Take a fresh look at your lifestyle.

தமிழ் சினிமாவும் மனப்பிறழ்வுக் கதாபாத்திரமும்!

புத்தக வாசிப்புகள் குறைவாயுள்ளச் சூழலில், அதிகம் பேரைச் சென்றடையும் வெகுஜன சினிமாக்களில் காட்டப்படும் மனநோய் பற்றிய சித்தரிப்புகள் பலவீனமாக இருக்கின்றன.

இத்தனைக்கும் தமிழ்ப் படம் பேச ஆரம்பித்து பத்தாண்டுகள் கழித்து வெளிவந்த, மணிக்கொடி ஆசிரியர் பி.எஸ் ராமையா கதைவசனம் எழுதிய, ‘மதன காமராஜன்’ படம் (1941) முதற்கொண்டே மனநோய் கதாபாத்திரங்கள் திரையில் வர ஆரம்பித்துவிட்டன.

மனநோயின் சிக்கல்களை ஆராயாமல் கதைப்போக்கினை நகர்த்தத் தேவைப்படும் ஓர் உத்தியாகத்தான் பைத்தியக்காரத்தனம் சினிமாக்களில் பயன்படுத்தப்படுகிறது.

சினிமாக்களில் பைத்தியம் என்பது ஒரு ‘மறதிநிலை’. அதாவது, கதாநாயகனுக்கோ அல்லது கதாநாயகிக்கோ தனது கடந்தகாலம் மறந்து போகவேண்டும்.

கதைப்போக்கில் கதாயகனாக இருந்தால், அவனுக்குத் தனது கடந்த பழைய காதலை மறந்து புதுக்காதலைத் துவக்குவதற்குப் பைத்தியம் என்ற ‘மறதிநிலை‘ தேவைப்படுகிறது.

கதாநாயகிக்குப் பைத்தியம் என்றால், அவளது பழைய திருமண வாழ்க்கையானது மறந்துபோய், புது ஆண் உறவுக்கு அவளைத் தயார் செய்ய பைத்தியக்கார அம்சமானது கதைக்கு வேண்டும்.

அறுபது, எழுபதுகளில் வெளிவந்த பைத்தியம் சம்பந்தப்பட்ட கணிசமான படங்களின் கதைகளில், இந்தப் பைத்தியக்கார மறதி செயல்படுவதைக் காணலாம்.

ஒரு தனிமனிதனுக்கும் எதார்தத்த்துக்கும் இடையே பாலம் போலச் செயல்படும் மொழியானது மனச்சிதைவு போன்ற தீவிரமான மனநோயில் கணிசமாகச் சிதறிவிடும். மொழியானது சிதறுண்டு சம்பந்த சம்பந்தமில்லாமல் வெளிப்படும். சிந்தனையோட்டமானது சீராக இருக்காது.

சிந்தனையின் கண்ணிகள் அறுந்து மொழியில் கோர்வையில்லாமல் வெளிப்படும். தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, எதார்தத்தில் உரையாடுவதற்கு இன்னொரு ஆள் இருக்க எதிரில் இருக்க அவசியமிருக்காது.

அப்படிப்பட்டோருக்கான மனநல மருத்துவக் குறிப்புகள் “தனியாகப் பேசுகிறார். தனியாகச் சிரிக்கிறார்” என்றுதான் எழுதப்படும். நோயாளிகளைக் கூட்டிக்கொண்டு வரும் உறவினர்களும் நோயாளி ‘தனியாகச் சுவரோடு பேசுகிறான்’ என்று குறைபட்டுக்கொள்ளுவார்கள்.

ஆர்வமும், வாய்ப்பும் உள்ளவர்கள், தீவிரமான மனநோயாளிகளை எழுத வைத்துப் பார்த்தால் வாக்கியங்கள் சீராக வெளிப்படாததைக் கண்டுணரலாம்.

‘மதனகாமராஜன்’ படத்தில் காதலினால் பைத்தியமான பெண், பெற்ற தந்தையையே அடையாளம் காண முடியாத நிலையிலும், வார்த்தைகளைக் கோர்வையாக அமைத்து அழகாகப் பாட்டுப் பாடுகிறார்.

‘சந்திரமுகி’ போன்ற கதாபாத்திரங்கள் வருவதற்கான தொடக்கப்புள்ளி அந்தப்படம். தமிழ்ச் சினிமாவின் பாடல் மரபுதான் எவ்வளவு வலிது!

நன்றி: Mohamed Safi முகநூல் பதிவு