தமிழ் சினிமாவில் வாரிசுகள், மிக சொற்ப எண்ணிக்கையிலேயே வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளில் பிரபு, கார்த்திக், விஜய், தனுஷ், சூர்யா, கார்த்தி, என ஒரு சிலரே வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்கள்.
விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ், பிரபு, கார்த்திக், விஜயகுமார், பாண்டியராஜன், ஆகியோரது பிள்ளைகள் சோபிக்கவில்லை. ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்தின் இரு மகள்களும் இந்தப் பட்டியலில் அடக்கம்.
பல ஆண்டுகளாக இரு சகோதரிகளும் சினிமாவில்தான் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தந்தையின் ஆசியும், ஆதரவும் இருந்தும், இருவரும் குறைந்த பட்ச வெற்றியைக்கூட எட்டவில்லை.
மூத்தவரான ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டு, சினிமாவில் இயக்குநராக களமிறங்கினார்.
தனுஷை வைத்து ‘3’ எனும் படத்தை இயக்கினார். ஓரளவு பெயர் கிடைத்தது. அதன்பின் ‘வை ராஜா வை’ படத்தை இயக்கினார், படம் சரியாக போகவில்லை.
கடைசியாக விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்த ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்திருந்தார். லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படமும் வெற்றி அடையவில்லை. தயாரிப்பாளருக்கு பெருத்த இழப்பைக் கொடுத்தது.
அதன்பிறகு, ஐஸ்வர்யா, நடிகர் சித்தார்த்துடன் புதிய படத்தில் இணைவதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.
படத்தோல்வியால், துவளாத ஐஸ்வர்யா, தனது அடுத்த படத்திற்கான கதையை எழுதி முடித்துள்ளார். திருத்தணியில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்ற அவர், தான் எழுதிய திரைக்கதையை முருகன் காலடியில் வைத்து வழிபட்டுள்ளார்.
ஐஸ்வர்யா இயக்குவது மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிற நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் முடிவாகவில்லை. முழுமையான பட அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பாப்பாங்குளம் பாரதி.