Take a fresh look at your lifestyle.

நுகர்வோர் மனநிலையைப் பேசும் குறும்படம்!

டி. விக்னேஷ் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள கஸ்டமர் (CUSTOMER) குறும்படம், நவீன விளம்பர உலகமும் மார்க்கெட்டிங் தந்திரங்களும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இப்படத்தில் பவித்ரா ஜனனி, அருண், ஸ்ரீதர் சந்திரா மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

“ஒரு பொருளை நீங்கள் வாங்குவதில்லை; அந்தப் பொருள் தான் உங்களை வாங்குகிறது” (You don’t buy a product, product buys you) என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

கதைச் சுருக்கம் :

தேவி – கணவர் மற்றும் மகனுடன் வாழும் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பப் பெண். தினமும் வேலை, குடும்பப் பொறுப்பு என ஓடிக்கொண்டிருக்கும் அவளுக்கு, தன் தோற்றத்தைப் பற்றி பெரிதாக கவலை இல்லை.

ஆனால், தொடர்ந்து அவள் கண்முன்னே தோன்றும் முடி வளர்க்கும் எண்ணெயின் விளம்பரங்கள், அவளுக்குள் இருந்த ஒரு சிறிய குறையை பெரிதாக்கத் தொடங்குகின்றன.

சுற்றியிருப்பவர்களின் வார்த்தைகள், சமூகத்தின் பார்வை, குறிப்பாக தன் மகனின் எதிர்பார்ப்பு – இவை அனைத்தும் சேர்த்து, தேவியின் மனதில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

ஆனால், தேவி அந்த எண்ணெயை வாங்குவது வெறும் ஒரு பொருளை வாங்குவது அல்ல; ஒரு மார்க்கெட்டர் அவளுடைய மனதில் உருவாக்கிய தேவையை வாங்குகிறாள்.

இதற்குப் பின்னால் இருக்கும் மார்க்கெட்டர் விக்னேஷ், மனிதர்களின் ஆசை, பயம், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றை கவனித்து, அதையே விற்பனையாக மாற்றுகிறான்.

அவனது பார்வையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு ‘Customer’. தேவி இறுதியில் அந்த எண்ணெயை வாங்குவாளா இல்லையா என்பதுதான் இப்படத்தின் மீதிக் கதை.

கிரிஸ் ஸ்ரீநாத் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தக் குறும்படம் விஷ்ணு டாக்கீஸ் யூடியூப் தளத்தில்  வெளியாகியுள்ளது.