Take a fresh look at your lifestyle.

தூக்கத்தைத் தொலைத்த அஜித் ரசிகர்கள்!

வேதனையின் விளிம்பில் அஜித்!

ஆண்டின் கடைசி நாட்கள், நடிகர் அஜித்துக்கு தலைவலியையும் திருகு வலியையும் ஒரே நேரத்தில் கொண்டு வந்து சேர்த்துள்ளன.

லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த அஜித், அந்தப் படத்தை திடீரென கிடப்பில் போட்டார்.

தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால், பெரும் பணத்தை அவர்கள் ஒதுக்குவதற்கு சிரமப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தை ஒப்புக்கொண்டார்.

இரண்டு படங்களுமே, வெளியீட்டுக்கு கிட்டத்தட்ட தயார் நிலையில் உள்ளன. பொங்கலுக்கு நிச்சயம் ஒரு படம் ரிலீஸ் எனும் சூழலில், அது விடாமுயற்சியா? அல்லது குட் பேட் அக்லியா? என்பது அஜித்துக்கே தெரியவில்லை.

இதனிடையே, 90-களில் வெளிவந்த ‘பிரேக்டவுன்’ எனும் ஹாலிவுட் படத்தைத் தழுவி, விடாமுயற்சி எடுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.

இதனால் ‘பிரேக்டவுன்’ படத்தைத் தயாரித்த நிறுவனம், 150 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு லைகா நிறுவனத்துக்கு மெயில் அனுப்பி உள்ளது.

சினிமாவுக்குள் அஜித்துக்கு உள்ள பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, அவரது ரசிகர்கள், தேவை இல்லாத விவகாரங்களை அவரது தலையில் ஏற்றி வருகிறார்கள்.

தனக்கு ரசிகர் மன்றங்கள் இருப்பதை விரும்பாத அஜித், பல ஆண்டுகளுக்கு முன்பே அவற்றைக் கலைத்து விட்டார். பொதுவெளியில் அவர் தோன்றி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.

அஜித் தொடர்புடைய செய்திகள், தகவல்கள், புகைப்படங்களை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தான் வெளியிட்டு வருகிறார்.

தனக்கு வழங்கப்பட்ட பட்டங்களையும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அஜித் துறந்து விட்டார். ‘தல’ என்றோ, வேறு பட்டப்பெயர்களிலோ தன்னை அழைக்கக்கூடாது என அவர் கறாராக உத்தரவு போட்டு விட்டார். ஆனால் ரசிகர்கள் கேட்பதாக இல்லை.

அண்மைக்காலமாக ‘கடவுளே’ என அஜித்தை விளித்து வருகின்றனர். பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் ‘கடவுளே அஜித்தே’ என முழக்கம் எழுப்பியவர்கள், இப்போது அரசியல் களம் வரை வந்து விட்டனர்.

அண்மையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் கூட்டத்தில் பங்கேற்ற அஜித் ரசிகர்கள், ‘கடவுளே .. அஜித்தே’ என முழக்கம் எழுப்பியுள்ளனர்.

அவரது ரசிகர்களின் கலாட்டாக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய வண்ணம் உள்ளது.

இதனால் மனம் வெறுத்துப்போன அஜித் நேற்று, சுரேஷ் சந்திரா மூலம் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

அதில் அஜித், தனது மனதின் வலியை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

அதன் விவரம்:

‘சமீபகாலமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரிகமாக தேவை இல்லாமல் எழுப்பப்படும் ‘க… அஜித்தே’ என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது.

எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை.

எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன் – எனவே பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசவுகரியத்தை ஏற்படுத்தும் இந்தச் செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்கள் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் – சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள் – உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்’ என, அஜித் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

அஜித் ரசிகர்கள், தங்கள் ‘தல’க்கு என்ன மதிப்பு அளிக்கப்போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

– பாப்பாங்குளம் பாரதி.