Take a fresh look at your lifestyle.

தங்கலானில் நடித்த பிறகு 5 மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றேன்!

பிரபல ஈரான் இயக்குநர் மஜித்தின் இயக்கத்தில் 2017இல் வெளியான ‘பியாண்ட் தி கிளவுட்ஸ்’ எனும் படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா.

தமிழ் சினிவில் நடிகர் ரஜினியின் ‘பேட்ட’, விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது, பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

‘தங்கலான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து பேசிய நடிகை மாளவிகா,

“இந்தப் படத்துக்காக அனைவரும் கடுமையான உழைப்பை வெளிப்படுத்தினோம். எனது கதாபாத்திரத்துக்காக சுமார் ஐந்து மணி நேரம் வரை மேக்கப் போட வேண்டியிருந்தது. 10 மணி நேரம் மேக்கப்பில் இருந்த பிறகு எனக்கு  அலர்ஜி ஏற்பட்டது.

படப்பிடிப்பின் போது கடுமையான மேக்கப்புடன் கொளுத்தும் வெயிலில் நடித்தோம். இதனால் உடலிலும், சருமத்திலும் தீக்காயங்கள் போல் ஏற்பட்டது. இந்தப் படத்தில் நடித்த பிறகு தோல் மருத்துவர், கண் மருத்துவர் உட்பட குறைந்தது ஐந்து மருத்துவர்களை நான் சந்தித்தேன்.

இந்தப் படத்தில் ஒரு காட்சிக்காக, இயக்குநர் பா.ரஞ்சித் என்னை எருமை மாடு மீது சவாரி செய்ய வைத்தார். எருமையுடன் ஒரு காட்சி இருந்தது.

நான் படப்பிடிப்புக்கு தயாராகி கொண்டிருந்தபோது எருமை மாடு நிற்பதைப் பார்த்தேன். இதைப் பார்த்த ரஞ்சித் சார், எருமை மாடு எனக்கு பிடிக்குமா என்று கேட்டார். நான் ஆம் என்று சொன்னதும், அவர் என்னை அதன் மீது உட்காரச் சொன்னார். அவர் கேலி செய்கிறார் என்று நான் நினைத்தேன்.

ஆனால் அவர் என்னிடம் மீண்டும் கேட்டார். இறுதியாக, நான் அதில் சென்று அமர்ந்தேன். அந்தக் காட்சியைப் பற்றி அவர் என்னிடம் முன்கூட்டியே சொல்லாததால், அவர் என்னிடம் கேட்டபோது நான் அதிர்ச்சியடைந்தேன். தங்கலானில் ஒரு பழங்குடி தெய்வமாக நடித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.