‘ஜமா’ படப் புகழ் பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன், சேத்தன், ரோஜா செல்வமணி, பரிதாபங்கள் கோபி, செல் முருகன், நிகிலா சங்கர், இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி நடிப்பில் பாரி இளவழகன் எழுதி இயக்கி இருக்கும் படம் ‘அன்பே டயானா’.
நியோ கேசில் கிரியேஷன்ஸ், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், இரா என்டர்டைன்மெண்ட் சார்பில் சத்யா கரிகாலன், யுவராஜ் கணேசன், இயக்குனர் இரா. சரவணன் ஆகியோரின் தயாரிப்பு.
தமிழ் மக்களோடு, தெலுங்கு பேசுவோர், ஆங்கிலோ இந்தியர்கள் (மற்றும் பல மொழியினர்) கலந்து வாழும் பெரம்பூர் பகுதி.
அங்கு வசிக்கும் ரயில்வே ஊழியர் சிருமாமில்ல ஆதிநாராயண பாஸ்கர் – சரளா (சேத்தன் – ரோஜா செல்வமணி) தம்பதியின் மகள் சத்யவதி (இஸ்மத் பானு).
மூத்த மகன் சிருமாமில்ல சீதா கிருஷ்ணா சுருக்கமாக – சி.எஸ்.கே (பாரி இளவழகன்) இளைய மகன் சிருமாமில்ல சிரஞ்சீவி சங்கர் (சுதர்சன் காந்தி).
வீட்டில் மீனாட்சி ஆட்சிதான். ‘நடராஜர்’ குடித்துவிட்டு ஒற்றைக் காலில் ‘ஆடுபவர்’.
சாதி, மதம் உறவு இவைதான் சரளாவுக்கு முக்கியம். சாதி சங்கத்தில் முக்கியமான புள்ளி வேறு.

மகள் கணவரோடு கோபித்துக் கொண்டு தனது மகளோடு அம்மா வீட்டில் இருக்க, இளைய மகன் நல்ல படிப்பு, வேலை என்று அம்மாவுக்கு அடங்கிய பிள்ளையாக இருக்க, சரியான வேலை அமையாத மூத்த மகனுக்கு மேஜிக் கோன்சால்வ்ஸ் (ரம்யா ரங்கநாதன்) என்ற ஆங்கிலோ இந்தியப் பெண் மீது பள்ளிக் காலம் முதலே காதல்.
பள்ளிக் காலத்தில் காதலைச் சொல்ல முயன்று சொல்ல முடியாமல் விட்ட காதல் இன்றும் அவனுக்குள் தொடர்கிறது. அவளுக்கும் அது சற்றே தெரிகிறது.
அவளுக்குப் பிடித்தபடி எல்லாம் சி.எஸ்.கே நடந்து கொள்கிறான். அவளுக்கும் அவன் மீது காதல் வரும்போது, அவளது தோழியான ஆங்கிலோ இந்தியப் பெண்ணை ஒரு தமிழ் பையன் காதலித்து ஏமாற்றி விட,
மேஜிக்கிடம் அந்தத் தோழி “தமிழ்ப் பசங்களே வேண்டாம். தவிர நம்ம கல்ச்சருக்கும் அவர்களுக்கும் செட் ஆகாது” என்று கூறிக் குழப்பி விடுகிறாள்.
எனினும் மேஜிக் ஒரு நிலையில் தெளிந்து சி.எஸ்.கே தான் வேண்டும் என்ற முடிவுக்கு வரும்போது, “ஆங்கிலோ இந்திய பெண்கள் குட்டைப் பாவாடை போட்டுக் கொண்டு எல்லா இடத்திலும் ஆடுவார்கள். மற்ற ஆண்களை எல்லாம் கட்டிப் பிடிப்பார்கள். அடிக்கடி பார்ட்டி பண்ணுவார்கள்.
உங்கள் வீடு போல புரட்டாசி மாசம் பார்க்காமல் எல்லா நாட்களும் மாட்டுக் கறியும் வெண்பன்றிக் கறியும் சாப்பிடுவார்கள்” என்று பெங்களூர் பாபா (பரிதாபங்கள் கோபி) உள்ளிட்ட நண்பர்கள் சி.எஸ்.கே- வைக் குழப்ப, மேஜிக்கை தவிர்க்கிறான் சி.எஸ்.கே.
இந்த நிலையில் தனது தம்பி மங்கபாபுவின் (செல் முருகன்) மகளான தனிஷாவை (நிகிலா சங்கர்) சி.எஸ்.கே.வுக்கு சரளா நிச்சயம் செய்ய, மேஜிக்கின் காதல் என்ன ஆனது? என்பதே ‘அன்பே டயானா’.
‘ஜமா’ என்ற வித்தியாசமான படத்தின் மூலம், பலரால் யோசிக்கக் கூட முடியாத அற்புதமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய பாரி இளவழகன் எழுதி இயக்கி நடித்திருக்கும் படம்.
வித்தியாசமான கதைப் பின்னணி பிடித்திருக்கிறார் பாரி. பயன்படுத்தப்படாத ரயில்வே லைன், வண்ணத்துப் பூச்சிகள் பறக்கும் காதல் காட்சிகள், சில இடங்களில் அர்த்தமுள்ள சைலன்ட் ஷாட்கள் என்று இயக்குநராக முத்திரை பதிக்கிறார்.
நடிப்பிலும் ஓகே தான். படத்தில் தனது பெயரைப் போடும் இடத்தில் எழுத்து – இயக்கம் – நடிப்பு என்று நடிப்பைத்தான் கடைசியாக போட்டுக் கொள்கிறார்.
சிருமாமில்ல ஆதிநாராயண பாஸ்கர் கேரக்டரை சிறப்பாக எழுதி இருக்கிறார்.
பெற்றோரின் சாதிப் பற்று காரணமாக காதலித்தவளை கல்யாணம் செய்துகொள்ள முடியாமல் சரளாவை கல்யாணம் செய்தது; அதனால் மகனின் காதல் திருமணத்துக்கு உதவுவது;
அதே நேரம் மனைவி மீது பாசம், சில சமயம் எகிறுவது போல நடிப்பது; ஒரு நிலையில் நிஜமாகவே எகிறுவது என்று, அந்த கேரக்டர் வடிவமைப்பு அருமை.

‘அன்பே வா’ படத்தில் வாலி எழுதிய once a papa met a mama in a little tourist bus பாடலைப் பயன்படுத்தியிருப்பியது நைஸ்.
அதே போல ‘வசந்த மாளிகை’ படத்தின் தெலுங்கு மூலமான ‘பிரேமா நகர்’ படத்தில் இடம் பெற்ற (‘வசந்த மாளிகை’ படத்தில் வரும் “இரண்டு மனம் வேண்டும்” பாடல் சூழலில் அமைந்த) “மனசுகதியிந்தே” பாடலையும் பயன்படுத்தி இருக்கிறார் பாரி.
பெரம்பூரின் நிலவியல் பின்னணியில் நடக்கும் கதை. பாரி இளவழகன் பயன்படுத்தி இருக்கும் லொக்கேஷன்களும், ஷெல்லி கேலிஸ்ட்டின் ஒளிப்பதிவும் அதற்கு ஓரளவு நியாயம் செய்கின்றன.
ஆனால், இன்னும் அதிக நியாயம் செய்திருக்க வேண்டும். (பெரம்பூரின் நிஜப் பெயர் பிரம்பூர். அதை வசனத்தில் எங்காவது கொண்டு வந்திருக்கலாம்).
படம் முழுக்கவே ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக இருக்கிறது.
பரத் சங்கரின் பின்னணி இசை ஓகே ராகம். (எழுத்துப் பிழை அல்ல). இப்போது வரும் எல்லாப் படங்களிலும் காமெடிக்கு எல்லோரும் ஒரே மாதிரி ரீரிக்கார்டிங் செய்கிறார்கள்.
”சிரிக்கலன்னா அடிப்பேன்” என்கிற மாதிரியே இருக்கிறது. காமெடிக்கு இசை உதவலாம். ஆனால், இசையால் மட்டுமே காமெடியை எல்லா சமயத்திலும் கொண்டு வர முடியாது.
கதை, சூழல், வசனம், நடிப்பு, ஏன் இயக்குநரின் ஷாட்கள் இவை மூலமே காமெடி உருவாகும்.
இந்தப் படத்தில் கூட பெரிய கதாபாத்திரங்கள் செய்த காமெடியை விட, பத்திரிக்கை தர வரும் ஒரு சீன் கதாபாத்திரம் பேசிய வசனத்துக்குத்தான் தியேட்டரே குலுங்கியது.
மேஜிக் கதாபாத்திரத்தில் அழகான நாயகி ரம்யா ரங்கநாதன். பிரேமுக்குள் இன்னும் அழகாக இருப்பது அவரது பலம். நடிப்பிலும் குறை வைக்கவில்லை. படத்தில் இவரது மேஜிக் ஒர்க் அவுட் ஆகிறது.
பாஸ்கர் கேரக்டரில் அசத்தி இருக்கிறார் சேத்தன். பண்பட்ட நடிப்பு.
ரோஜாவின் மீடியா இமேஜ் அவரது கேரக்டருக்கு நியாயம் செய்கிறது.

செல் முருகனுக்கு லைஃப் டைம் கேரக்டர். அசத்தி இருக்கிறார்.
பரிதாபங்கள் கோபியின் இமேஜூம் நடிப்பும் சிறப்பு. ஆனால் காமெடி?
நமக்கு பிடிக்காதவர்கள் யாராவது கிண்டல் செய்தால், அதை பெரிய ஜோக்காக எண்ணிக் கொண்டு விழுந்து விழுந்து சிரிப்போம்.
பரிதாபங்கள் நிகழ்ச்சியில் அவரது காமெடி ஒர்க் அவுட் ஆகக் காரணம் அவர் அரசியல்வாதிகளை கிண்டல் செய்ததுதான்.
ஆனால், நமக்கு பிடித்தவர்களைக் கிண்டல் செய்து அதையும் ரசிக்க வைப்பதுதான் சினிமா. கோபி இதை மனதில் கொள்ள வேண்டும்.
ஒரு முக்கியமான காட்சியில் சபாஷ் போட வைக்கிறார் இஸ்மத் பானு.
நிகிலா சங்கர் சிறப்பு. ஆனால், அந்த முகமும் நடிப்பும் பெண் பார்க்கும் காட்சியிலேயே யூகிக்க வைத்து விட்டது. ஆனால் அடுத்த ட்விஸ்ட் யூகிக்க முடியல. அருமை.
சுதர்சன் காந்தி சிறப்பு.
கதாநாயகி ஆங்கிலோ இந்தியப் பெண் என்பது நல்ல பின்னணி. ஆனால், யதார்த்தத்தில் சென்னையில் ஆங்கிலோ இந்தியக் குடும்பங்கள் தனித்துத் தெரிவது இல்லாமல் போய், இருபது வருடங்கள் ஆகி விட்டது.
ஒரு காலத்தில் பெரம்பூரில் ஆங்கிலோ-இந்தியர்கள் நிறைய இருந்தார்கள். இப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான, குறிப்பாக முதியவர்கள் மட்டுமே வசித்து வருகின்றனர்.
அவர்களும் மாதவரம், அயனாவரம் போன்ற பகுதிகளில் ஆங்காங்கே சிதறி வாழ்கிறார்கள்.
பலரும் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு அதிகளவில் குடியேறிவிட்டனர்.

முன்பு ஆங்கிலோ-இந்தியர்கள் பெரம்பூர் இரயில்வே (Loco Works, ICF) வேலைகளில் பரவலாக இருந்தனர். (இதை படத்தில் காட்டி இருப்பது சிறப்பு)
ஆக பெரம்பூரில் இருக்கும் ஆங்கிலோ இந்தியக் குடும்பங்கள் என்பது, இப்போது பெரம்பூர்வாசிகளுக்கே கனெக்ட் ஆகுமா என்ற கேள்வி வருகிறது.
மேஜிக் மீது சி.எஸ்.கேவுக்கு வருவது கண்டதும் காதல் அல்ல. பள்ளி வயதில் இருந்தே மேஜிக்கை காதலிக்கும் – அவள் பின்னாலேயே போகும் – சி.எஸ்.கே.வுக்கு அவர்களது கலாச்சாரப் பழக்கம் முன்பே தெரிந்திருக்குமே.
அப்படி இருக்க அவள் காதலை சொன்ன பிறகு, அவன் அதை எல்லாம் நினைத்து பின் வாங்குவது கேரக்டர் அசாசினேஷன்.
பல காட்சிகள் நோக்கத்துக்கு வெளியே போகின்றன. அல்லது தேவைக்கு மேல் நீள்கின்றன. பார்த்தாவின் படத்தொகுப்பு இன்னும் கொஞ்சம் கச்சிதமாக இருந்திருக்கலாம்.
‘நீ மாவுக்கடை வைக்க உன் சாதிக்காரன் உதவி பண்ணி இருக்கலாம். ஆனா உன் கிட்ட மாவு வாங்கினவன் எல்லாம் உன் சாதிக்காரனா?’ என்று ஒரு வசனம்.
மாவு வாங்கினவன் யாரும் சும்மா வாங்கி இருக்க மாட்டான். காசுக்குத்தான் வாங்கி இருப்பான்.
அதுபோல பஞ்சாயத்து சீனிலும் சரளாவை சாதி கை விட்டது என்பதை இன்னும் ஷார்ப்பாக சொல்லி இருக்க வேண்டும்.
அதில் ஏகப்பட்ட சமாளிஃபிகேஷன்கள். வீட்டுக்கு வந்ததும் பாஸ்கரே சரளா பக்கம்தான் தப்பு என்கிறார். அப்போ என்ன செய்வது?
தவறான விஷயங்களுக்கு லாஜிக் சொல்கிறேன் என்று யோசிக்கக் கூடாது. சரளா கேரக்டர் என்ன நீதிக்குத் தலைவணங்கு எம்.ஜி.ஆரா? காரணம் சொல்லாவிட்டால் எந்தக் குடி மூழ்கி விடும்?
‘சரளா சாதி வெறி பிடித்தவர். அவருக்கு அவர் சாதி, மதம்தான் முக்கியம்’ என்று முடித்துவிட வேண்டும். அதற்கு எதற்கு காரண காரியம்?
அவனவன் சோஷியல் மீடியாவிலும் சினிமாவிலுமே இப்பவும் சாதி வளர்க்கிறான்.
அதேபோல அக்கா சொல்வதைக் கேட்டு சி.எஸ்.கே அறிவு பெறுவது எல்லாம் டெம்ப்ளேட். ஒரு கேரக்டர் உணர்த்தப்படுவதை விட உணர்வதே இன்றைய திரைமொழியில் ஒர்க் அவுட் ஆகும்.
ஒரு திரைக்கதையின் முதன்மைக் கதாபாத்திரங்கள் தங்களுக்கு வந்த பிரச்சனையை தாங்களே எப்படி வென்றார்கள் என்பதுதான் தியேட்டரிகலாக பெரிதாகப் பலன் தரும்.

வேறொரு கதாபாத்திரத்தின் வேறொரு செயலால் இவர்கள் பிரச்சனை முடிந்தது என்று கதை சொல்வது ஆடியன்ஸுக்கு முழு திருப்தியைத் தராது.
தண்ணீர் கிடைக்காமல் தவிப்பவரைக் காப்பாற்ற ஒருவன் எப்படி தேடித் தண்ணீர் கொண்டு காப்பாற்றினான் என்பதுதான் சொல்ல வேண்டிய விஷயம்.
அவன் தண்ணீர் தேடிப் போனபோது மழை பெய்து, தாகம் தீர்ந்தது என்று முடித்தால், அப்புறம் தேடிப் போன கேரக்டர் அந்த கதைக்கு எதற்கு?
இப்படிச் சில குறைகள் இருந்தாலும் கலர்புல்லாக, அழகாக, காதல், காமெடி, செண்டிமெண்ட் என்று போகிறது படம்.
மொத்தத்தில் டயானா செழிப்பாகவே இருக்கிறாள். அன்புதான் கொஞ்சம் குறைவாக இருக்கிறது. ஆனாலும் என்ன? வாழ்வதற்குத்தான் அன்பு தேவை. ரசிப்பதற்கு டயானாவே போதும்.
— சு. செந்தில்குமரன்