அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5 ஆம் தேதி வெளியானது.
14 நாட்களில் இந்தப் படம் 1508 கோடி ரூபாய் வசூலித்து ‘ரிகார்ட் பிரேக்’ செய்துள்ளது.
ஆனால், அதனைக் கொண்டாடி சந்தோஷம் அடைய விடாமல், அல்லு அர்ஜுனை சர்ச்சைகளும், புகார்களும் சுழன்றடிக்கின்றன.
சிறப்புக் காட்சியால் வந்த சிக்கல்:
இந்தப் படத்துக்கு தெலங்கானா அரசு சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்திருந்தது. கடந்த 4 ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் பிரிமியர் காட்சி நடைபெற்றது.
இதனைப் பார்க்க அல்லு அர்ஜுன் சென்றிருந்தார். ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார்.
அவரைப் பார்க்க தியேட்டரில் பெரும் கூட்டம் திரண்டது.
கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவருடைய 9 வயது மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறான். அவனது மூளை பாதிக்கப்பட்டுள்ளதால், குணம் அடைய நீண்ட காலம் ஆகும் என டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.
அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது – சரியான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.
எனவே திரை அரங்க நிர்வாகம் மீதும் அல்லு அர்ஜுன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நெரிசலில், இறந்துப் போன ரேவதியின் கணவர் போலீசில் புகார் அளித்தார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார் உடனடியாக தியேட்டர் உரிமையாளரை கைது செய்தனர்.
உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்த நிலையில், அவரையும் போலீசார் கைது செய்தனர்.
ஜாமீன் பெற்று சிறையில் இருந்து அவர் வெளிவந்துள்ளார். இந்த நிலையில், அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால் தான் நெரிசல் ஏற்பட்டது என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம் சுமத்தினார்.
அல்லு அர்ஜுன் பிடிவாதம்:
இதனை அல்லு அர்ஜுன் மறுத்துள்ள நிலையில், அல்லு அர்ஜுன் திரையரங்கை விட்டு வெளியேற மறுத்ததாக ஐதராபாத் போலீசார் 10 நிமிட சிசிடிவி ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர்.
திறந்த காரில் அல்லு அர்ஜுன் வருவது, உடன் வரும் பாதுகாவலர்கள், ரசிகர்களையும் போலீசாரையும் தாக்குவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
தியேட்டரில் என்ன நடந்தது என்று போலீசார் நீண்ட விளக்கமும் அளித்துள்ளனர்.
அதன் விவரம்:
‘டிசம்பர் 4ஆம் தேதி அல்லு அர்ஜுன் உரிய அனுமதியின்றி திரையரங்கிற்கு வந்தார் – ரோடு ஷோவில் ஈடுபட்ட அல்லு அர்ஜுன் இரவு 9.45 மணிக்கு திரையரங்கிற்கு வந்த நிலையில், அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.
விளம்பரம்:
பெண் இறந்தது குறித்து அல்லு அர்ஜுனிடம் இரவு 10.45 மணிக்கு தெரிவிக்கச் சென்ற போது திரையரங்க நிர்வாகம் மற்றும் அவரது பாதுகாவலர்கள் எங்களை அனுமதிக்கவில்லை.
அல்லு அர்ஜுனின் மேலாளர் மூலம் சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்ட போதும், அவர் திரையரங்கை விட்டு வெளியேற மறுத்து விட்டார்.
ஒரு வழியாக திரையரங்கிற்குள் சென்று, அவரிடம் நிலவரத்தை கூறியும் அவர், படம் முடிந்து பின்னர் செல்வதாக பிடிவாதம் பிடித்தார் – வலுக்கட்டாயமாக நள்ளிரவு 12 மணி அளவில், அல்லு அர்ஜுன் திரையரங்கை விட்டு வெளியேற்றப்பட்டார்’ இது காவல்துறையின் ‘ஸ்டேட்மெண்ட்’.
இதனால் அல்லு அர்ஜுன் நிலைகுலைந்து விட்டார்.
வீட்டைத் தாக்கிய மாணவர்கள்:
போலீசார் ஒரு புறம் நெருக்கடி கொடுத்துள்ள சூழலில், மாணவர்களும் அவருக்கு எதிராக போர்க்குரல் எழுப்பி உள்ளனர்.
உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள், அல்லு அர்ஜுனின் வீட்டை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர் வீட்டில் இருந்த பூத்தொட்டிகளை சேதம் செய்தனர்.
கற்கள் மற்றும் தக்காளியை கொண்டு வீட்டைத் தாக்கினர். அவரது வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி, மாணவர்கள், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். நல்ல வேளையாக அப்போது அல்லு அர்ஜுன் வீட்டில் இல்லை.
இன்னும் என்னென்ன நடக்கப்போகிறதோ? என்ற அச்சத்தில் உறைந்துள்ளார் அல்லு.
-பாப்பாங்குளம் பாரதி