ரஷ்யாவில் நடைபெற்ற நிகழச்சியொன்றில் ராஜ்கபூர் மற்றும் நர்கீஸ் ஆகியோர் முதன் முதலில் பத்மினியை பார்த்து, அவர்களுக்குள் அறிமுகம் கிடைத்தது. அதன் மூலம் தான் ‘பர்தேசி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பத்மினி பெற்றார்.
இந்தியாவைப் போலவே, ரஷ்யாவிலும் ராஜ்கபூருக்கு ரசிகர்கள் நிறைய உண்டு. ‘பர்தேசி’ படம் வெளியான பின், ரஷ்யாவில் பல குழந்தைகளுக்கு ராஜ் கபூர் என்கிற பெயரும், பத்மினி நடித்த கதாபாத்திரத்தின் பெயரான லட்சுமி என்கிற பெயரையும், ஏன்… பத்மினி என்கிற பெயரையும் பல ரஷ்யர்கள் தங்கள் குழந்தைக்கு சூட்டினர்.
அதனால் தான் அவருக்கு தபால் தலையை வெளியிட்டு சோவியத் யூனியன் பல்லாண்டுகளுக்கு முன்பே பெருமைப்படுத்தியது.
திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன் – சரஸ்வதி ஆவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இளையவர் ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர்.
பத்மினி நான்கு வயதில் நாட்டியம் ஆடப் பயின்றார். முதலில் சகோதரிகள் திருவாங்கூர் நடன ஆசிரியர் கோபிநாத்திடம் பயிற்சி பெற்றனர். கதகளி, பரதம், மணிப்புரி ஆகிய மூன்று ஆடல் கலைகளிலும் பயிற்சி பெற்றனர்.
இந்தியாவின் பெரும்பான்மையான நடன உத்திகளை நுட்பமாகப் பயின்று பரதம் உள்ளிட்ட அனைத்து நடனங்களையும் கற்றுத் தேர்ந்து கதாநாயகியாகவும் நடித்த நடிகைகள் இரண்டே பேர்கள்தான்.
ஒருவர் பத்மினி, இன்னொருவர் வைஜெயந்திமாலா.
‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் இவர்கள் இணைந்து அரங்கேற்றிய போட்டி நடனம் வெள்ளித்திரையில் வரலாறாகிவிட்டது.
தமிழ்த் திரையுலகின் மூவேந்தர்கள் என்று போற்றப்பட்ட எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி ஆகியோருடன் முதன்முதலாக மாறி மாறி ஒரே தருணத்தில் நடித்த நடிகை பத்மினி மட்டுமே.
- நன்றி : முகநூல் பதிவு