சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘லால்சலாம்’ படத்தைத் தொடர்ந்து ‘வேட்டையன்’ படத்தில் நடித்தார். அடுத்தடுத்து அந்தப் படங்கள் வெளியானது. ‘லைகா’ நிறுவனம் தயாரித்த, அந்த இரு படங்களுமே பேசப்படவில்லை. வசூலும் குறைந்தது.
இதனால், சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு, தங்களுக்கு இன்னொரு படம் நடித்து தருமாறு, ரஜினியிடம், ‘லைகா’ நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. ரஜினி, எந்தப் பதிலும் சொல்லவில்லை.
இப்போது அவர், தமிழ்த் திரை உலகின் ‘மோஸ்ட் வாண்டட் டைரக்டர்’ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார்.
அவருடன் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
விசாகப்பட்டினம், சென்னை ஆகிய நகரங்களில் நடைபெற்ற படப்பிடிப்பைத் தொடர்ந்து, தற்போது ஜெய்ப்பூரில் ‘கூலி’ படத்தின் ‘ஷுட்டிங்’ நடந்து வருகிறது.
அங்கு ரஜினி, ஆமீர் கான் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார் லோகேஷ்.
அங்கு ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. தனக்கு சம்மந்தப்பட்ட காட்சிகளில் நடிக்க ரஜினிகாந்த், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று ஜெய்ப்பூர் புறப்பட்டு சென்றார்.
விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 7 பேர் உயிர் இழப்புக்கு வருத்தம் தெரிவித்தார்.
ஜெய்ப்பூர் படப்பிடிப்பைத் தொடர்ந்து மீண்டும் விசாகப்பட்டினம், ஐதராபாத் ஆகிய ஊர்களில் படப்பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது.
இந்த மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் லோகேஷ் கனகராஜ் முடித்து விடுவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்த ஆண்டு மே மாதம் முதல் தேதியில் ‘கூலி’ படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
– பாப்பாங்குளம் பாரதி.