அறிவியலின் வளர்ச்சியால் தொடர்ந்து அழிவைச் சந்தித்து வரும் விஷயங்களில் நாடகம் மற்றும் வானொலியைச் சேர்க்கலாம்.
டிவி, செல்போன் மற்றும் சமூக ஊடகங்களின் என்ணிக்கை அதிகரித்து வருவதால் இப்போது வானொலியைக் கேட்க ஆட்கள் இல்லை. அதே நிலைதான் நாடகத்துக்கும்.
முன்பெல்லாம் மாலை நேரங்களில் நாடகங்களைப் பார்க்க பெரும் திரளாக ரசிகர்கள் கூடுவார்கள்.
ஆனால், இப்போது அந்த எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இந்த சூழலில் நாடகத்துக்கும், வானொலிக்கும் ஒரே நேரத்தில் தோள் கொடுத்துள்ளார் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்.
கேரளாவில் வானொலியின் ஆகாசவாணி நடத்தும் நாடகத் திருவிழாவில் 2 நாகடங்களில் வரும் கதாபாத்திரங்களுக்கு தனது குரலைக் கொடுத்திருக்கிறார் மோகன்லால். இதன்மூலம் மிக நீண்ட காலத்துக்குப் பிறகு அவர் வானொலி நாடகத்துக்கு திரும்பியிருக்கிறார்.
திருவனந்தபுரம் மற்றும் கொச்சின் வானொலி நிலையங்களின் நாடகங்களுக்கு அவர் குரல் கொடுத்துள்ளார்.
கேரளாவில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களிலும் மே 10ம் தேதி முதல் 18-ம் தேதிவரை தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு இந்த நாடகங்கள் ஒலிபரப்பாகின்றன. மறுபடியும் அடுத்த நாள் மதியம் 1 மணிக்கு ஒலிபரப்பாகிறது.
இதில் திருவனந்தபுரம் வானொலி நிலையத்தின் நாடகமான ‘தாவீதின் மனமாரு கண்டு’ என்ற நாடகத்தில் அசோகன் என்ற கதாபாத்திரத்துக்கு மோகன்லால் குரல் கொடுத்துள்ளார். இந்த நாடகத்தை ஜெயராஜ் மித்ரா என்பவர் எழுதியுள்ளார்.
திருவனந்தபுரம் வானொலி நிலையத்தின் தலைவரான ரூபி இதுபற்றி கூறும்போது,
“வானொலி நாடகங்களை மக்கள் மீண்டும் கேட்க வைப்பதற்காக இந்த நாடகத் திருவிழா நடத்தப்படுகிறது. கொரோனாவுக்கு முன் எல்லா ஆண்டுகளிலும் இது நடத்தப்பட்டு வந்தது.
ஆனால், கொரோனாவுக்கு பிறகு இது நின்று போனது. இந்த ஆண்டுமுதல் நாங்கள் மீண்டும் இதைத் தொடங்கியுள்ளோம்.
புதிதாக தொடங்குவதால், இதைப் பிரபலப்படுத்த ஒரு நாடகத்தில் நடித்துத் தருமாறு மோகன்லாலை கேட்டுக்கொண்டோம். அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.
நாடகத்தில் நடிப்பதற்கு முன் அதன் மொத்த சவுண்ட் டிராக்கையும் கேட்க விரும்புவதாக சொன்னார். அவர் சொன்னபடி செய்து கொடுத்தோம். அதில் திருப்தியான அவர், நாடகத்தில் நடித்துக் கொடுத்தார்” என்றார்.
நாடகத்தின் இயக்குநர் ஜெயராஜ் மித்ரா கூறும்போது, “இது 60 நிமிடங்கள் ஓடக்கூடிய நாடகம். தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற எந்த பந்தாவையும் அவர் காட்டவில்லை.
ஒவ்வொரு முறையும் வசனத்தைப் பேசிய பிறகு, அதில் மாற்றம் எதையாவது செய்யவேண்டுமா என்று கேட்டார்.
தான் ஒரு நடிகர் என்றும், இயக்குநரின் விருப்பத்தின்படி நடித்துக் கொடுக்க வேண்டியது தனது கடமை என்று சொல்லி, இயக்குநருக்கு முழு திருப்தி கிடைக்கும்வரை பேசி நடித்தார்.
ஒவ்வொரு முறையும் வெவ்வேறு வகையில் அவர் பேசிக் காட்டி, அதில் எனக்கு எது பிடிக்கிறதோ அதை ஏற்றுக்கொள்ளுமாறு சொன்னார்.
இது எங்களுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. இதில் சில சுலோகங்களையும் அவரது கதாபாத்திரம் சொல்லவேண்டி இருந்தது. அவற்றை மனப்பாடம் செய்து அவர் துல்லியமாக பேசினார்” என்றார்.
இதேபோல் கொச்சின் வானொலி நிலையத்துக்காக மற்றொரு நாடகத்திலும் மோகன்லால் நடித்துள்ளார். நாடகக் கலையைக் காக்க ஒவ்வொரு நடிகரும் இதேபோல் முன்வந்தால் நன்றாக இருக்கும்.
– ராதா