Take a fresh look at your lifestyle.

தமிழ் முஸ்லிம்களின் வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’!

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவான ‘ஹபீபி’, தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காதல் மற்றும் குடும்பப் பின்னணியிலான திரைப்படம்.

இதில் கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ், தனஸ்ரீ சுதாகரன், அனுஸ்ரேயா ராஜன், அருள்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்; மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

1980-களில் தொடங்கி நிகழ்காலம் வரை ஒரு குடும்பத்தின் வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்யும் இப்படம், தென் தமிழகத்தின் முஸ்லிம் சமூகத்தின் கலாசாரம், நம்பிக்கைகள், குடும்ப உறவுகள், காதல், ஆசைகள் மற்றும் கைத்தறி நெசவுத் தொழிலின் பின்னணியில் உருவாகும் வாழ்க்கை மாற்றங்களைப் படம்பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முஸ்லிம் மக்களின் அன்றாட வாழ்வியலை விரிவாகவும் நெருக்கமாகவும் பதிவு செய்த படைப்பாக ‘ஹபீபி’ கவனம் பெற்றுள்ளது.

திரையரங்குகளைத் தொடர்ந்து சோனி லிவ் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ள ‘ஹபீபி’ படத்திற்கு 125 நாட்களாகக் கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழுவினரைப் பாராட்டும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

கில்ட் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்புத் திரையிடலும் இடம்பெற்றது. திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு படக்குழுவினரைப் பாராட்டினர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கஸ்தூரி ராஜா;

‘ஹபீபி’ படத்துக்காக சுமார் 50 மேடைகளில் பங்கேற்றிருக்கிறோம். இன்றுவரை தொடர்ந்து பாராட்டுகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. இவை அனைத்தையும் எங்களுக்குத் தாய்ப்பால் போல ஊட்டி, எங்களை வழிநடத்தியவர் இயக்குநர் மீரா கதிரவன்.

ஒரு இயக்குநரின் பார்வையும் வழிகாட்டுதலும் இல்லாமல் ஒரு படத்தில் எதையும் சாதிக்க முடியாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

சுமார் 48 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன்; 25 படங்களை இயக்கியிருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன், ஒரு படத்தின் ஒவ்வொரு அசைவிலும் இயக்குநரின் பங்களிப்புதான் முக்கியமானது.

இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்திருக்கிறேன்; உதவி இயக்குநராக இருந்து இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வளர்ந்திருக்கிறேன். பல புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.

குடும்பத்தையும் நல்லபடியாகக் கவனித்துவிட்டோம்; இனி நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் மீரா கதிரவன் என் வீட்டுக்கு வந்தார். நீங்கள் நடிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், எனக்கு நடிப்பதில் ஆர்வம் கிடையாது. திரையிலும் வாழ்க்கையிலும் என்னால் நடிக்க முடியாது; மனதில் என்ன தோன்றுகிறதோ, அதை அப்படியே சொல்லிவிடுவேன்.

அதனால், ‘எனக்கு நடிக்கத் தெரியாது; என்னை நடிக்க வைத்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள்’ என்று சொன்னேன். ஆனால், அவர் விடாமல் பேசினார்.

வீட்டில் உள்ளவர்களிடமும் ஆலோசித்தேன். அதன்பிறகு 3 நாட்கள் கழித்துத்தான் கதையை எடுத்துப் படித்தேன்.

படிக்கப் படிக்க, இந்த இயக்குநர் கதைக்காக எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் என்பது புரிந்தது. கதையில் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது என்று தோன்றியது.

இஸ்லாமியர்களின் வாழ்க்கை, கோட்பாடுகள் குறித்து முழுமையான புரிதல் இல்லாதபோதிலும், இந்தக் கதையை முயற்சி செய்து பார்க்கலாம் என்று அரை மனதுடன் ஒப்புக்கொண்டேன்.

ஆனால், அந்த முடிவு இவ்வளவு சிறப்பான அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கவில்லை.

இந்தப் படத்தை மீரா கதிரவனைத் தவிர வேறு யாருடைய இயக்கத்திலும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவர் அனைவரையும் சமமாக நடத்தும் விதத்தையும் நேரில் பார்த்திருக்கிறேன்.

படத்தின் வெற்றிக்கும் பாராட்டுகளுக்கும் காரணமான இயக்குநர் மீரா கதிரவன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் மீரா கதிரவன் :

படம் வெளியான பிறகு இயக்குநர் ராம் குறைந்தது 3 மாதங்களுக்குப் பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டிருப்பீர்கள் என்று சொன்னார்.

இன்றுவரை உலகம் முழுவதும் இப்படத்துக்குப் பாராட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், உங்கள் அனைவரின் அன்புதான்.

இதற்கு முன்பு எழுத்தாளர்கள், மகளிர் அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் சாதி, மதங்களைக் கடந்து செயல்படும் அமைப்புகள் இப்படத்தைப் பாராட்டியுள்ளன.

இப்போது தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து ‘ஹபீபி’ படத்தைப் பாராட்டுவது தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கிறேன்.

தமிழ் சினிமாவுக்கு 110 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தனித்துவமான மொழியும் வாழ்வியலும் இருக்கின்றன.

கொங்கு மக்களின் வாழ்க்கை, கரிசல் நிலத்தின் வாழ்க்கை, வடசென்னையின் வாழ்க்கை எனப் பல்வேறு கதைகள் திரையில் வந்துள்ளன.

அதுபோல, இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றினாலும் தமிழையே தாய்மொழியாகக் கொண்டு வாழும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கையைப் பேசும் திரைப்படம்தான் ‘ஹபீபி’.

இத்தகைய கதையை இயக்குவதற்கு நான் ஒரு கருவியாக இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். அதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.

இஸ்லாமிய வாழ்வியலை மையமாகக் கொண்ட திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு சுமார் 20 ஆண்டுகளாக இருந்தது. அந்தக் கனவைச் சாத்தியப்படுத்தியவர் அமீன்தான். அவர் இல்லையென்றால் ‘ஹபீபி’ இந்த மேடையை அடைந்திருக்காது.

பத்திரிகையாளரும் இயக்குநருமான கோடங்கி:

‘ஹபீபி’ போன்ற படைப்புகளை நாம் எந்த அளவுக்கு உயர்த்திப் பிடிக்கிறோம் என்பது முக்கியம். இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் மீரா கதிரவன் சொல்லியிருப்பது அன்பு.

அன்புக்கு மதம் கிடையாது, ஜாதி கிடையாது, மொழி கிடையாது. ஆனால் அந்த அன்பு வெற்றி பெறுவதற்குப் பல நேரங்களில் அதிகமான போராட்டங்கள் தேவைப்படுகின்றன.

ஒவ்வொரு காட்சியிலும் இயக்குநரின் நோக்கத்தையும் உழைப்பையும் உணர முடிகிறது.

ஒரு படத்தைத் தயாரிப்பவர், இயக்குநர், நடிகர்கள் ஆகியோர் நல்ல படைப்பைக் கொடுப்பதற்காக எவ்வளவு போராடுகிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

நானும் பத்திரிகையாளராக 30 ஆண்டுகளாகப் பணியாற்றியிருக்கிறேன்; படங்களைத் தயாரித்து, இயக்கியும் இருக்கிறேன்.

ஒரு படம் பாதியில் நின்றுவிட்டால் தயாரிப்பாளருக்கு ஏற்படும் வலியும், ஒரு நல்ல படைப்பை மக்களிடம் கொண்டு சேர்க்க இயக்குநர் படும் வேதனையும் எனக்குத் தெரியும்.

இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா தனது கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கும் விதம் மிகவும் பாராட்டுக்குரியது. இயக்குநரின் பார்வையைப் புரிந்துகொண்டு அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

நல்ல திரைப்படங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தால்தான் தொடர்ந்து இதுபோன்ற படங்களை உருவாக்கும் உற்சாகம் கிடைக்கும். கமர்ஷியல் வெற்றி முக்கியம்தான்; அதே நேரத்தில் உணர்வுபூர்வமான, அழகான படைப்புகளையும் நாம் கொண்டாட வேண்டும்.

தயாரிப்பாளர் சாகுல் ஹமீத்:

இன்று தமிழ் சினிமா ஒரு சவாலான சூழலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. மலையாள சினிமா நமக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறது.

மொழி தெரியாதவர்களும் ஓடிடி தளங்கள் வழியாகப் படங்களைப் பார்த்து, அவற்றில் சொல்லப்படும் கருத்துகளைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறார்கள்.

சிறிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்கள்கூட மிகச் சிறந்த கருத்துகளை உலகளவில் கொண்டு சேர்க்க முடியும் என்பதற்கு அது சான்றாக இருக்கிறது.

எங்களுடைய முதல் திரைப்படம் உலகளவில் பல விருதுகளைப் பெற்றது. அதன் மூலம் கேன்ஸ் திரைப்பட விழாவிலிருந்தும் அழைப்பு கிடைத்தது. அந்த அனுபவம் எனக்குப் புதிய உலகத்தை அறிமுகப்படுத்தியது.

‘ஹபீபி’ சாதாரண படைப்பல்ல. இயக்குநர் மீரா கதிரவனின் நீண்டகாலக் கனவு. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக அவர் இந்தப் படத்திற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார்.

அவருடன் பயணித்த அனுபவத்தில், இந்தப் படைப்பை உருவாக்குவதற்காக அவர் எவ்வளவு உழைத்தார் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன்.

அவர் எப்போது ஓய்வெடுக்கிறார் என்றே கேட்கும் அளவுக்கு அவரது உழைப்பு இருந்தது. அத்தகைய அர்ப்பணிப்பின் விளைவாக இன்று ஒரு சிறந்த படைப்பை நம்மால் கொண்டாட முடிகிறது.

கில்ட் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சக்கரவர்த்தி:

இஸ்லாமியர்களைப் பற்றிய தவறான பிம்பங்களைத் தாண்டி, அவர்களின் உண்மையான வாழ்வியலையும் அன்பையும் மனிதநேயத்தையும் இந்தப் படம் உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கிறது.

நாம் அனைவரும் மத வேறுபாடுகளைக் கடந்து சகோதரர்களாகவும் தமிழர்களாகவும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதையே இந்தப் படம் உணர்த்துகிறது.