Take a fresh look at your lifestyle.

சிரஞ்சீவிக்கு சிரஞ்சீவியான வாழ்த்துகள்!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர் சிரஞ்சீவி. வசூலிலும், நடிப்பிலும் தனக்கென முத்திரை பதித்தவர்.

150 படங்களுக்கு மேல் நடித்த சிரஞ்சீவிக்கு இந்த ஆண்டு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவிக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கி இந்திய அரசு கெளரவித்து உள்ளது.

கொன்னிதல சிவசங்கர வரபிரசாத் என்ற இயற்பெயர் கொண்ட சிரஞ்சீவி ஒன்றிணைந்த ஆந்திராவில் கடந்த 1955 ஆம் ஆண்டு பிறந்தவர்.

1976 ஆம் ஆண்டு சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்பு கலை பயின்றார். படிக்கும் போது ரஜினியின் நட்பு கிடைத்தது.

சில மேடை நாடகத்திலும் நடித்தார் சிரஞ்சீவி. 1978-ல் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க தொடங்கியவர் வில்லன், அடியாள், குணச்சித்தர கதாப்பாத்திரம் என பல வேடங்களில் நடித்து ஹீரோவாக உயர்ந்தார்.

நடிப்போடு மட்டுமில்லாமல் சிறந்த நடனத் திறமை கொண்டவர் சிரஞ்சீவி. இவர் உடலை வளைத்து வித்தியாசமாக நடனம் ஆடுவதைப் பார்க்க மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் ஆந்திராவில் உள்ளது.

கமர்சியல் படங்களில் நடித்தாலும் நல்ல கதையம்சம் கொண்டப் படங்களைத் தந்துள்ளார். 1987 ஆம் ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ‘ருத்ர வீணா’ திரைப்படத்தில் தேசிய ஒருமைப்பாட்டுபற்றி பேசியது. இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

இவர் நடித்து வெளியான ‘ஸ்வயம் கிருஷி’ திரைப்படம் மாஸ்கோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

1989 ஆம் ஆண்டு ரஜினி நடித்த ‘மாப்பிள்ளை’ படத்தில் ரஜினியின் நட்புக்காக ஒரு சண்டைக் காட்சியில் நடித்திருப்பார் சிரஞ்சீவி.

இந்தக் காட்சிக்கு தமிழ் மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. 2008 ஆம் ஆண்டு பிராஜா ராஜ்ஜியம் என்ற அரசியல் கட்சி தொடங்கினார்.

சினிமா செய்ய தெரிந்தவருக்கு ‘அரசியல்’ செய்ய தெரியாததால் தனது பிராஜா ராஜ்ஜியத்தை 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார்.

2019 ஆம் ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

அதன் பிறகு வெளியான சில படங்களும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

தெலுங்கு சினிமாவில் நுழைந்த புதியவர்கள் வருகையும், ரசிகர்கள் மனதில் ஏற்பட்ட மாற்றங்களும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

ஆந்திரத் திரையுலகில் சிரஞ்சீவி வெற்றித்தடம் பதித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரை தமிழ்ப் படத்தில் நடிக்க வைத்தவர் இயக்குநர் கே. பாலசந்தர்.

அதன் பிறகு வேறு சில திரைப்படங்களிலும் குறிப்பாக ரஜினி நடித்த ‘ராணுவ வீரன்’ திரைப்படம் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களிலும் தலைகாட்டி இருக்கிறார் சிரஞ்சீவி.

பிறகு அவருடைய தெலுங்குப் படங்கள் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பரவலாகப் கவனம் பெற்று இருக்கின்றனர்.

பொதுவாக ஒருவரை நன்மதிப்புடன் வாழ்த்தும்போது “சிரஞ்சீவியாக இரு” என்று வாழ்த்துவோம். இப்போதும் அதே பாணியில் பத்ம விபூஷன் விருது பெற்றுள்ள சிரஞ்சீவிக்கு சிரஞ்சீவியான வாழ்த்துகள்.

– ஆர். மகேஸ்வரி, டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரி மாணவி.