பாரதிராஜாவின் அசத்தலான அறிமுகம் ‘16 வயதினிலே’. அவரை மண்ணின் இயக்குநரென ஆணித்தரமாக நிரூபித்த படம் இது. தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஸ்டூடியோ தாண்டி நடத்தப்பட்ட முழு திரைப்படம் இதுதான்.
கமல்ஹாசன் என்ற ஸ்டைலான அழகனை கோவணத்துடனும் வெற்றிலைச் சாறு ஒழுகிய வாயுடனும் காலை இழுத்து நடக்கும் சப்பாணியாக காட்டிய திறமை பாரதிராஜாவுக்கே உரித்தானது.
ரஜினிகாந்தின் பரட்டைத்தனமான கிராமத்து பற்றவைப்பை ‘இதெப்படி இருக்கு’ என்றுதான் பேசிக்கொண்டார்கள் அப்போது. மயிலு இந்திக்குச் சென்று கனவுக் கன்னி ஆனதெல்லாம் இந்தப் படம் செய்த மாயம்தான்.
இதன் ரீமேக்தான் ஸ்ரீதேவி இந்தியில் நாயகியாக நடித்த முதல் படம். குருவம்மா காந்திமதி, கூத்து கவுண்டமணி என படத்தில் நடித்த அனைவருமே பாத்திரமாகவே மாறியிருந்தார்கள்.
கலைமணியின் வசனமும், நிவாஸின் ஒளிப்பதிவும் இளையராஜாவின் இசை ராஜ்ஜியமும் படத்தை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றன. நடிகர்களை நம்பாமல் கதாபாத்திரங்களை நம்பிய பாரதிராஜாவுக்கு கிடைத்த வெற்றி அது.
1977 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த், காந்திமதி என்றில்லாமல் சப்பாணி, மயில், பரட்டை, குருவம்மா என்றுதான் டைட்டிலில் பெயர்கள் இடம் பெற்றன.
ஒவ்வொரு வீட்டு கல்யாண வீடுகளிலும் கோயில் கொடைகளிலும் காது குத்து, சடங்கு வீடுகளில் இந்தப் படத்தின் திரைக்கதை திரைசித்திரமாக ஒலித்தது அந்த காலத்தில். அந்தளவுக்கு மக்கள் மனதில் ’16 வயதினிலே’ பெரும் ஈர்ப்பை கொடுத்திருந்தது.
இப்போது நாற்பது, நாற்பத்தைந்து வயதைக் கடந்தவர்கள் இந்தப் படம் தந்த பாதிப்பை கதை கதையாகச் சொல்கிறார்கள்.
இந்தப் படத்தை முதலில் என்.எப்.டி.சி எனும் தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்துக்காகத்தான் கருப்பு வெள்ளையில் இயக்க இருந்தார் பாரதிராஜா. இதற்கு வைக்கப்பட்ட டைட்டில் ‘மயிலு’.
முதலில் ஒப்புக்கொண்ட எம்.எப்.டி.சி, பிறகு என்ன காரணத்தாலோ, பின் வாங்கிவிட்டது. தயாரிக்க மறுத்ததற்கான காரணம் ஏதும் சொல்லப்படவில்லை. அதுவும் ஒருவகையில் நல்லதற்காகத்தான்.
எம்.எப்.டி.சி தயாரித்திருந்தால், அந்தப் படம் ‘மயிலு’வாகவே இருந்திருக்கும். ’16 வயதினிலே’ ஆகியிருக்காது.
இதையடுத்து தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவிடம் கதை சொன்னார் பாரதிராஜா. அவர் சொன்ன மூன்று கதைகளிள் ஒன்று இந்த ‘மயிலு’.
இதை தயாரிக்க முன் வந்தார் அவர். பிறகுதான் இந்தப் படத்தின் டைட்டில் ‘16 வயதினிலே’ என்று மாற்றப்பட்டது.
படம் முடிந்தும் இது ஆர்ட் படம் மாதிரி இருக்கு என்று எந்த விநியோகஸ்தரும் வாங்கவில்லை.
இதனால், சொந்தமாக வெளியிட்டார் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. படம் யாரும் எதிர்பார்க்காத ஹிட்.
தமிழ் சினிமாவின் முக்கிய படங்களின் லிஸ்ட்டில் முதல் 10 இடங்களில் இந்தப் படத்துக்கும் இருக்கிறது ஓரிடம்.
– அலாவுதீன்