மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி, அக்டோபர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்தா’.
இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பு: ஆர். கலைவாணன்.
அட்லீ வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18), ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios), சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் நிறுவனங்கள் (Cine 1 Studios Production) சார்பில் முராத் கெதானி, பிரியா அட்லீ, அலோக் ஜெயின் & அஜித் அந்தாரே ஆகியோர் தயாரித்திருந்தனர்.
ஆக்சன் படமாகத் தொடங்கி, மானுட மெல்லுணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சுவாரஸ்யமாக விரியும் கதையில் உருவான ‘பத்தா’ திரைப்படம், விமர்சன ரீதியாக ஊடகங்களால் பாராட்டப்பட்டும், வசூல் ரீதியாகத் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டும் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
இந்த வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், ‘பத்தா’ படக்குழுவினர் ‘சக்சஸ் மீட்’ வெற்றிச் சந்திப்பை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
எழுத்தாளர் கரன் கார்க்கி :
“இந்த மேடை எனக்கு 16 ஆண்டு காலக் கனவு. அந்த அளவுக்கு எனக்கு சினிமா மீது ஒரு கனவு உண்டு. இதுவரை எட்டு நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு எழுதியிருக்கிறேன். 16 விருதுகள் வாங்கி இருக்கிறேன்.
ஆனால், அதில் எல்லாம் கிடைக்காதது இப்போது கிடைத்துள்ளது. பொதுவாக எனக்கு தமிழ் சினிமா மீது ஒரு விஷயத்தில் வெறுப்பு உண்டு. சென்னை வட்டார மொழியைத் தவறாகச் சித்தரிக்கிறார்கள் என்று.
சென்னை வட்டார மொழிகளில் பல அடுக்குகள் உண்டு. சிந்தாதிரிப்பேட்டையில் பேசுவதை வியாசர்பாடியில் பேச மாட்டார்கள். ராயபுரம் மொழி வேறு மாதிரியாக இருக்கும்.
இந்தச் சென்னை வட்டார மொழியின் வேரைக் கண்டுபிடித்துச் சில சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படி பயன்படுத்திய சொற்களின் பொருளை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
இதன் திரைக்கதையே ஒரு பயிற்சி நிலையத்திற்கு பாடமாக வைக்கும் அளவிற்கு இருக்கிறது” என்றார்.
சாய் பிரித்திவி ராஜ் :
“இது எனக்கு முதல் படம், முதல் பயணம். பயமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வாக இருக்கிறது. படப்பிடிப்பின் போதும் அப்படித்தான் இருந்தது. ஒரு பக்கம் பயமாகவும், இன்னொரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
இயக்குநர் அழகாக நடிக்க வைத்தார். சேது சார் உடன் நடிக்கும் போது பயமாக இருந்தது. படப்பிடிப்பில் நடிக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தாலும், அந்த மகிழ்ச்சியை முகத்தில் கொண்டு வராமல் பயந்து கொண்டே இருந்தேன்.
அவர் நண்பரைப் போல பழகினார். ஜாலியாக இருந்தார். சில நேரம் திட்டியிருக்கிறார். ஆனால், நன்றாகப் படிக்க வேண்டுமென்று சொல்லிக்கொண்டே இருந்தார்” என்றார்.
இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் :
“இந்தப் படத்தை நான்தான் இசையமைக்க வேண்டும் என்றபோது எனக்குப் பல விதமான உணர்வுகள் வந்தன. இந்தப் படத்தில் நடித்தவர்கள் இரண்டு மூன்று பேர் தேசிய விருது பெறுவார்கள் என்று நம்புகிறேன்.
வண்டி ஓட்டுபவர்கள் கூட அத்தனை அருமையாக நடித்திருந்தார்கள். யார் சிறப்பாக நடித்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நடித்திருந்தார்கள்.
முதலில் என்னை இயக்குநர் நம்பவில்லை. வேறு ஒருவரை வைத்து செய்வதாக இருந்தது. நான் ஒவ்வொரு பாடல் மூலமும் அவரிடம் நம்பிக்கை வரவைத்தேன்.
இயக்குநர் பாலாஜி தரணிதரன்:
“விஜய் சேதுபதியுடன் நான் இணைந்த படங்களில் உள்ள அனுபவத்தில் சொல்கிறேன். அவர் இயக்குநர்களின் நடிகர் என்பதை நிரூபித்தவர்.
லிஜோ மோல் மூன்று நாட்களுக்குள் படப்பிடிப்பு என்கிறபோதுதான் வந்து சேர்ந்தார். அவர் வந்ததும் பெரிய நம்பிக்கை வந்தது. எது நடக்குமோ, அது நன்றாக நடக்கும் என்ற நம்பிக்கை வந்தது. அவர் ஒரு சிறந்த நடிகை.
சிறுவன் சாய் குழந்தை குணம் கொண்டவன். அவனை நடிக்க வைக்காமல் இருந்தாலே போதும். அந்தக் குழந்தைத்தன்மை சரியாக வந்தாலே சிறப்பாக அமைந்துவிடும் என்று நினைத்தேன். அப்படித்தான் வந்திருக்கிறது.
சித்தாவில் வந்து பாராட்டைப் பெற்ற சிறுமி சஹஸ்ராவும் சிறப்பாக நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் பங்குபெற்ற அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்தை நம்பினார்கள். அது படத்தில் பொறுப்பாக மாறி வெளிப்பட்டது. அதன் விளைவு சரியாக அமைந்திருக்கிறது.
சாய் அப்யங்கர் முதலில் இசையமைக்க எனக்கு ஒரு சின்ன பயம் இருந்தது. ஆனால் அந்தப் பயத்தை நீக்கி, நம்பிக்கையை அவர் ஏற்படுத்தினார். அதற்குப் பிறகு பின்னணி இசை அமைக்க வைத்தேன். அவர் படத்தை வேறொரு உயரத்துக்குக் கொண்டு சென்றார்.
அதுமட்டுமல்ல, காஸ்டியூமர் ஸ்ருதி மஞ்சரி வயதில் இளையவராக இருந்தாலும், 80-களின் உடைகளை எல்லாம் சரியாகக் கொண்டு வந்தார். டிசைனர் கோபி பிரமாதமான திறமைசாலி.
இப்படி இந்தப் படத்திற்குப் பின்னால் உழைத்தவர்கள் நிறைய பேர். அனைவருக்கும் நன்றி” என்றார்.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா:
“இது ஒரு நீண்ட பயணம். இந்தப் படம் வணிகப் படங்களுக்குள் கலையை கொண்டு வந்த படம்.
இந்தப் படத்தின் வெற்றி மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. வணிகத்தை மீறி கலை செய்யக்கூடிய இயக்குநராக பாலாஜி தரணிதரன் இருக்கிறார்.
இந்தப் படம் என் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இருப்பதால் என் மனதுக்கு நெருக்கமான படமாக இருக்கிறது.
படத்தில் வரும் பத்தாவுக்கு அவன் பாடியபோது ஒரு சின்ன பாராட்டு கிடைத்திருந்தால், அவன் கத்தியைத் தூக்கியிருக்க மாட்டான்.
என் வாழ்க்கையும் அப்படித்தான் திசை மாறியது. போதை அடிமையாக இருந்து மாறியிருக்கிறேன். நல்ல படங்கள் எல்லாம் நல்ல புத்தகங்கள் போன்றவை. இந்தப் படம் அப்படிப்பட்ட படம்” என்றார்.
நடிகர் விஜய் சேதுபதி :
“எனக்கு இப்போது காய்ச்சல் வந்திருப்பது போல இருக்கிறது. பெரிய மகிழ்ச்சியாக இருந்தால் எனக்குக் காய்ச்சல் வரும். நான் நன்றி சொல்வதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். யாரிடம் தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை.
முதலில் இந்தப் படத்தை இவ்வளவு தூரம் கொண்டு சென்றதற்குப் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி.
ஒரு படத்தை எடுத்து உங்களுக்குப் போட்டுக் காட்டிவிட்டுக் காத்திருக்கும் போது, பிரசவத்திற்கு மனைவியை அனுப்பிவிட்டு வெளியில் பதற்றத்துடன் காத்திருப்பது போல் இருக்கும்.
நீங்கள் எல்லாம் மலர்ந்த முகத்தில் வந்தீர்கள் என்றால், அன்று எங்கள் தோட்டம் முழுவதும் பூக்கள் பூத்திருக்கும்.
இந்தக் கதையை மற்ற தயாரிப்பாளர்கள் நம்பவில்லை. அட்லீ தான் நம்பினார். சினிமா என்பது வியாபாரம் தான். இதைக் குறையாகச் சொல்லவில்லை.
இயக்குநர் பற்றி சில கேள்விகள் கேட்டார்கள். இயக்குநரைப் பற்றிப் பேசும்போது, அவருக்கு முந்தைய படம் என்ன? அதன் வியாபாரம் என்ன? என்று கேள்விகளைக் கேட்டார்கள்.
அவர் இயக்கிய மூன்று படமும் அற்புதமானவைதான். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி, பத்தா என மீண்டும் அற்புதமான படங்கள் தானே?
ஒரு பக்கக் கதையில் நான் நடிக்க ஆசைப்பட்டேன். என் முகத்தைப் பார்த்துவிட்டு கல்லூரி மாணவனாக நடிக்க வேண்டும் என்றார். அவர் மேலும் உற்றுப் பார்த்து இருந்தால் ஒப்புக்கொள்வார். அதனால் நடிக்க முடியவில்லை.
சீதக்காதி, முதலில் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. கமல், அமிதாப், மோகன்லால் போன்றவர்கள் நடிக்க வேண்டிய கதை என்றார். ஆனாலும் நான் நடித்தேன்.
தெருவில் இருக்கும் நாய்கள் அழகாக இருந்தால் கூட, அதை நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம். ஜெர்மன் ஷெப்பர்ட்தான் நமக்குப் பிடிக்கும்.
மனதில் உள்ளதைச் சொல்லக்கூடிய படம் தான் பத்தா. இது உணர்வுகளைச் சொல்கிற படம். எனக்கு குழந்தைகள் பிடிக்கும். ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பின்போது சின்ன பையன் சாய் உடன் நான் சரியாக பேசவில்லை, பழகவில்லை.
ஏனென்றால் அவன் எனக்கு பயந்த மாதிரி நடிக்க வேண்டும். ஒரு சகஜம் ஏற்பட்டு விட்டால் அது மாறிவிடும் என்று நான் இறுக்கமாக இருந்தேன். அவன் நன்றாக நடித்திருக்கிறான்.
இந்தப் படத்தின் மூலம் பெரிய புகழ் வந்திருக்கிறது. அவன் திசை மாறிச் சென்றுவிடக்கூடாது. அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று சொல்வேன்.
தயாரிப்பாளர் அட்லீ :
“எப்படி இருந்தாலும், எப்படிப் பேசினாலும் குற்றம் சொல்கிறார்கள். நான் திமிர் பிடித்தவன் என்கிறார்கள். நியாயமாக இருக்க வேண்டும்; கூட இருப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அந்த நேர்மை, நம்பிக்கை திமிர் என்றால் இருக்கட்டும்.
நான் சின்ன வயதில் விஜய் சாரை வைத்துப் படம் இயக்குவேன் என்றால், யாரும் நம்ப மாட்டார்கள், சிரிப்பார்கள்.
ஷாருக்கானை வைத்துப் படம் இயக்குவேன் என்றால், யாரும் நம்ப மாட்டார்கள், சிரிப்பார்கள். அப்படித்தான் எனது ஒவ்வொரு கட்டமும் இருந்தது. இன்று பாலிவுட் வரை சென்று படம் இயக்கியிருக்கிறேன்.
நான் கறுப்பாக இருக்கிறேன், மதுரை பக்கத்தில் இருந்து வந்திருக்கிறேன். அதனால் சிலருக்குக் கேலியாகத் தெரியலாம். ஆனால், இதைப் பற்றி நான் கண்டுகொள்ளாமல் என் பாதையில் போய்க் கொண்டே இருப்பேன்.
சிலரை மறக்கவே முடியாது. அப்படிப்பட்டவர்தான் விஜய் சேதுபதி அண்ணன். நல்ல நடிகர் என்பதைவிட, முதலில் நல்ல மனிதர். அவரைப் பார்த்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றி ரஜினி சார், ஷாரூக்கான் எல்லாம் பேசுகிறார்கள்.
இன்று விஜய் சேதுபதி அண்ணாவை இந்தியா முழுக்க தெரியும். அவரை நான் மேலும் மேலே கொண்டு செல்வேன்.
கமல் சார், விஜய் சேதுபதி அண்ணா இருவரையும் வைத்து வாய்ப்பு இருந்தால் ‘மருதநாயகம்’ படத்தினை மீண்டும் தொடங்கி எடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.
சாய் அப்யங்கர் கடவுளின் குழந்தை. அவரைப் பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசலாம்.
ஆனால், நாங்கள் லண்டன் சென்றபோது, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய சுமார் 200 இசைக் கலைஞர்களையே இவரது இசைக் குறிப்புகளுக்கு வாசிக்க வைத்து, ஆச்சரியப்படுத்திக் கைதட்டல் வாங்கி வந்தவர். அவர் தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமாக வளர்வார்” என்றார்.