துணிவு படத்துக்குப் பிறகு 2 ஆண்டுகள் கழித்து ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் நடித்து அண்மையில் வெளியான படம் ‘விடாமுயற்சி’. விமர்சனங்கள் ஓரளவு நன்றாக இருந்தாலும், வசூலில் மோசம் செய்தது.
விடாமுயற்சியில் நடிக்கும்போதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வந்தார் அஜித்.
அவர் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கியக் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இதன் டீசரைத் தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது.
“மாமே… கோடைக் கொண்டாட்டத்துக்கு சூப்பர் கிரேசியாக ஒரு படம்.. இது வேற லெவல்” என்ற ‘பில்டப்’ புடன் வெளியான டீசர், அமர்க்களமாகவே உள்ளது.
“ஏகே ஒரு ரெட் டிராகன்… அவன் போட்ட ரூல்ஸை அவனே பிரேக் பண்ணிட்டு வந்திருக்கான்னா, அவன் மூச்சுலயே முடிச்சுடுவான்” என்று யாரோ சொல்வதுபோல் தொடங்குகிறது, அந்த டீசர்.
இதனைத் தொடர்ந்து அஜித் அறிமுகம். ‘நாம எவ்ளோ ‘குட்’ டா இருந்தாலும்… இந்த உலகம் நம்மள ‘பேட்’ ஆக்குது என அவருக்கே உரிய தொனியில் பேசுகிறார்.
அப்போது ஒரு பீப் சவுண்ட் வருகிறது. பிறகு ‘காட்றேன்…’ என டீசரில் முடிக்கிறார் அஜித். டீசரில் அவர் சதா துப்பாக்கியுடன் காட்சி தருகிறார். விதம் விதமான ‘கெட்-அப்’களில் இளமைத் துள்ளலுடன் கூடிய அஜித்தை டீசரில் பார்க்க முடிகிறது.
அவர், துப்பாக்கியைத் தூக்கும் இடங்களில் எல்லாம், அடுத்தடுத்து சகட்டுமேனிக்கு குண்டுகள் வெடிக்கின்றன. அனல் பறக்கும் இந்த டீசர், அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளது.
தமிழகத்தின் முக்கியத் தியேட்டர்களில் டீசர் வெளியிடப்பட்டது. சென்னையில் ரோகிணி மற்றும் கமலா தியேட்டர்களில் வெளியானது. பொங்கல் திருநாளில் வந்திருக்க வேண்டிய ‘குட் பேட் அக்லி’ அடுத்த மாதம் 10 ஆம் தேதி உலகம் எங்கும் ரிலீஸ் ஆகிறது.
– பாப்பாங்குளம் பாரதி.