தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா என 4 மொழிகளில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் அம்பிகா, இன்றும் டிவி சீரியல், ரியலிட்டி ஷோ, சினிமா என பிஸியாக இருக்கிறார். சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
1980-களில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கும் அம்பிகா தமிழின் வெற்றிகரமான ஹீரோயின்.

1976-ல் சிறுமியாக மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்து, தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே 30-க்கும் நேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துவிட்டார்.
1981-ல் வெளி வந்த ‘அந்த 7 நாட்கள்’ படம் தான் அம்பிகாவுக்கு ரெட் கார்பெட் விரித்தது.
தமிழன் பாக்யராஜ் மலையாளியாகவும், மலையாளி அம்பிகா தமிழச்சியாகவும் நடித்த படம்.
படத்தின் பிரம்மாண்ட வெற்றி அம்பிகாவுக்கு தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தைக் கொடுத்தது.
அதே 1981-ல் தான் அம்பிகாவின் தங்கை ராதாவும் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமானார்.
தமிழில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்திருக்கிறார் அம்பிகா. சிவாஜி, கமல், ரஜினி, விஜய்காந்த், சத்யராஜ், சிவகுமார், மோகன் என அனைவருடனும் வெள்ளிவிழா படங்களில் நடித்த பெருமை அம்பிகாவையேச் சேரும்.
அதேபோல் மற்ற மொழிகளின் முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் அவர் இருந்திருக்கிறார்.
அறிமுகமாகி சரியாக 10 வருடங்களில் 80 படங்களுக்கு மேல், தமிழில் மட்டும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இதில் அதிகபட்சமாக 1984-ல் 16 படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அதில் பல படங்கள் வெளிவரவில்லை.
ரஜினியுடன் ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘ஸ்ரீ ராகவேந்திரர்’, ‘படிக்காதவன்’, ‘மிஸ்டர் பாரத்’, ‘மாவீரன்’ என மறக்க முடியாத படங்கள்.
கமலுடன் இவர் இணைந்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் தான். ‘கடல் மீன்கள்’, ‘சகலகலா வல்லவன்’, ‘காதல் பரிசு’, ‘வாழ்வே மாயம்’, ‘காக்கிச் சட்டை’, ‘உயர்ந்த உள்ளம்’, ‘விக்ரம்’, ‘நானும் ஒரு தொழிலாளி’.
சில படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் அனைத்துப் படங்களிலும் மறக்க முடியாத பாடல்கள் இருக்கின்றன.
‘அந்த 7 நாட்கள்’ படத்திலேயே எம்எஸ்வி இசையில் அட்டகாசமானப் பாடல்கள் அமைந்தன. பாடவா உன் பாடலை, சீர் கொண்டு வா, காலம் மாறலாம், வானிலே தேனிலா, கண்மணியே பேசு, பூ போட்ட தாவணி, பட்டுக் கண்ணம், பெண்மானே சங்கீதம், எங்கே என் ஜீவனே, காலைத் தென்றல், கூட்டத்திலே கோயில் புறா, சோடிக்கிளி இங்கே, ஊரைத் தெரிஞ்சுகிட்டேன், காத்திருக்கேன் கதவை திறந்து, வனிதாமணி, நான் பூவெடுத்து, பட்டுப்பூவே என பட்டியல்கள் இன்னும் நீளக்கூடியவை.
80-களில் அம்பிகாவும், ராதாவும் தான் தமிழ் திரையுலகை மொத்தமாக கைபற்றியிருந்தார்கள். இருவரும் இணைந்தும் பல படங்களில் நடித்திருக்கிறார்கள். தற்போதுவரை அம்பிகா இன்றும் சின்னத்திரையில் பிசியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: முகநூல் பதிவு