பன்முகத் திறன் கொண்ட தனுஷ், ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அண்மையில் தனுஷ் நடித்து வெளியான அவரது 50 வது படமான ‘ராயன்’ படத்தையும் அவரே இயக்கினார்.
தற்போது ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்த நிலையில் தனது 52 வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். கிராமத்து கதைக்களம், டான் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, தனுஷின் வுண்டர் பார் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படத்துக்கு ‘இட்லி கடை’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் ‘இட்லி கடை’ யில், தனுஷுடன் இணைந்து, சத்யராஜ், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ் அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள்.
முதல் கட்டப் படப்பிடிப்பு தேனியில் நடந்த நிலையில், இப்போது படக்குழுவினர் மதுரையில் முகாமிட்டுள்ளனர். இப்போது, ஹீரோவாக நடித்து வரும் அருண் விஜய், இட்லி கடையில் பிரதான வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒரு படத்துக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அருண், இந்தப் படத்துக்கு வாங்கியுள்ள, ஊதியம் 8 கோடி. ஏற்கனவே அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட சில படங்களில் அருண் விஜய், வில்லனாக நடித்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘இட்லி கடை’ பல மொழிகளில், தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியாக உள்ளது.
– பாப்பாங்குளம் பாரதி