Take a fresh look at your lifestyle.

எம்.ஜி.ஆர். அளித்த பதில்கள்!

9.10.1970 தினமணி கதிரில் வாசகர்களின் கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர். அளித்த பதில்கள்.

இராம. மணிமாறன். சென்னை – 23.
கே: ஒரு மொழியைக் கட்டாயப்படுத்தினால் குழப்பம் நேரிடும் என்கிறார் அறிஞர். தமிழ் நாட்டில் தமிழின் நிலையும்
அப்படித்தானே?

ப: பெற்ற தாயை அம்மா என்று கூப்பிடவேண்டும் என்று சொன்னால் அது கட்டாயப்படுத்துவது என்றா பொருள்படும்!

தன்னைப் பெறாது ஆதிக்கம் செலுத்தி அழிக்க நினைக்கின்ற யாரோ ஒருத்தியை, ‘இவர்தான் உன் அம்மா!’ என்று கூறி, ‘அம் மா’ என்று அழைக்கவும் சொன்னால் அதுவன்றோ கட்டாயப்படுத்துவதாகப் பொருள்படும்.

(ரா. ஸ்ரீநிவாசன். கோவை – 18.)
கே:வாழ்க்கையில் முன்னேற எது தேவை?

ப: தன்னம்பிக்கை, சலியா உழைப்பு, தோல்வியைக் கண்டு கலங்காத நெஞ்சம், ஏமாற்றுகிறவர்களையும் மன்னித்து விட்டுச் செயலாற்றும் துணிவு.

கே: பதவியில் மிகச் சிறந்த பதவி எது?

ப: தன்னலமற்ற தியாகி என்ற பதவி.

கே: தன்னம்பிக்கை என்பதன் பொருள் என்ன?

ப: தான் கையாலாகாதவனல்லன் என்று உணர்வது

கே: கற்பு என்பதன் பொருள் என்ன?

ப: இன்றைய தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற அடிப்படையில், விவாகரத்து ஏற் படாதவரை இருவரும் ஒருவருக் கொருவர் நம்பிக்கைக்குரியவர் களாகப் புனிதத் தன்மையோடு வாழ்வதற்குத்தான் கற்பு என்று பெயர்.

(ஒலிலேண்டு மகிமை, பெங்களூர்-27)
கே:நடிகர் – நடிகை இவர்களுக்கு மன்றங்கள் தேவையா?

ப: எந்த நடிகரும் அல்லது நடிகையும் தன் விருப்பப்படி, தன் வசதியை வைத்து நீண்ட காலத்திற்கு மன்றங்களை நடத்தவே முடியாது. இதை உணர்ந்து விட்டால் உங்களைப் போன்ற நண்பர்களுக்குச் சந்தேகமே ஏற்படாது.

கே : நீங்கள் ஒரு காந்தியவாதியா?

ப: சந்தேகமில்லாமல்.

கே: இயேசுநாதராக நடிக்க உங்களுக்கு எப்போது ஆசை ஏற்பட்டது?

ப: பல ஆண்டுகளுக்கு முன்னால், சிஸில் பி.டி மில்லியின் தயாரிப்பான ‘கிங் ஆஃப் கிங்ஸ்’ என்ற படத்தைப் பார்த்தபோது அந்த ஆசை ஏற்பட்டது.

(எம். சிகாபுதீன், பெரியகுளம்)
கே: சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கு நீங்கள் தரும் அறிவுரை என்ன?

ப: உங்கள் கேள்வி தவறான முகவரிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

(கு. பாலசுப்பிரமணியன், கோவை)
கே: முதல்வர் கருணாநிதி அவர்களுடைய வழியனுப்பு விழாவின்போது அரைக் கை சட்டையுடன தோன்றியுள்ளீர்களே, என்ன சங்கதி?

ப: முழங்கைக்குக் கீழே சட்டை கிழிந்து விட்டிருந்தது. அதனால் தான் அப்போது சுருட்டி விட்டுக் கொண்டிருந்தேன்.

முன்பெல்லாம் எப்போதுமே சுருட்டி விட்டுக் கொள்வது வழக்கம். இப்போது இல்லை. இனித் தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவ தற்கில்லை.

(க.சை. அப்துல் கபூர், சுங்குவார் சத்திரம்)
கே: இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்துள்ள படங்களில் தங்களுக்குப் பிடித்த படம், காட்சி எது?

ப: ‘குடியிருந்த கோயில்’ படம் மிகவும் பிடித்தது. ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் முரடனான தம்பி சாப்பிட்டுவிட்டு, அப்பாவியான அண்ணன் பணம் கொடுக்கும் கட்டம் எனக்குப் பிடித்த காட்சிகளில் ஒன்று.

(எஸ். பி. தனசேகரன், தேவகோட்டை)
கே:தாங்கள் நடித்த படங்களில், அதிகமான படங்களை ‘டைரக்ட்’ செய்த டைரக்டர் யார்?

ப: எனது அன்புச் சகோதரர் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்களின் இளவலும் என் தம்பியுமான டைரக்டர் திருமுகம் அவர்கள்.

(இரா. நவநீதன், தா. வாடிப்பட்டி)
கே: ‘அடிமைப் பெண்’ படத்தை நீங்கள் இயக்கியிருந்தால் ‘நாடோடி மன்ன’னைப் போன்ற வெற்றி அடைந்திருக்கும் அல்லவா?

ப: ‘அடிமைப் பெண்’ ‘நாடோடி மன்ன’னைவிட எல்லா வகையிலும் வெற்றிபெற்ற படம் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

-நன்றி 360 தினமணி வைரவிழா மலர் 1994.