தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள புத்தம் புதிய ஃபேண்டஸி த்ரில்லர் திரைப்படமான ‘இம்மார்ட்டல்’ (Immortal) படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 23-ல், இப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் எனப் படக்குழுஅறிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக இளம் நடிகை கயாடு லோஹர் நடித்துள்ளார்.
அண்மையில் வெளியான இப்படத்தின் ‘லவ் லவ் காட்டேரி’ என்ற முதல் பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
முழுக்க முழுக்க ரொமான்ஸ், த்ரில்லர் மற்றும் அதிரடி ஃபேண்டஸி கூறுகள் கலந்த ஒரு புதுமையான ஜானரில் இப்படம் உருவாகியுள்ளது.
படத்தின் முழுமையான கதைச் சுருக்கம் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், சுவாரசியமான ஒரு ஒன்லைன் கசிந்துள்ளது.
தனது கனவுக் கன்னியான கயாடு லோஹரிடம் நெருங்கிப் பழக முயலும் நாயகனை, ஒரு அமானுஷ்ய அசுரன் துரத்திப் பயமுறுத்துவதை மையமாகக் கொண்டே இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் டி.எம்.கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு மஹர்ஜன் மற்றும் சுனிதா ஸ்ரேஸ்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
‘சைரன்’, ‘பிளாக்மெயில்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஜி.வி.பிரகாஷின் படத்திற்கு இசையமைக்கிறார் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.
அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ராஜேஷ் எம். படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
கலை இயக்கத்தை சிவா சங்கரும், சண்டைக் காட்சிகளை ஆர்.சக்தி சரவணனும் மிரட்டலாக வடிவமைத்துள்ளனர்.
ஏ.கே பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் அருண்குமார் தனசேகரன் படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்.