வாசிப்பின் ருசி:
“ஓர் இயக்குநராக இல்லாமல்… நல்ல சினிமாவை மனமார நேசிக்கும் ஒரு ரசிகன் என்ற முறையில்தான் எனது சினிமா சார்ந்த அனுபவங்களை இதில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
அந்த முறையில் எனது மனந்திறந்த வாக்குமூலம் இது எனலாம். இதை எனது தன்னடக்கம் என்று நீங்கள் கருத வேண்டியது இல்லை!
திரையுலகில் கால் பதிக்க விரும்பாதவனாக இருந்த என்னை இந்தத் திரை வாழ்வுக்குக் கட்டி இழுத்து வந்தவரும், இதில் கால் பதித்து ஜெயித்த பிறகும் திரையுலக வாழ்க்கையை அடியோடு வெறுத்துப் பல முறை சொந்த ஊருக்குப் போன என்னை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து, சினிமாவில் கட்டிப்போட்டவருமான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இந்த நூல் காணிக்கை.
இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்களுக்கு, இது எந்த வகையில் பயனளிக்கும் என்று எனக்குத் தெரியாவிட்டாலும்.. நிச்சயமாக அவர்கள் சினிமா குறித்த எனது எண்ணங்களையும் கருத்துகளையும் புரிந்து கொள்வார்கள் என்று கருதுகிறேன். அவ்வாறு புரிந்து கொள்வதே தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்குப் பேருதவியாக இருக்கும் என்றும் நம்புகிறேன்.”
– கற்பகம் புத்தகாலயம் வெளியிட்டுள்ள ‘சினிமாவும் நானும்’ நூலில் இயக்குநர் மகேந்திரன் எழுதிய முன்னுரையிலிருந்து…