Take a fresh look at your lifestyle.

ஆச்சர்யக்குறி வளைந்தால் கேள்விக்குறி!

‘மூனாஸ்’ என்ற ஒரு  பெரும்புள்ளி, 1946 -ம்  ஆண்டு என்னைச் சந்தித்து, அவர் ஒரு பெரிய திரைப்படம் தயாரிக்கப் போவதாகவும், அதற்கு ‘உலகம்’ என்று பெயர் வைப்பதாகவும் கூறி, என்னிடம் கதை கேட்டார்.

உலக நடப்புகள், மனித சமுதாயத்தில் பல்வேறு பிரிவுகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகக் கதை அமைய வேண்டும் என்றார்.

நான் கதை எழுத ஒரு மாதம் அவகாசம் எடுத்துக்கொண்டு, பாட்டாளி வர்க்கத்துக்கும், முதலாளி வர்க்கத்துக்கும் நடைபெறும் போராட்டத்தை மையமாகக்கொண்டு கதை எழுதி, அதற்கு உரையாடலும் தீட்டி அவரிடம் கொடுத்தேன்.

அதைப் படித்துப் பார்த்த மூனாஸ் அவர்கள், கதையமைப்பு முதலாளித்துவத்துக்கு விரோதமாக இருக்கிறது என்று என்னிடமே கூறி, கதையின் மூல நோக்கத்தையே மாற்றுமாறு சொன்னார். நான் மறுத்துவிட்டேன்.

அவர் கதையைத் திருப்பிக்கொடுத்த பிறகு, நான் அந்தப் படத்துக்காக எழுதிய உரையாடல்களை, தொடர்ந்து வேறு படங்களில் பயன்படுத்திக்கொண்டேன்.

முக்கியமாகப் பல வசனங்கள் ‘நாம்’ படத்தில் இடம்பெற்றன.

உதாரணத்துக்கு ஒன்று இதோ:

தொழிலாளியைப் பார்த்து ஜமீன்தார் கேட்பார்..

“என்னடா, ‘ஆச்சர்யக் குறி’ போடுகிறாய்?”

“ஆச்சர்யக் குறிதான் ஜமீன்தார் அவர்களே, கொஞ்சம் வளைந்தால் கேள்விக்குறியாகிவிடும் நினைவிருக்கட்டும்.. அரிவாளுக்கும் கேள்விக்குறிக்கும் அதிக வித்தியாசமில்லை!”

‘நாம்’ படத்தில் தொழிலாளியாக நடித்தவர் அருமை நண்பர் எம்.ஜி.ஆர்.

நன்றி விகடன் பிரசுரம்

கலைஞர் 100 விகடனும் கலைஞரும் என்ற நூலிலிருந்து ஒரு கட்டுரை.