Take a fresh look at your lifestyle.

படப்பிடிப்பில் அஜித்தின் திடீர் நிபந்தனை!

‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம், இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் திருநாளில் வெளியானது. அதே நாளில் ‘இளைய தளபதி’ விஜய் நடித்த ‘வாரிசு’ படமும் ரிலீஸ் ஆனது.

இரண்டு படங்களும் வசூல் குவித்து, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

துணிவு படத்தை அடுத்து அஜித், லைகா நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார். அஜித்தின் 62-வது படமான இதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தார்.

விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்துக்கு பிடிக்கவில்லை. இதனால் படத்திலிருந்து விக்னேஷ் விலகிக் கொண்டார். இந்நிலையில் மகிழ் திருமேனி சொன்ன கதை அஜித்துக்கு பிடித்துப்போனது. ஓகே சொன்னார். ‘விடா முயற்சி’ என படத்துக்கு பெயர் சூட்டப்பட்டது.

அஜித், உலக பைக் ரேசுக்கு போய் விட்டதால் படம் தாமதமானது. பைக் ரேஸ் முடிந்து ஊர் திரும்பிய அஜித் படப்பிடிப்புக்கு தயாரானார்.

அஜர்பைஜான் நாட்டில் சில நாட்களுக்கு முன் விடாமுயற்சி ஷுட்டிங் ஆரம்பமானது.

படப்பிடிப்பின் போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அஜித், அரண்டு போனார். படப்பிடிப்பு தளத்தில் சோகமாகவே காணப்பட்டார்.

அங்கு கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதால், விபத்துகள் நேரிடலாம் என கணித்த அஜித், பட நிறுவனத்தாரை அழைத்து, ஷுட்டிங் ஸ்பாட்டில், மருத்துவ முகாம் அமைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதனை தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக்கொண்டு, தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அஜர்பைஜானில் 30 நாட்கள் மட்டுமே ஷுட்டிங் நடத்த டைரக்டர் மகிழ் திருமேனி முதலில் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், இப்போது முழு படப்பிடிப்பையும் அங்கேயே முடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே ஷுட்டிங் தளத்தில் மகிழ் திருமேனியும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும் ஆலோசனை செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

பாலைவன ஒட்டகங்களுக்கு மத்தியில் புகுந்து, இந்த வீடியோவை படம் பிடித்த கறுப்பு ஆடு யார் என தெரியாமல் படக்குழு குழம்பி உள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.