Take a fresh look at your lifestyle.

திருவனந்தபுரத்தில் திக்கு முக்காடிய விஜய்!

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் ‘இளையத் தளபதி’ விஜய்க்கு திரளான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அங்கு அவரது படங்கள் திரையிடப்படும் போது, தியேட்டர்கள் திருவிழாக் கோலம் பூணும்.

விஜய் நடிப்பில், சித்திக் இயக்கிய ‘காவலன்’ படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்றது.

அதன்பிறகு விஜய், எந்தப் படத்தின் படப்பிடிப்புக்காகவும் கேரளா செல்லவில்லை.

இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (கோட்) படத்தின் படப்பிடிப்பாக கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு விஜய் நேற்று சென்றார்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் கேரளா வருவதால், அவரை வரவேற்க, திருவனந்தபுரம் விமான நிலையத்தில், காலையில் இருந்தே ரசிகர்கள் காத்திருந்தனர்.

பைக் உள்ளிட்ட வாகனங்களில் வந்த ரசிகர்கள், விஜய் படம் பொறித்த கொடிகளை கையில் ஏந்தி, சாலைகளில் கோஷம் எழுப்பிய படி ஊர்வலமாக, விமானநிலையம் வந்து சேர்ந்தனர்.

சென்னையில் இருந்து நேற்று மாலையில் அவர் திருவனந்தபுரம் வந்தார்.

விமான நிலையத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

இதையடுத்து அவர்களுக்கு கையசைத்தும், கைகளை குவித்து வணக்கம் செலுத்தியும் விஜய் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஏராளமானோர் அவருடன் ‘செல்ஃபி’ எடுத்துக்கொண்டனர். போலீசார் மற்றும் பவுன்சர்கள் புடைசூழ, அவர் பாதுகாப்பாக, தன்னுடைய காரில் ஏறி அமர்ந்தார்.

ஆனால் அவர் பயணித்த காரை ரசிகர்கள் பின்தொடர்ந்து சென்றனர். விமான நிலையத்தில் இருந்து விஜய் தங்கி இருந்த ஓட்டலுக்கு அவர் பயணம் செய்த கார் ஊர்ந்தே செல்ல வேண்டி இருந்தது.

அவருடன் வந்த பவுன்சர்கள் மற்றும் போலீசாரால் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கூட்டத்தில் சிக்கி விஜய், திக்கு முக்காடிப்போனார்.

ஒரு கட்டத்தில் விஜயின் காரை ரசிகர்கள் சூழ்ந்துக் கொண்டு, கையால் தட்டியதில் கார் கண்ணாடி உடைந்து கேபினில் விழுந்தது. காரின் கதவும் உடைந்தது. பெரும் போராட்டத்துக்கு பிறகே விஜயின் கார் ஓட்டலை சென்றடைந்தது.

விஜயை ரசிகர்கள் வரவேற்கும் காட்சிகளும், அவரது கார் உடைந்துள்ள போட்டோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

திருவனந்தபுரத்தில் ‘கோட்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட உள்ளது. முதலில் இந்தக் காட்சியை இலங்கையில் படமாக்கவே வெங்கட்பிரபு திட்டமிட்டிருந்தார்.

கடைசி நேரத்தில் ‘லொகேஷனை’ திருவனந்தபுரத்துக்கு மாற்றி விட்டார். இங்குள்ள கிரீன்ஃபீல்டு மைதானம், சர்வதேச விமான நிலையம் ஆகிய இடங்களில் 4 நாட்களுக்கும் மேலாக, விஜய் பங்கேற்கும் ‘கிளைமாக்ஸ்’ காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

நடிகர் விஜய் அண்மையில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்த பின், புதுச்சேரியில்  நடந்த ‘கோட்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

அவரைக்காண ஏராளமான கூட்டம் திரண்டதால், ‘ஷுட்டிங்’ நடந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் தடியடியும் நடத்த நேர்ந்தது.

திருவனந்தபுரத்திலும், விஜயைக் காண ரசிகர்கள் திரள்வார்கள் என்பதால், படப்பிடிப்பு தளத்தில் போலீஸ் பாதுகாப்புக்கு படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

– பாப்பாங்குளம் பாரதி.