Take a fresh look at your lifestyle.

புதுமுகங்கள் மீதான நம்பிக்கையோடு களமிறங்கியுள்ள ‘லாந்தர்’!

‘யதார்த்த நாயகன்’ விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

கமலா திரையரங்கில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ.ஆர்.கே சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், தயாரிப்பாளர் – நடிகர் பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

படத்தின் இசையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி முருகன் வெளியிட, சிறப்பு விருந்தினர்களும் படக் குழுவினரும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு எம்.எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்திருக்கிறார்.

கிரைம் திரில்லர் வகையிலான இந்தத் திரைப்படத்தை எம் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் பத்ரியும்  ஸ்ரீவிஷ்ணுவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

லாந்தர் திரைப்படம் ஜூன் 21ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தைப் பற்றிப் பேசிய நாயகன் விதார்த்:

”கதாநாயகன் பாத்திரம் போலீஸ் என்று சொன்னவுடன் மூன்று மாதம் நேரம் ஒதுக்குங்கள், உடலை முறுக்கிக் கொண்டு வருகிறேன் என்றேன்.

ஆனால் இயக்குநரோ, அந்தக் கதாபாத்திரம் பொதுமக்களின் பிரதிநிதி. அதனால் நீங்கள் இப்போது இருக்கும் தோற்றத்திலேயே வாருங்கள் என்றார்.

படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், இசையமைப்பாளர் என அனைவரும் புதுமுகங்கள். இந்தத் திரைப்படத்தின் மூலம் அவர்களின் திறமை வெளியே தெரியும்” என்றார்.

இயக்குநர் ஷாஜீ சலீம்:

“என்னுடைய தந்தையார் கே.எல். முகமது ஷெரிப் என்னுடைய சிறிய வயதில் நாவல்களை வாங்கி தந்து படிக்கச் சொல்லி ஊக்கப்படுத்துவார். அதன் பிறகு, வாசித்த கதைகளை சொல்லச் சொல்லிக் கேட்பார்.‌

அதன் பிறகு சில கதைகளை எழுதச் சொல்லி பயிற்சியும் தந்திருக்கிறார். அவர் இன்று இல்லை என்றாலும் அன்று அவர் அளித்த பயிற்சிதான் இன்று என்னை மேடையேற்றி இருக்கிறது.

மற்றவர்கள் செய்த உதவியை வேறு எந்த வகையிலாவது அவர்களுக்கு என்னால் பதிலுக்கு செய்திட இயலும். ஆனால் எனக்காக என்னுடைய மனைவி பதினைந்து ஆண்டுகாலம் வாழ்க்கையை தியாகம் செய்தார்.

அதை எந்த வகையிலும் என்னால் திருப்பித் தர இயலாது. இனிமேல் அவர்களை சிறப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.‌ இவர் இல்லையென்றால் இன்று நான் மேடையில் ஏறி பேசியிருக்க இயலாது.

படத்தை 23 நாட்களில் படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்வதற்கு கடுமையாக உழைத்தவர்கள் என்னுடைய உதவி இயக்குநர்கள். அவர்கள் உதவி இயக்குநர்கள் அல்ல. உதவிய இயக்குநர்கள்.

முதல் திரைப்படத்தை இயக்கும் இயக்குநர்களுக்கு விதார்த் போன்றதொரு அனுபவம் வாய்ந்த நடிகர் கிடைத்துவிட்டால் 50 % சுமை குறைந்து விடும்.

ஏனெனில் கதை சொல்லும் போதே அவர் தனக்கான பங்களிப்பை தீர்மானித்து விடுவார்.

அவரிடம் படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளையும், வசனங்களையும் விளக்க வேண்டிய அவசியம் இருக்காது. கதாபாத்திரத்திற்கு அவ்வளவு நம்பகத்தன்மையுடன் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார்.

இந்தப் படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குறித்து சில வரிகளில் தான் விவரித்தேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நான் எதிர்பார்த்ததை விட அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு வருகைத் தந்திருந்தார். அவரைப் பார்த்தவுடன் நான் வியந்து விட்டேன்” என்றார்.