Take a fresh look at your lifestyle.

தாய் நிலம் – பாராட்டுக்குரிய படம்!

டாக்டர் அமர் ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்க, நேஹா அமர், பாலா சிங், பத்மஜா அமர், நிமிஷா நம்பியார் நடிப்பில் அபிலாஷ் ஜி தேவன் எழுதி இயக்கி இருக்கும் படம்.

நேனி என்டர்டைன்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பாக தயாரித்து இருப்பவரும் அவரே.

உலகம் எங்கும் இல்லாத அளவுக்கு கேவலமான போர் முறைகளால், இலங்கையில் சொந்த மண்ணில் வாழ வழியில்லாது போன ஈழத்தமிழர் ஒருவரும் (அமர் ராமச்சந்திரன்), அவரது மகளும் (நேகா அமர் – நிஜத்திலும் மகள்) 2008-ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் அகதிகளாக இறங்குகின்றனர்.

அகதி முகாமுக்கு அவர்கள் அனுப்பப்பட இருந்த சூழலில், ‘இறந்துபோன தனது மனைவி தமிழ்நாட்டுப் பெண்தான்.

எனவே அவளது உறவினர்களிடம் மகளை விட்டுவிட்டு தான் இலங்கை போய்விடுவதாக கூறுகிறார் அந்த அப்பா.

அதாவது இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ, தமிழ்நாட்டு பெண் டாக்டர் ஒருவர் (பத்மஜா அமர்) செஞ்சிலுவை சங்க மருத்துவராக ஈழம் வருகிறார்.

அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்து திருமணமாகி (நிஜத்திலும் பத்மஜா அமர், அமர் ராமச்சந்திரனின் மனைவிதான்.

இதுதவிர இவர்களது மகன் நிஹால் அமரும் ஒரு காட்சியில் நடித்துள்ளார். ஆக, இது ஒரு பக்கா குடும்பப் படம்) குழந்தை பிறந்த நிலையில் போரில் அந்த டாக்டரையும் சிங்களர்கள் கொன்று விடுகின்றனர்.

அதன்படி தன் மனைவியின் சகோதரி அவர் வீட்டுக்குப் போக, அந்த சகோதரியின் கணவன், ”உறவு என்று எல்லாம் வரக் கூடாது” என்று சொல்லிவிட, தென்காசியில் அனாதைகளாக பேருந்துகள் நிற்காத ஒரு பழைய பஸ் நிறுத்த நிழற்குடையில் இருவரும் தஞ்சம் புகுகின்றனர்.

அருகில் ஒரு பெட்டிக்கடை வைத்திருக்கும் நபரும் (மறைந்த பாலாசிங்) சில ஆட்டோ டிரைவர்களும் அவர்களுக்கு முடிந்த வகையில் உதவுகின்றனர்.

ஆட்டோக்களை கழுவும் வேலை தந்தைக்கு கிடைக்கிறது. மகளும் உடன் வேலைகள் செய்கிறாள்.

ஆட்டோவில் ஒரு முறை நூறு ரூபாய் பணம் கிடைக்க, மகள் அதை எடுத்து வர, பிறர் பொருளை எடுப்பது தவறு என்று மகளை, தந்தை கண்டிக்கிறார். வறுமையிலும் நேர்மையாக ஒழுக்கமாக அவர்கள் வாழ்கிறார்கள்.

கொஞ்சம் பணம் சேர்த்து, கடைக்காரர் மற்றும் ஆட்டோ ஓட்டுநரின் உதவியால் ஒரு தள்ளுவண்டி வைத்து காய்கறி வியாபாரம் செய்கிறார் தந்தை.

ஈழத் தமிழர் என்பதால் மக்கள் அவருக்கு உதவியாக அவரிடமே காய்கறி வாங்குகிறார்கள்.

மகளை பள்ளியில் சேர்க்க பெட்டிக்கடைக்காரர் உதவுகிறார். தலைமை ஆசிரியரும் அனுசரணையாக இருக்கிறார்.

மழைக்காலம் நெருங்குவதால் தங்குவதற்கு ஒரு வீடு கட்டாயமாகிறது. வாடகைக்கு வீடு எடுக்க, பணம் தேவைப்படுகிறது.

அகதி என்பதால் அதிக அட்வான்ஸ் தர வேண்டி இருக்கிறது. கடுமையாக உழைக்கிறார் அப்பா.

மகளின் சிறுமி மனசுக்கான சந்தோஷங்களைக் கூட அப்பாவால் நிறைவேற்ற முடியவில்லை. அவள் ஒரு பிரியாணி கேட்க, அதைக் கூட வாங்கி கொடுக்க முடியவில்லை.

அவள் அடம் பிடிக்க, “நீ ஈழத்தில் பிறந்த பெண். சிறுமிகளின் வழக்கமான சந்தோஷங்களுக்கு எல்லாம் ஆசைப்படக் கூடாது” என்று வலி மிகுந்த வார்த்தைகளை சொல்கிறார் அப்பா. அவள் அழுகிறாள்.

“நம் இனம் அழக் கூடாது. அழுதால் நம் இனம் தோற்று விடும்” என்கிறார்.

ஆனால், அவளால் அழாமல் இருக்க முடிந்ததா? என்பதை மனம் கனக்கும் அளவுக்கு சொல்லும் படமே தாய் நிலம்.

பாலா சிங் போன்ற ஓரிருவரைத் தவிர இந்தப் படத்தில் தயாரிப்பாளர் நடிக நடிகையர் தொழில்நுட்பக் கலைஞர்கள் அத்தனை பேரும் மலையாளிகள்.

பொதுவான, வட இந்தியர்களின் தமிழர் துவேஷ உணர்வுக்கு அப்பாற்பட்டு, ஈழம் அமையக் கூடாது என்பதில் வரிந்து கட்டிக்கொண்டு மிக உறுதியாக இருந்த இரண்டு மொழியினங்கள் வங்காளிகளும் மலையாளிகளும்தான்.

சிங்களர்கள் தங்கள் வழி வந்தவர்கள் என்பது வங்காளிகள் எண்ணம்.

தமிழ்நாட்டை தொடர்ந்து ஆக்கிரமிக்க வேண்டும் என்பது மலையாள தேசியத்தின் கால கால ரகசிய அஜெண்டா.

தனி ஈழம் அமைந்தால் தமிழ்நாட்டிலும் நிஜமான மொழி இன உணர்வு வந்துவிடும்.

அது தமிழகத்தை ஆக்கிரமிப்பதில் இருந்து தங்களைத் தடுக்கும் என்பது மலையாளிகளின் பயம். எனவே அவர்களது எதிர்ப்பு வங்காளிகளை விட அதிகமாக இருந்தது.

வட இந்தியாவையே தமிழர்களுக்கு எதிராக திருப்பும் வேலையை பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் செய்ய, மலையாளிகள் இன்னும் தீவிரமாக செயல்பட்டார்கள்.

இந்திய வெளியுறவுச் செயலர், பாதுகாப்பு ஆலோசகர் போன்ற பதவிகளில் மலையாளிகள் அமர்ந்தனர்.

ஒரே நேரத்தில் இந்திய மற்றும் இலங்கை அரசுகளின் ராணுவ ஆலோசகர், ஐநா சபையில் பான் கி மூனின் உதவியாளர் அகிரா பதவிகளில் அமர்ந்து இந்தியாவின் பகை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனேயே இந்தியாவுக்கு கள்ளக் காதலை ஏற்படுத்திக் கொடுத்து ஈழப் போராட்டத்தை மலையாளிகள் வீழ்த்தினர்.

அரசியல் சதுரங்க விளையாட்டில் ஈழம் அழிக்கப்பட்டதற்கான முக்கிய பங்கு மலையாளிகளுடையதுதான். (தமிழக திராவிடிய, அரசியல்வாதிகள் அடுத்த இடத்தில்)

ஈழம் அழிந்தும் மலையாளிகளின் கோபம் அடங்கவில்லை. மலையாளப் படங்களில் இந்தியத் தமிழர்களை மட்டுமல்லாது ஈழத் தமிழர்களையும் கேலி செய்வார்கள்.

ஒரு மலையாளப் படத்தில் நாய்க்குட்டி ஒன்றுக்கு பிரபாகரன் என்று பெயர் வைக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்தவர்கள் மலையாள சினிமாக்காரர்கள்.

அப்படிப்பட்ட மலையாள சினிமா உலகில் இருந்து வரும் டாக்டர் அமர் ராமச்சந்திரன், ஈழத் தமிழர் வாழ்வின் அவலங்களை இப்படி நேர்மையாகப் பதிவு செய்திருப்பது அருமை. சிறப்பு.

அதுவும் தனி ஈழத்துக்கு தாயாகத் துணை நின்ற எம்.ஜி.ராமச்சந்திரனின் பெயரிலேயே இவரது பெயரும் இருப்பது மிகப் பொருத்தம்.

வாழ்த்துகள்… பாராட்டுகள்.. நன்றிகள் டாக்டர் அமர் ராமச்சந்திரன், பத்மஜா அமர் மற்றும் நேஹா அமர்!

கருத்தியல் ரீதியாக நல்ல படம். படத்தை முடித்த விதம் அபாரம்.

அரிசியல் சதிகள்.. சிங்கள ராணுவ காட்டுமிராண்டித்தனம். போரில் யார் பக்கம் நியாயம்… இவை பற்றி (சென்சார் விதிகளுக்கு உட்பட்ட அளவில்கூட) ஒரு வார்த்தை கூட இல்லை என்பது வருத்தம்தான் என்றாலும் கூட, போரால் பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் அவல வாழ்வை வலியை படம் நன்றாகவே கடத்துகிறது.

“நீ ஈழத்தில் பிறந்த பெண். சிறுமிகளின் வழக்கமான சந்தோஷங்களுக்கு எல்லாம் ஆசைப்படக் கூடாது”, “நம் இனம் அழக் கூடாது. அழுதால் நம் இனம் தோற்று விடும்” போன்ற வசனங்கள் உண்மையின் பிரதிபலிப்பாக இருக்கின்றன.

பாராட்டுகள் இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன்.

ஒரு வாத்தியார், ஒரு மாணவியை வைத்து ஒரு பள்ளிக்கூட காட்சி எடுத்தது எல்லாம் வேற லெவல்.

காய்கறி விற்கும்போது அப்பாவும் மகளும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்யும் காட்சி அத்திப் பூ காட்சி என்று சொல்லலாம். மலையாளிகளுக்குப் பிடித்த மாதிரி அத்தப் பூ காட்சி என்றும் சொல்லலாம்.

கேரக்டரை உள்வாங்கி மிக அருமையாக நடித்துள்ளார் சிறுமியாக நடிக்கும் நேஹா அமர். கடைசிக் காட்சிகளில் மிக சிறப்பு. வாழ்த்துகள் மோளே.

தந்தையாக அமர் ராமச்சந்திரன் சிறப்பான நடிப்பு. ஈழத் தமிழ் என்று நினைத்துக் கொண்டு சில இடங்களில் மலையாளம் பேசி இருப்பதை தவிர்த்து இருக்கலாம்.

பெட்டிக் கடைக்காரர் கேரக்டரில் மிக இயல்பாக அற்புதமாக நடித்திருக்கிறார் மறைந்த பாலா சிங்.

ஜஸ்ட் லைக் தட் நடித்து விட்டுப் போயிருக்கிறார் பத்மஜா அமர்.

நிமிஷா நம்பியார், தீபக், நிஹால், குரு தட்சிணா ஆகியோரும் இயல்பாக நடித்துள்ளார்.

மலையாள இசையமைப்பாளர் அவுசப்பச்சன் மிக எளிய இசை கொடுத்துள்ளார். பழனிபாரதி, தாமரை வரிகளை காதால் கேட்கும்படி செய்துள்ளார்.

ஆகாயம் மேலே பாடல் வரிகளை படத்தின் பலமாக உருவாக்கிக் கொடுத்துள்ளார் தாமரை.

அவுசப்பச்சன் இதற்கு முன்பே ரூட் நம்பர் 17 என்ற தமிழ்ப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடித்த அந்தப் படத்தைத் தயாரித்ததும் இதே அமர் ராமச்சந்திரன்தான். இயக்குநர் இதே அபிலாஷ் ஜி தேவன்தான்.

2023-ம் ஆண்டு டிசம்பரில் வெளியான படம் அது. அந்தப் படத்தில் அமர் ராமச்சந்திரனின் மகனான நிஹால் அமர் நடித்து இருப்பார். (மேற்படி ரூட் நம்பர் 17 க்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்ட படம்தான் இந்த ‘தாய் நிலம்’)

பிரசாந்த் பிரணவத்தின் ஒளிப்பதிவு காட்சிக்குரிய எளிமை மற்றும் இருண்மையை உணர வைக்கிறது அருமை.

இரண்டாம் பகுதியில் இடையில் போதுமான காட்சிகள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார் எடிட்டர் டீஜோ பி வர்கீஸ்.

ஈழத் தமிழர்களுக்கு பல சமயங்களில் தமிழ்ப் பொதுமக்கள் உதவாமல் போனதற்கு காரணம் உண்டு.

பர்மா உள்ளிட்ட மற்ற நாட்டு அகதிகளுக்கு எல்லா சலுகைகளையும் கொடுத்து விட்டு, தமிழர் துவேஷ உணர்வு காரணமாக ஈழத் தமிழர்களை மட்டும் இரண்டாம் தரமாக நடத்திய மத்திய அரசு மற்றும் அதற்குத் துணை போன மாநில அரசுகள் இவற்றின் கடுமையான குணம்தான்.

எனவே, அப்பாவையும் மகளையும் உறவுக்காரர் ஏற்காமல் விட்டதை அவர் ஏதோ தட்டிக் கழிப்பது போல காட்டாமல் மக்களின் பயம்தான் உதவி செய்யாததற்கு காரணம் என்று நேர்மையாக சொல்லி இருக்கலாம்.

ஆனாலும் பரவாயில்லை, மலையாளப் படைப்பாளிகள் இலங்கை விஷயத்தில் இவ்வளவு நேர்மையாக படம் எடுத்ததே ஒரு மாபெரும் விஷயம்.

ஆரம்பத்தில் வரும் போர் குறித்த சீஜி காட்சிகள் வீடியோ கேம் மாதிரி இருக்கின்றன. கடற்கரை மற்றும் ஹோட்டல் காட்சிகளில் நடித்தவர்கள் நடிப்பும் எடுக்கப்பட்ட விதமும் படு மோசம்.

ஓட்டல் காட்சியில் அவ்வளவு பெரிய வசனம் பேசும் ஹோட்டல் முதலாளிக்கு ஒரு குளோசப் கூட இல்லை.

பாலா சிங் நடிக்கும் ஒரு காட்சியிலேயே அவர் வசனத்தை தவறான டைமிங்கில் பேச ஆரம்பிப்பது அப்படியே பதிவாகி இருக்கிறது.

அப்பா மகளுக்கு கதை சொல்லும் காட்சியில் ‘ஈழப் போர் ராஜாக்கள் சண்டையால் விளைந்த ஒன்று. எங்களுக்கு ராஜாக்களும் வேண்டாம் போரும் வேண்டாம்’ என்கிறார். மேலோட்டமாக அது ராஜபக்ஷேவை சொல்வது போல இருந்தாலும் பிரபாகரனையும் குறிக்கிறது.

தாய்நிலம் படக் குழுவுக்கு ஒரு வார்த்தை. அது ராஜாக்கள் சண்டை அல்ல.

ராஜாக்கள் காலம் தொட்டு அறிவு, உழைப்பு, திறமை இவற்றால் ஓகோ-வென்று வாழ்ந்த இனத்தை, வங்காளத்தில் இருந்து இலங்கைத் தீவுக்கு பிழைப்பு தேடி ஒதுங்கிய ஒரு நாடோடிக் கூட்டம்.

நம்ப வைத்து கழுத்தறுத்து, சூழ்ச்சி செய்து தான் வளர்ந்து அதிகாரத்தை பிடித்து முற்றிலுமாக ஒழிக்க முயன்றபோது மக்களைக் காக்க எழுந்த ஒரு மாபெரும் தலைவன் செய்த போர் அது.

நெறியற்ற ஒரு கூட்டத்துக்கும் உரிமைக்குப் போராடிய ஓர் இனத்துக்கும் நடந்த போர்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள “ஆகாயம் மேலே” பாடலுக்காக பாடலாசிரியர் தாமரையும் பின்னணி பாடிய வர்ஷா ரஞ்சித்தும் 2020 ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்று இருக்கிறார்கள்.

கனடா, பெல்ஜியம், ஸ்வீடன் நாடுகளில் சில விருதுகளும் இசை மற்றும் அறிமுக இயக்கத்துக்காக இந்தப் படம் பெற்றிருக்கிறது.

தாய் நிலம்… குறைகளும் சில உள்ளடிகளும் இருந்தாலும், பாராட்டுக்குரிய படம்.

– சு.செந்தில் குமரன்