நூல் அறிமுகம்:
★இன்றைய தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்களில் சிறப்பானவரும், தமிழ் மொழி, இலக்கியம், சமகால அரசியல், முந்தைய பாடலாசிரியர்கள் பற்றிய விவரங்களை நன்கு அறிந்தவரும், தஞ்சையைச் சேர்ந்த கவிஞர் யுகபாரதி, இதுவரை ஏறத்தாழ 3000 பாடல்களை இயற்றி, தனக்கென தனியான ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார்.
★ஒவ்வொரு பாடல்களையும் – பிரசவத்திற்கு அவதிப்படும் தாய் போலவும் – இண்டர்வியூக்காக தயாராகிச் செல்லும் வேலையில்லா இளைஞனைப் போலவும், அணுகி அதைப் படைத்திருக்கின்றார்.
★அவர் படைத்த பாடல்களிலிருந்து 50 பாடல்களைத் தேர்வு செய்து அவைகள் உருவான பின்னணி பற்றிய சுவாராசிய ஆவணமே இந்த – ஒரு பாட்டு கொஞ்சம் பின்னணி.
இத்தனை பாடல்களை எழுதிய கவிஞர், திரைத்துறையில் கொஞ்சமும் பின்னணியில்லாதவர். அதனாலும் அவரது திறமையை மேலும் மதிக்கத் தோன்றுகிறது.
★ ஒரு திரைப்படப் பாடலாசிரியர், தனது பாடல்களின் உருவாக்கம் பற்றி, இந்த அளவுக்கு இதுவரை யாரும் விவரமாக புத்தக வடிவில் தந்திருப்பார்களா என்பது சந்தேகமே.
கண்ணதாசன், வாலி போன்ற பாடலாசிரியர்களின் பாடல்கள் தோன்றிய பல்வேறு செய்திகள் வந்திருந்தாலும் அவைகளெல்லாம், ஒரு சில பாடலின் துவக்கம் எவ்வாறு அமையப்பெற்றது என்ற செய்திகளாக இருந்தது.
★ கண்ணதாசன் திமுகவிலிருந்து காங்கிரஸ்க்கு கட்சி மாற வேண்டிய நேரத்தில் அவர் எழுதிய பாடல்தான் – “அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி.” சிவகாமியின் மகன் பெருந்தலைவர் காமராஜருக்கு தூது போவதாக அமைந்த பாடல்.
எம்.ஜி.ஆர். குண்டடி பட்ட வேளையில் வாலி எழுதிய பாடல் – “இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு.”
மற்றபடி அந்த பாடல்களின் பல்லவி, சரணங்கள் அமைந்த விவரங்களை எவரும் புத்தகமாக தந்ததில்லை.
★கவிஞர் யுகபாரதி தனது நூலில் – ஒவ்வொரு பாடலின் பல்லவி வரிகளையும், சரணத்திலுள்ள வரிகளையும் அவைகள் உருவானதற்கான காரணங்கள், உரையாடல்கள், உதாரணங்கள், மேற்கோள்கள் இவை அத்தனையையும் விரிவாக தந்துள்ளார்.
அவரது இந்த அனுபவங்கள் புதிய பாடலாசிரியர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் வழிகாட்டியாய் அமைந்துள்ளது.
★ இந்த நூலில் தந்துள்ள 50 பாடல்களின் பின்னணி விவர வரிசையிலிருந்து, மிக பிரபலமான பாடல்களில் சிலவற்றின் பட்டியலைப் பார்த்தாலே, கவிஞர் யுகபாரதியின் வெற்றியின் ரகசியம் புரியும்.
● அன்பாலே அழகாகும் வீடு – பசங்க.
● தாவணி போட்ட தீபாவளி – சண்டக்கோழி.
● கொக்கர கொக்கரக்கோ – கில்லி.
● கனாக் கண்டேனடி – பார்த்திபன் கனவு.
● கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் – சந்திரமுகி.
● எனதுயிரே எனதுயிரே – பீமா.
● என்னங்க சார் உங்க சட்டம் – ஜோக்கர்.
● எப்புட்டு இருக்குது ஆச – சரவணன் இருக்க பயமேன்.
● எள்ளுவய பூக்கலையே – அசுரன்.
● கண்ணம்மா கண்ணம்மா – றெக்க.
● காதல் பிசாசே – ரன்.
● கூடமேல கூட வச்சி – ரம்மி.
● மன்மதராசா மன்மதராசா – திருடா திருடி.
● பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் – ஆனந்தம்.
● ஏ ஆளு மஞ்சனத்தி – கர்ணன்.
★ யுகபாரதியின் முதல் திரைப்பாடலான – “பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்”, ‘ஆனந்தம்’ திரைப்படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் வெளியான பின்னணியை விவரிக்கும்போது,
“என் கொடுப்பினை என்னவெனில், முதல் பாட்டே காசைப் பற்றி எழுதுவதாக அமைந்தது. ஒரு ரூபாயில் தொடங்கிய என் திரை வாழ்க்கை, இன்று கோடிக்கணக்கான இதயங்களை சம்பாதிக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறது”
– என்று தன்நிலை விளக்கம் தந்துள்ளார்.
அவருக்கு கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்து தந்திருந்தாலும் அந்த நிறைவு கிடைத்திருக்காது.
★ சந்திரமுகியில் வெளியான – கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் – வித்யாசாகர் இசையில் ஆஷா போன்ஸ்லே பாடியது.
இந்த பாடலின் ஒலிப்பதிவு நடைபெறுவதற்கு முன்பாக, பாடலாசிரியரை வணங்கி விட்டுத்தான் இந்திப் பாடகர்கள் பாட ஆரம்பிப்பார்கள் என்ற மரபுப்படி, ஆஷா அம்மா யுகபாரதியை வணங்கிய பின் பாட ஆரம்பித்ததையும் –
கண்ணில் ஓர் அழகு, கையில் நூறழகு என்ற பத்தியிலுள்ள ழகர உச்சரிப்பு சரியாக வருவதற்காக, நான்கு மணி நேரம் போராடி விடாமுயற்சியால் அதைப் பாடி நிறைவு செய்தையும் பதிவு செய்துள்ளார்.
இவையெல்லாம் பாடலின் சத்தமும், தொழில் சுத்தமும் எவ்வாறு தேவை என்பதை அறிய முடிகின்றது.
★ இவ்வாறு ஒவ்வொரு பாடலுக்கு பின்னணியான செய்திகளை அறியும்போது – கதைக்கு தேவையானது பாடல்.
அந்தப் பாடலுக்கு பின்னே கதைமட்டுமல்ல, பல கவிதைகள், பல கற்பனைகள், பல கஷ்டங்கள் இன்னும் பல காரணங்கள்…
★ யுகபாரதி – பல்லாங்குழியில் வட்டம் பார்த்தார் – பாடல்கள் புனைந்து பட்டம் ஏற்றார்!
****
ஒரு பாட்டு கொஞ்சம் பின்னணி!
கவிஞர் யுகபாரதி
நேர்நிரை வெளியீடு
பக்கங்கள் – 270
விலை: ரூ. 250/-
– பொ.நாகராஜன். சென்னை.