Take a fresh look at your lifestyle.

ரஜினியுடன் மீண்டும் நடிக்க விரும்பும் மம்முட்டி!

1991 ஆம் ஆண்டு வெளிவந்த ‘தளபதி’ படத்தில் ரஜினிகாந்தும், மம்முட்டியும் சேர்ந்து நடித்தார்கள். மணிரத்னம் இயக்கிய இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதன்பிறகு ரஜினி – மம்முட்டி கூட்டணி இணையவில்லை.

32 ஆண்டுகளுக்கு பின்னர் இரு சூப்பர் ஸ்டார்களும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி தற்போது நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரஜினி கால்ஷீட் கொடுத்துள்ளார்.

இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். தற்காலிகமாக ‘தலைவர் – 171’ என படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மும்முரமாக ஸ்கிரிப்டை தயார் செய்து வரும் லோகேஷ், இந்தப் படத்தில் நடிக்க உள்ள நட்சத்திரங்களின் பட்டியலையும் இறுதி செய்து விட்டார்.

‘பான் இந்தியா’ படமாக இந்த படம் உருவாவதால், அனைத்து மொழி நட்சத்திரங்களையும் இந்தப் படத்துக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்பது லோகேஷ் கனகராஜின் திட்டம்.

அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் மம்முட்டி. இயக்குநர் வட்டாரத்தில் இருந்து இந்தச் செய்தி கசிந்துள்ள நிலையில், ‘இது உண்மையா?’ என மம்முட்டியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

மம்முட்டி தனது சொந்த பட நிறுவனம் மூலம் தயாரித்துள்ள படம் ‘காதல் தி கோர்.’

மம்முட்டியுடன் இணைந்து ஜோதிகாவும் நடித்துள்ளார். இந்தப்படம் இன்று ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் மம்முட்டி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவரிடம் ரஜினிகாந்துடன் மீண்டும் நடிப்பது குறித்து நிருபர்கள் வினா எழுப்பினர்.

அதற்கு மம்முட்டி, ரஜினி நடிக்கும் ‘தலைவர்-171’ படத்தில் நான் நடிக்க வேண்டும் என இதுவரை யாரும் என்னை அணுகவில்லை. அந்தப் படத்தில் நடிப்பதற்காக என்னை எந்த நேரத்திலும் படக்குழு அணுகலாம்.

‘எந்த வேடம் என்றாலும் ஒகே’ என பதில் அளித்து, மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் தன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

‘காதல் தி கோர்’ திரைப்படம், ஓரினச் சேர்க்கை உறவை ஊக்கப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் படத்தில் மம்முட்டி ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இந்தப் படத்தை திரையிட குவைத், கத்தார், சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகள் தடை விதித்துள்ளன.

தன்பாலின ஈர்ப்பாளராக மம்முட்டி நடித்து இருப்பதற்காக அவரை சமூக வலைத்தளங்களில் சிலர் சகட்டு மேனிக்கு விமர்சித்த வண்ணம் உள்ளனர்.

– பாப்பாங்குளம் பாரதி.