‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித், இப்போது ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ள விடாமுயற்சி, பொங்கல் பண்டிகையின் போது வெளியாக உள்ளது. குட் பேட் அக்லி, அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி ‘ரிலீஸ்’ஆகும் என தெரிகிறது.
அஜித், தனது சிறு வயது முதலே கார் ரேஸிங்கில் பங்கேற்று வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர், உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரேஸிங்கில் ஈடுபடாமல் இருந்து வந்த அஜித் தற்போது மீண்டும் கார் ரேஸ் களத்திற்கு திரும்பியுள்ளார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற ஒரு அணியை உருவாக்கியுள்ளார்.
அஜித் அணியின் ஓட்டுநர் வரிசையில் முதல் நபராக அஜித் இருப்பார். அதோடு, ஃபேபியன் டஃபியக்ஸ், மாத்தியூ டெட்ரி மற்றும் கேம் மெக்லியோட் ஆகியோர் அவரது அணியில் இடம்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அஜித்குமார் ரேசிங்’ அணியின் பெயர் வெளியான நிலையில், இதன் ‘லோகோ’ இப்போது வெளியாகியுள்ளது.
இந்த அணிக்கான கார்களை தயார் செய்வது, பழுது பார்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள BAS KOTEAN RACING என்ற பிரபலமான ஒரு நிறுவனத்துடன், அஜித் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
அண்மையில் நெதர்லாந்தைச் சேர்ந்த ரேஸ் வீரர்களுக்கான ஆடை தயாரிக்கும் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அஜித்குமாரின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.
இந்த நிலையில், துபாயில் நடைபெற உள்ள PORSCHE 992 GT 3 கோப்பைக் கார் பந்தய போட்டிகளுக்காக அஜித் பயிற்சி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
துபாயில் உள்ள ‘ஆர்டோம்’ கார் ரேஸ் மைதானத்தில் அஜித், கார் ஓட்டும் வீடியோவை அவரது, மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.
தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அந்த வீடியோவை அவர் வெளியிட, அதனை அஜித் ரசிகர்கள், வைரலாக்கி வருகிறார்கள்.
– பாப்பாங்குளம் பாரதி.