கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய மெகா ஹிட் படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதில் தொடங்கிய பிரச்சினை, படம் ரிலீஸ் ஆகும் வரைக்கும் நீடித்தது.
விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே வசூலைப் பங்கு பிரிப்பதில் சிக்கல் உருவானது. சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில், ‘லியோ’ படம் இங்கே ரிலீஸ் இல்லை என போர்டு வைக்கும் அளவுக்கு விவகாரம் விசுவரூபம் எடுத்தது.
தொடர்ந்து நீடித்த பேச்சுவார்த்தைகளில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதால் ரோகிணி உள்ளிட்ட திரையரங்குகளில் படம் வெளியானது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியான ‘லியோ’ கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், ‘லியோ’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 148.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இரண்டாவது நாளில் 70 கோடிக்கும் மேல் வசூலாகி உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 38 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அள்ளியுள்ளது. கடந்த பொங்கல் பண்டிகையின் போது வெளியான அஜித்தின் ’வலிமை’ படம் முதல் நாளில் 36 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.

அதனை ‘லியோ’ முறியடித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படம் உலக அளவில் முதல் நாளில் 110 கோடி ரூபாய் வசூலித்தது.
ஷாரூக்கான் நடிக்க அட்லீ இயக்கிய. ‘ஜவான்’ முதல் நாளில் 129 கோடி ரூபாய் வசூலித்திருந்தது.
அந்த இரு படங்களின் வசூலை லியோ முறியடித்துள்ளது.
சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்களும் விடுமுறை தினங்கள் என்பதால், வசூலில் ‘லியோ’ புதிய சாதனைகளை எட்டும் என பட நிறுவனம் கணித்துள்ளது.
– பாப்பாங்குளம் பாரதி.