Take a fresh look at your lifestyle.

வெற்றிப் பயணம் தொடர சாய் பல்லவிக்கு வாழ்த்துகள்!

சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தண்டேல்’ திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன், பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். உண்மைச் சம்பவங்களைத் தழுவி உணர்வுபூர்வமான காதல் கதையாக தயாராகி இருக்கும் தண்டேல் படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னிவாஸ் தயாரித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் இந்தத் திரைப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர் . பிரபு வழங்குகிறார்.

நாளை, உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் தண்டேல் படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் சென்றடையும் வகையில் படக் குழுவினர் அயராது பாடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து கதையின் நாயகியும், தனித்துவமான நடிப்புத்திறன் மிக்க நடிகையுமான சாய் பல்லவி பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், “இந்தத் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கான காரணம், இந்தப் படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை தழுவி எழுதப்பட்டிருந்ததால் என்னைக் கவர்ந்தது.

இந்தக் கதையின் மூல வடிவத்தை கோவிட் காலகட்டத்தில் இயக்குநர் சந்து மொண்டேட்டி என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.  

கதைப்படி, பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் தங்களுடைய விருப்பத்திற்குரியவர்களை அவர்களுடைய மனைவிமார்கள் எப்படி எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் மீட்டு வந்தார்கள் என்று இருந்தது.

அதைப் படித்தவுடன் இதனை எப்போது செய்தாலும்.. இந்த உணர்வு ரசிகர்களுக்கு சரியான விதத்தில் சென்றடையும் என கணித்தேன்.” என்றார்.

அவரது தனித்துவமான நடிப்புத் திறன் பற்றிப் பேசிய சாய் பல்லவி, கதை, கதாபாத்திரம், இயக்குநர் இந்த மூன்றும், அந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் என்கிறார்.

அவரது நடன ஆர்வம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சாய் பல்லவி, “நடனத்தைப் பொறுத்தவரை நான் நன்றாக ரசித்து ஆடுவேன். விஜய் சாரின் நடனத்தில் ஒரு தனி கிரேஸ் இருக்கும். அதைப் பார்க்கும் போது நாமும் ஆட வேண்டும் என்று தோன்றும்.

விஜய் சார், சிம்ரன் மேடம் நடனமாடும் போது அதை பார்த்து உற்சாகம் அடைந்திருக்கிறேன். நடன அசைவுகளைத் துல்லியமாக ஆட வேண்டும் என்பதைவிட அதை அனுபவித்து ஆட வேண்டும் என எண்ணுவேன்.

இந்தப் படத்தில் பல நூறு நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடும் போது அது சவாலானதாகத் தான் இருந்தது.

குறிப்பாக இந்தப் பாடலுக்கு நடனமாடும் போது என் சகக் கலைஞரான நாக சைதன்யா உடன் இணைந்து நிறைய ஒத்திகைப் பார்த்தோம். அந்தப் பாடலில் என்னைவிட நாக சைதன்யா நன்றாகவே நடனமாடி இருக்கிறார்.” என்றார்.

திரையுலகில் தொடர்ந்து வெற்றிகரமாகப் பயணிக்கும் சாய் பல்லவியின் வெற்றி ரகசியம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

“என்னைத் தேடி வரும் நல்ல கதைகள் எந்த மொழியில் இருந்தாலும் அதில் பங்களிப்பு செய்வேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசயத்தைக் கற்றுக் கொண்டே தான் இருக்கிறேன்” என்கிறார்.

வெற்றிப் பயணத்தைத் தொடர நடிகை சாய் பல்லவிக்கு வாழ்த்துகள்.