திரைத் தெறிப்புகள் – 51:
*
உவமைக் கவிஞர் என்று சொல்வார்கள் சுரதா என்ற சுப்புரத்தின தாசன் அவர்களை.
பாரதிதாசனின் இயற்பெயரை முன் வைத்து தன்னுடைய புனை பெயரை அமைத்துக் கொண்ட சுரதா எண்ணிக்கையில் குறைந்த அளவே திரையிசைப் பாடல்களை எழுதி இருந்தாலும், அவை என்றைக்கும் உரிய தனிச் சிறப்புடனே இருக்கின்றன.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்கின்ற நம்பிக்கை ஊட்டும் தலைப்புடன், 1958-ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படத்தில் இடம்பெற்ற “அமுதும் தேனும் எதற்கு?” என்கிற பாடலை, ‘கணீர்’ என்ற செழுமையான குரலில் பாடியிருப்பார் சீர்காழி கோவிந்தராஜன்.
இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் கே.வி. மகாதேவன்
“அமுதும் தேனும் எதற்கு நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு.
அருவி தரும் குளிர் நீர் அன்பே! இனிமேல்
அதுவும் சுடுநீராகும் நமக்கு….”
– என்கிற பாடலை, திரையில் வீணை வாசித்தபடி பாடுகிறவராக நடித்திருப்பார் கேரளத்து நடிகரான பிரேம் நசீர்.
இந்தப் பாடலுக்கு நடனமாடி இருப்பவர் ராஜ சுலோசனா.
“நிலவின் நிழலோ உன் வதனம் – புது
நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்.
மலையில் பிறவா மாமணியே – நான்
கொய்யும் கொய்யாக் கனியே வா நீ”
என்று பாடும்போது சீர்காழியின் குரலைக் கேட்க அவ்வளவு பரவசமாக இருக்கும்.
பாடலுக்கு இடையே, பாடுவதில் அவர் காட்டும் சங்கதி வித்தைகள் கனிவான காதலை வெளிப்படுத்தும்.
தொடர்ந்து எவ்வளவு நளினமான, மென்மையான வரிகள்!
“விழியாலே காதல் கதை பேசு. மலர்க்
கையாலே சந்தனம் பூசு – தமிழ்
மொழி போலச் சுவையூட்டும் செந்தேனே.
உடல் நான் ; உயிர் நீ தானே வா.”
என்று இந்தப் பாடல் நிறைவு பெறும்போது, கேட்கிற பொழுதை இனிமையாக்கிய திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் அவர்களையும், அருமையான வரிகளைத் தந்த கவிஞர் சுரதா அவர்களையும் கொண்டாடத் தூண்டுகிறது.
*
– மணா.