையாட்டில்லை சாரே.

ஊட்டிக்கு அழைத்துப் போவதாக சொல்லி விட்டு வீட்டுக்குள்ளேயே ஏசி அறையில் உட்கார வைத்து, “இது மாதிரிதான் ஊட்டியும் சில்லுன்னு இருக்கும். என்ஜாய்… என்ஜாய்…” என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வராது இல்லையா? வராது தானே?

எனில், பிளாக் கோல்டு அவசியம் பாருங்கள்.

மொத்தத்தில் Black Gold…. Blocked Gold

-சு.செந்தில்குமரன்.