நடிகர்கள் விஜய், தனுஷ் போன்று விஷாலும் சினிமா குடும்பத்தில் இருந்து, திரை உலகில் நுழைந்தவர். அவரது தந்தை ஜிகே ரெட்டி, சில தமிழ்ப் படங்களைத் தயாரித்துள்ளார். அதன் நீட்சியே, விஷாலின் சினிமா வருகை.
‘செல்லமே’ படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஷால் சண்டக்கோழி, தாமிரபரணி, திமிரு என பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்தார்.
தனது பெயரில் ‘வி’ இருப்பதாலோ என்னவோ, விஷாலுக்கு, விஜயகாந்த் பாதை பிடித்திருந்தது. ‘கேப்டன்’ போன்றே நடிகர் சங்கத் தலைவர் பதவியை பிடித்த விஷாலின், அடுத்த கட்டம், அரசியலாக இருந்தது.
2017 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற போது, சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கினார். ஆனால் அவரது வேட்புமனு தள்ளுபடி ஆனது.
வேட்பு மனுவை பூர்த்தி செய்யும் ‘திறன்’ கூட இல்லை என அவர் மீது விமர்சனங்கள் பாய்ந்ததால், தற்காலிகமாக அரசியல் ஆசைக்கு மூட்டை கட்டி வைத்து விட்டு, தீவிரமாக சினிமாவில் இயங்க ஆரம்பித்தார்.
சினிமா இயக்குநராகவும் புது அவதாரம் எடுத்துள்ள விஷால், இப்போது நடிகர் சங்கப் பொதுச்செயலாளராக இருக்கிறார். நடிப்பு மற்றும் இயக்கத்தைத் தாண்டி ‘விஷால் பிலிம் ஃபேக்டரி’ எனும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் தேர்வானார். அதுவே, விஷாலுக்கு இப்போது ‘ரெட் கார்டு’ போடும் அளவுக்கு பிரச்சினையாக முளைத்துள்ளது.
சினிமாவில் நடிக்க தடை:
அவர் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்தபோது முறைகேடுகள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை அடுத்து, கடந்த ஆண்டு நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க செயற்குழுவில் விஷாலுக்கு ‘ரெட் கார்டு’ கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
அந்த முடிவு நேற்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. விஷால் பிரச்சினை குறித்து விவாதிக்க தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், விநியோக சங்கத்தினர், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர்.
அப்போது விஷாலுக்கு ‘ரெட்’ கார்டு விதிக்கும் தங்கள் எண்ணத்தை தயாரிப்பாளர் சங்கத்தினர், இந்தக் கூட்டத்தில் வெளிப்படுத்தினர். அதற்கு விநியோகர்கள் சங்கத்தினரும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஒத்துழைப்பு கொடுத்து சம்மதம் தெரிவித்தனர்.
கூட்ட முடிவில் விஷால் பிரச்சனை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையின் விவரம் :
கடந்த 2017-2019 ஆம் ஆண்டு வரை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த விஷால் மீது எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக சங்கத்திற்கு புதிதாக ஒரு அதிகாரியைத் தமிழக அரசு நியமித்திருந்தது.
அந்த அதிகாரி, சங்கத்தின் கணக்கு வழக்குகளைப் பார்க்க சிறப்பு அதிகாரிகளையும், ஆடிட்டர்களையும் நியமனம் செய்திருந்திருந்தார் – அந்த ஆடிட்டர்கள் கணக்கு வழக்குகளை சரிபார்த்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
அதில், ‘விஷால் தலைவராக இருந்த சமயத்தில், சங்க நிதியை தவறான முறையில் பயன்படுத்தியிருப்பதாகவும், வரவு – செலவில் சுமார் ரூ.12 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்’ குறிப்பிட்டிருந்தனர்.
முறைகேடாகப் பயன்படுத்திய அந்தத் தொகையை சங்கத்திற்கு திருப்பி கொடுக்க சொல்லியும் விஷால் பதிலளிக்காத காரணத்தால், இனிவரும் காலங்களில் அவரை வைத்து படம் தயாரிக்கவுள்ளவர்கள் சங்கத்தில் கலந்தாலோசித்த பிறகுதான் படத்திற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்.
இது தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் சாராம்சம்.
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்:
தனக்கு ‘ரெட் கார்டு’ விதிக்கும் விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் உறுதியாக இருப்பதால் விஷால் ஆவேசம் அடைந்துள்ளார். தயாரிப்பாளர்கள் சங்கத்தினருக்கு அவர் சவால் விடித்து அறிக்கை ஒன்றும் விடுத்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் விஷால், நீங்கள் குறிப்பிடும், அந்த நிதியானது தயாரிப்பாளர் சங்கத்தின் நலிந்த, மூத்த உறுப்பினர்களின் மருத்துவ காப்பீடு, நலப்பணிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கான கல்வி உள்ளிட்ட நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா? என வினா எழுப்பியுள்ளார்.
திரையுலகில் நிறைய வேலை உள்ளது – அதில் முறையான கவனத்தை செலுத்துங்கள்- இரட்டை வரி விதிப்பு, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் என பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டும் – விஷால் தொடர்ந்து படங்களில் நடிப்பார்.
இதற்கு முன் திரைப்படங்களைத் தயாரிக்காத, எதிர்காலத்திலும் தயாரிக்காமல் வெறும் ‘தயாரிப்பாளர்கள்’ என சொல்லிக் கொள்பவர்களே.. முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள். ஆரோக்கியமான விஷயங்களைப் பற்றி யோசியுங்கள்” என விஷால் தெரிவித்துள்ளார்.
கோடம்பாக்கத்தில் ‘ரெட் கார்டு’ போடுவதெல்லாம் சகஜம் தான் – இந்தப் பிரச்சினைக்கு விரைவிலேயே சுமுக தீர்வு எட்டப்பட்டு விடும் என்கிறார்கள், தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அனுபவம் உள்ள முக்கியஸ்தர்கள்.
-பாப்பாங்குளம் பாரதி.