விமல், நட்டி நட்ராஜ், ஷான்ஷிகா ஸ்ரீ, முனீஸ்காந்த், நரேன், பால சரவணன் நடிப்பில், கேந்திரன் முனியசாமி எழுதி, இயக்கி இருக்கும் படம் ‘வடம்’. மாசாணி புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜசேகர் தயாரிப்பு.
ஜல்லிக்கட்டு அனைவரும் அறிவோம். வடமாடு அல்லது வடம் ஜல்லிக்கட்டு அல்லது வட மஞ்சுவிரட்டு என்று ஒரு விளையாட்டு உண்டு.
அடக்கப்பட வேண்டிய காளை மைதானத்தில் ஒரு நீளமான கயிற்றால் கட்டப்படும். அந்த கயிற்றின் நீளத்தை ஆரமாகக் கொண்டு ஒரு வட்டம் போடப்படும். அந்த வட்டமான பரப்புக்குள் மட்டுமே மாடு சீறிச் சுழன்று சுற்றி வர முடியும்.
அதற்குள் இளைஞர்கள் போய் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் காளையை அடக்க வேண்டும்.
அதாவது இதில் மாடு ஒரு குறிப்பிட்ட வட்ட வடிவ தூரத்துக்கு மேல் வெளியே வர முடியாது.
ஒரு வகையில் வட மஞ்சுவிரட்டு என்பது ஜல்லிக்கட்டுக்கான பயிற்சிக்களம் என்றாலும் சில சமயம் ஜல்லிக்கட்டைவிட படு தீவிரமாக இருப்பதும் உண்டு.
அப்படி, வட மஞ்சு விரட்டுக்கு காளைகள் வளர்ப்பவன் ரத்னவேல் (நட்டி நட்ராஜ்).
அவன் வீட்டில் பிறந்த இரண்டு காளைக் கன்றுக் குட்டிகளில் ஒன்றுக்கு கண் பார்வை பழுதுபட்டு இருக்க, அதை அடிமாடாக விற்கிறான் ரத்னவேல்.
அதை வாங்கி வந்து அதை வட மஞ்சு விரட்டுக்கு பழக்கி, அதற்கு பாண்டி முனி என்று பெயரும் வைத்து, மாபெரும் வட மஞ்சுவிரட்டு காளையாக மாற்றுகிறான் வெற்றிவேல் (விமல்).

அது தனக்கு உரிமையானது என்று ரத்னவேல் சொல்ல, ”நீ கசாப்புக் கடைக்கு அனுப்பியதை நான் வாங்கி வளர்ந்து வட மஞ்சு விரட்டு சிங்கமாக மாற்றி இருக்கிறேன் என்று வெற்றிவேலும் அவனது அப்பா சந்தனவேலும் சொல்ல, பகை! பகை! பகை!.
ஒரு நிலையில் ரத்னவேலுவை வெற்றிவேல் கொன்றதாகக் கைது செய்யப்பட்டு, ஜெயிலில் இருந்து ஒரு வழியாக வெளியே வருகிறான்.
வட மஞ்சுவிரட்டு காளை ஒன்றை வளர்க்கும் ஒரு பெண் (ஷான்ஷிகா ஸ்ரீ) தன் மாட்டை பழக்கச் சொல்லி வெற்றிவேலுவிடம் வருகிறாள். அதுவும் நடக்கிறது.
சந்தன வேலு மீது உள்ள கோபத்தால் வெற்றிவேலுவை கொல்ல ஆள் தேடும் ஒருவன் (மூர்த்தி), அதற்காக சந்தன வேலு குடும்பத்தின் மீது பெரும்பகையோடு உள்ள கர்ணன் என்ற நபரை (மதுசூதன் ராவ்) ஏற்பாடு செய்ய,
வெற்றிவேலை கொலை செய்ய பலரும் முயல அவர்களை எல்லாம் வெற்றிவேல் அடித்து விரட்ட, ஆனால் வெற்றிவேலுக்கு கிடைக்கிறது எதிர்பாராத துரோகக் காத்திக் குத்து.
அது ஏன், எதற்கு, எப்படி? என்ன என்பதே வடம்.

தென் மாவட்ட கிராமம், கவுரவம், விளையாட்டு, அதில் வரும் கோபம், அதோடு மற்ற பர்சனல் விஷயங்கள் கலப்பதால் நடக்கும் நிகழ்வுகள் என்று ஒரு கதம்பச் சோறு கதையைக் கொடுத்து இருக்கிறார்கள்.
இமான் இசை நன்று. ஆனால் பழைய நன்று இல்லை.
காளை மாடு சம்மந்தப்பட்ட காட்சிகளைத் தொகுத்ததில் அட்டெண்டன்ஸ் போடுகிறார்கள் படத் தொகுப்பாளர் சாபு ஜோசப்பும் ஒளிப்பதிவாளர் பிரசன்ன குமாரும்.
விமல், நட்டி நட்ராஜ் கேரக்டருக்கு பொருத்தம். ஷான்ஷிகா ஸ்ரீ லட்சணமான முகம். விமலின் அம்மாவாக வரும் இந்துமதி எல்லா படங்களிலும் நன்றாக நடிக்கிறார்.
தீபா சங்கர், மூர்த்தி கவனிக்க வைக்கிறார்கள்.
முனீஸ் காந்த் கேரக்டரில் முரட்டுக்காளை சுருளிராஜன் எல்லாம் நினைவுக்கு வருகிறார்.
எளிதாக யூகிக்க முடிந்த இடைவேளை கூட ஓகே. ஆனால், அடுத்து அதை சும்மா லெப்ட்ல ஓடிச்சு ரைட்டுல ஒதுக்கி விட்டுப் போய்க்கொண்டே இருப்பது அநியாயம்.
மேக்கிங்கில் பழைய பட பாணி.
கிரிக்கெட், வாலிபால், கபடி, ஜல்லிக்கட்டு இப்படி வட மஞ்சு விரட்டை வைத்தே ஒரு கதை பண்ணி இருக்கலாம்.
ஆனால், பேரு போதும் சோறு வேண்டாம் என்று முடிவு செய்து விட்டார்கள்.
மொத்தத்தில் வடம்… மெல்லிய நூல்.
— சு. செந்தில் குமரன்.