தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவர் சோனா. அஜித் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 20 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடித்தவர். சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.
தற்போது தனது சொந்த வாழ்க்கை கதையை ‘ஸ்மோக்’ என்ற பெயரில் வெப் சீரிசாக இயக்கி, அவரே நடிக்கவும் செய்கிறார்.
‘இந்த வெப் சீரிசைத் தொடரக்கூடாது, அதை வெளியிடவும் கூடாது’ என சிலர் தன்னை மிரட்டி வருவதாக சில தினங்களுக்கு முன் புகார் கூறினார், சோனா.
‘பிரச்சினைகளே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தேன் – ‘பயோபிக்’ ஆரம்பித்ததும் ஒரு ஆள், இரண்டு ஆள் இல்லை, ஒரு கும்பலே வந்து குதித்தார்கள் – எவ்வளவு ஒதுங்கிப் போனாலும் என்னை அடிக்கிறீர்களே?’ என புலம்பி இருந்தார்.
இந்த நிலையில் வடிவேலு மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி இன்னொரு சர்ச்சையை ஆரம்பித்துள்ளார். அண்மையில் சோனா, நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசினார்.
அவருடன் இணைந்து நடித்த நகைச்சுவை நடிகர்கள் குறித்து கேட்கப்பட்டது. எல்லா நடிகர்களையும் புகழ்ந்தவர், வடிவேலு குறித்து வினா எழுப்பியபோது முகம் சிவந்தார்.
குசேலன் படத்தில் வடிவேலு – சோனா ஜோடியின் காமெடிக்கு தியேட்டரில் நல்ல ‘ரெஸ்பான்ஸ்’ இருந்தது. அது குறித்து கேட்டபோது, ‘வடிவேலு குறித்து பேச வேண்டாம்’ என கமா, வைத்தவர், பிறகு பொங்கி எழுந்தார்.
‘குசேலன் படத்துக்குப் பிறகு வடிவேலுடன் சேர்ந்து நடிக்க பத்துக்கும் மேற்பட்ட படங்களில் வாய்ப்பு கிடைத்தது – அனைத்தையும் நிராகரித்து விட்டேன் – கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த ஆளுடன் நான் நடிக்க மாட்டேன்.
பிச்சை எடுத்துக்கூட சாப்பிடுவேனே தவிர வடிவேலு படத்தில் நடிக்க மாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டார் – வடிவேலு பத்தி பேசுற அளவுக்கு அவர் தகுதியான ஆள் இல்லை.
அவருடன் நடித்த நடிகைகளை, கேட்டுப் பாருங்கள் – அவரைப் பற்றி உண்மையான விஷயங்களை கூறுவார்கள் – அப்போது தெரியும் வடிவேலுவின் லட்சணம்’ என எரிமலையாய் வெடித்துச் சீறினார் சோனா.
அவரது பேட்டியின் வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. வடிவேலு குறித்து சோனா இப்படி சொல்ல என்ன காரணம்? ‘குசேலன்’ படப்பிடிப்பு தளத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்விகள் எழுப்பி வருகிறார்கள்.
வடிவேலு அண்ணே, சோனாவின் வினாக்களுக்குப் பதில் கொடுப்பீங்களா?
– பாப்பாங்குளம் பாரதி.