Take a fresh look at your lifestyle.

வித் லவ்: வெற்றிக்கான அத்தனைக் கூறுகளும் உள்ள படம்!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படப் புகழ் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்க, அனஸ்வரா ராஜன், காவ்யா அனில், சரவணன், தேனி முருகன், சச்சின் நாச்சியப்பன், ஹரிஷ் குமார் நடிப்பில் மதன் என்ற அறிமுக இயக்குநர் எழுதி இயக்கி இருக்கும் படம்.

ZION FILMS மற்றும் MRP ENTERTAINMENT சார்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த், பஸிலியான் நசரேத், மகேஷ்ராஜ் பஸிலியான் தயாரித்துள்ளனர்.

அம்மா இறந்துவிட்ட நிலையில் அப்பாவிடம் (தேனி முருகன்) கோபித்துக் கொண்டு இருக்கும் இளைஞனுக்கு (அபிஷன் ஜீவிந்த்), காலாகாலத்தில் கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படுகிறார் அக்கா (ஆர்.ஜே. ஆனந்தி)

மேட்ரிமோனி (?) மூலம் ஒரு பெண்ணைப் பிடித்து, அவளைச் சந்திக்க தம்பியை அனுப்பி வைக்கிறார் அக்கா.

அங்கே வரும் இளம்பெண் (அனஸ்வரா ராஜன்) இவனது பள்ளித் தோழி என்பது கொஞ்ச நேரத்தில் இருவருக்கும் ஞாபகம் வருகிறது.

பள்ளியில் அவனுக்கு ஒரு பெண்ணோடு (காவ்யா அனில்) காதல். அவளுக்கும் இன்னொரு பையனோடு (சச்சின் நாச்சியப்பன்) காதல்.

தங்கள் பழைய காதலைப் பற்றி இருவரும் பேச, ஒரு நிலையில் அவனது காதலியையும் அவளது காதலனையும் சந்திக்கலாம் என்று ஐடியா கொடுக்கிறாள் அவள்.

திருச்சியில் படித்த பள்ளிக்குப் போய் தகவல் திரட்டுகிறார்கள். தொடர்பில் உள்ள நண்பர்கள் மூலமும் முயல்கிறார்கள்.

அவன் காதலி இப்போது எப்படி எங்கே என்ன நிலையில் இருக்கிறாள்?. அவள் காதலன் இப்போது எங்கே எப்படி எந்த நிலையில் இருக்கிறான்?.

பார்க்க முடிந்ததா இல்லையா? யாருக்கு திருமணம் ஆனது? யாருக்கு ஆகவில்லை? ஏன் ஆகவில்லை?

அந்த விஷயங்கள் இவர்களது நிகழ் வாழ்வில் நிகழ்த்திய மாற்றங்கள், தாக்கங்கள் என்ன? விளைவு என்ன? முடிவு என்ன? சுகமா – சோகமா? சுமையா – சிறகா? என்பதே ‘வித் லவ்’.

ஜஸ்ட் லைக் தட் என ஆரம்பிக்கிறது படம். அக்கா சொன்ன பெண்ணைப் பார்க்கப் போகும் இடத்தில், ஆரம்பத்தில் வரும் டுவிஸ்ட் சுவாரசியம். அதன் வழியே கதை போகப் போகும் பாதையை இயக்குநர் கோடிட்டுக் காட்டுவது அழகு.

சில இடங்களில் வசன கிம்மிக்ஸ் அட போட வைத்தது. அப்புறம் கட்டையைப் போட ஆரம்பித்தார்கள்.

அவரவரின் பள்ளிக் காதல் இரண்டு பேர் மனதிலும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. ஒருவரின் காதல் நிகழ்வு மற்றும் பிரிவில் இன்னொருவரின் பங்கும் இருக்கிறது.

பள்ளிக் காதல் பிளாஷ்பேக் காட்சிகளில் இருவரும் சேர்ந்து வரும் காட்சிகள் நிறைய உண்டு. ஒருவர் காதலை ஒருவர் பாதித்த கதையும் இருக்கு.

அப்படி இருக்க, சந்தித்த உடன் உங்களை எங்கேயோ பாத்த மாதிரி இருக்கு என்று அவளும் அப்படியா ஞாபகம் இல்லையே என்று அவனும் சொல்லும் இடத்தில் லாஜிக் லகலக.

கல்யாணத்துக்குப் பார்க்க வந்த பெண்ணிடம் ஒருவன் தன் பழைய காதலைச் சொல்வது என்பதில் ஒரு தனிப்பட்ட குணாதிசயத் தன்மையோடு இருக்க வேண்டும்.

ஆனால், யாரோ ஒரு சக பயணியிடம் சொல்வது போல அவன் சொல்வது பொருத்தம் இல்லை.

இடைவேளை சமயத்தில் கூட எதற்கு இந்த வேண்டாத வேலை என்றே தோன்றியது.

ஆனால், இரண்டாவது பாதியில் வட்டியும் முதலுமாக படத்தை கட்டித் தூக்கி இருக்கிறார்கள் இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அனைவரும்.

ஆசிரியர் (சரவணன்) சம்மந்தப்பட்ட காட்சிகளில் ஒரு வகையில் FILLERதான் என்றாலும் சொன்ன விதம் அருமை.

பெண்ணின் தனித்தன்மையை பெண்ணுரிமை உணர்வை இயல்பாக, மேட்டிமையாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் மதன். அர்த்தமுள்ள எழுத்தாக்கம்.

காமெடிக் காட்சிகள் நாலுக்கு ரெண்டு தேறுகிறது. முதல் பாதியில் நாயகனின் காதலியாக வந்து போன கேரக்டர், இரண்டாம் பகுதியில் எடுக்கும் விஸ்வரூபம் அபாரமானது.

‘உள்ளம் கேட்குமே’ படத்தில் லைலா கேரக்டர் வருமே. அப்படி ஒரு உயரம் இந்தப் படத்திலும். பிரமாதம்.

அந்தக் காதலி வந்துபோன பிறகு ஓர் உண்மைக் காதலனுக்கு ஏற்படும் உணர்வை அட்டகாசமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் மதன். அவருக்கு கிராஃப்ட் தெரிகிறது. வாழ்த்துகள் தம்பி.

கிட்டத்தட்ட யூகிக்க முடிகிற கிளைமாக்ஸ் என்றாலும் அதை எழுதி இருக்கும் விதம் அபாரம்.

தெரிந்த விஷயமே வந்தாலும் அது மனசுக்குப் பிடிக்கிற மாதிரி இருப்பதுதான் நல்ல ஃபிலிம் மேக்கிங். விளையாட்டு என்றால் கண்ணாமூச்சி மட்டும்தானா?

கமர்ஷியலாகவும் படம் சிறப்பாக முடிகிறது.

அனஸ்வரா ராஜன் நடிப்பில் அசத்தியிருக்கிறார், சின்னச் சின்ன, ஆழமான முகபாவனைகள், உணர்வு மாற்றங்களை நிதானமாக முகத்தில் பிரதிபலிக்கும் விதம் என யாவும் அருமை. (அடுத்த படத்திலாவது தமிழ் பேசவும் பிளீஜ்)

கேமரா வழியே பார்க்கும்போது தேவதை போல இருக்கிறார் காவ்யா அனில். அந்த உடல் மொழிகள் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. நடிப்பும் அருமை.

ஹீரோவாக பாஸ் ஆகிறார் அபிஷன் ஜீவிந்த். காதலியைப் பார்த்து விட்டு வந்த பிறகு கனம் கூட்டும் இடத்தில் நடிப்பும் அருமை.

சரவணன் குறைவான காட்சிகள் என்றாலும் இயல்பான பங்களிப்பு.

தேனி முருகன், சச்சின் நாச்சியப்பன், ஹரிஷ் குமார் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

வெல்கம் ஆர்.ஜே. ஆனந்தி. மிமிக்ரி பண்ற கேரக்டர் கிடைத்தால் விடாதீங்க. (பிக்பாசில் சூப்பராக பண்ணீங்க)

ஷ்ரேயஸ் கிருஷ்ணாவுக்கு அனஸ்வரா ராஜன் மேல் ஏதோ கோபம். மற்றபடி சிறப்பான ஒளிப்பதிவு.

ஷான் ரோல்டன் இந்தப் படத்தில் பின்னணி இசையில் முன்னணியில் இருக்கிறார்.

சுரேஷ்குமாரின் படத்தொகுப்பு இரண்டாம் பாதிக்கு பெரும்பலம்.

படத்தின் முதல் பாதியில் மட்டும் கவனம் செலுத்தி இருந்தால் இந்தப் படம் இப்போது ஓடப் போவதைவிட இன்னும் இரண்டு மடங்கு நன்றாக ஓடி இருக்கும்.

கதைத் தேர்வில் அசத்துகிறார்கள் பசிலியான்கள். (கொஞ்சம் ஸ்கிரிப்டிலும் கவனம் செலுத்தவும்.)

சபாஷ் சவுந்தர்யா ரஜினிகாந்த். நல்ல படத்தை என்ஜினாக இருந்து இழுத்து இருக்கிறீர்கள்.

(குப்பையில் கிடந்த 45 பவுன் நகையை நேர்மையாக திருப்பிக் கொடுத்த அந்த துப்புரவுத் தொழிலாளி அக்காவுக்கு தங்கச் செயின் பரிசளித்து வாழ்த்திய தங்கமகனுக்கு வணக்கம்)

வித் லவ்… வித் டிக்கட்.

– சு. செந்தில் குமரன்