Take a fresh look at your lifestyle.

தென்னிந்தியாவை ஒருங்கிணைக்கும் புது முயற்சி!

தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்குத் துறையில் முக்கியமான முன்னெடுப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் துறைகளைச் சேர்ந்த முக்கிய தயாரிப்பாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கியுள்ளன.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு முக்கிய தென்னிந்திய மொழிகளின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளில் செயல்பட்டு வந்த அமைப்புகள் தற்போது ஒரே குடையின் கீழ் இணைந்துள்ளன.

இதன்மூலம், தென்னிந்திய தயாரிப்பாளர்களின் நலன்களுக்கான ஒற்றுமை மிக்க மற்றும் வலிமை வாய்ந்த அமைப்பு உருவாகியுள்ளது.

தொலைக்காட்சி துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வு காண்பது, கலைஞர்களின் கால்ஷீட் மற்றும் பணிநேரங்களை முறைப்படுத்துவது,

தயாரிப்பாளர்களின் முதலீடுகளைப் பாதுகாப்பது மற்றும் தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளுக்கு இடையிலான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவது ஆகியவை இந்த புதிய சங்கத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இதன் மூலம் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே ஒரு வலுவான பாலமாக இந்த அமைப்பு செயல்பட்டு, மாநில எல்லைகளைக் கடந்து நடைபெறும் தயாரிப்புப் பணிகள் சீரான முறையிலும், வெளிப்படைத்தன்மையுடனும், ஒழுங்குமுறையுடனும் நடைபெறுவதற்கு தேவையான ஆதரவை வழங்கும்.

இந்த புதிய கவுன்சிலின் நிர்வாகக் குழுவின் தலைவராக தெலுங்கு தொலைக்காட்சி துறையைச் சேர்ந்த பிரசாத் செயல்படுவார்.

துணைத் தலைவர்களாக தமிழகத்தைச் சேர்ந்த உதயசங்கர், கன்னட துறையைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். ராஜவேலு பொதுச் செயலாளராக செயல்படுவார்.

தமிழக சங்கத்தின் கெளரவத் தலைவர் ராதிகா சரத்குமார் புதிய கூட்டமைப்பை தொடங்கி வைத்தார். சத்யஜோதி டி.ஜி. தியாகராஜன் மற்றொரு கெளரவத் தலைவர்.

நான்கு மொழி தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த ஒருங்கிணைந்த அமைப்பு, தயாரிப்பாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும், தயாரிப்பு தரத்தை மேலும் உயர்த்துவதிலும், தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி துறையின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதிலும் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்தியாவின் நான்கு முக்கிய மொழித் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகள் ஒரே அமைப்பின் கீழ் இணைந்திருப்பது, பிராந்திய பொழுதுபோக்குத் துறையின் ஒற்றுமை மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கியமான முன்னெடுப்பாக அமைந்துள்ளது.