மம்முட்டி, விநாயகன் நடிப்பில் டிசம்பர் 5-ம் தேதி மலையாளத்தில் வெளியான ‘களம்காவல்’ திரைப்படம், ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்ட பெண்களைப் பின்தொடர்ந்து, அவர்களோடு பழகி, உடலுறவு வைத்துக்கொண்டு, அதன் பிறகு அப்பெண்ணைக் கொலை செய்யும் சைக்கோவைப் பற்றிய கதை.
38 பெண்களை இதுபோல் கொலை செய்த கர்நாடகாவைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் சயனைடு மோகன் என்பவன் செய்த கொலைகளை மையப்படுத்திய கதைக்களம்.
சயனைடு மோகன் மரண தண்டனைக் கைதியாக சிறையில் இப்போதும் இருக்கிறான்.
425 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர். பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வாங்கி குவித்தவர். கேரள மக்களால் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் மம்முட்டி, இதில் கதாநாயகனாக நடிக்கவில்லை.
அவர் தான் சயனைடு மோகன் கதாபாத்திரத்தில் கொலைகாரனாக நடித்துள்ளார்.
ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த விநாயகன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சினிமா என்பது கதையும், கதை மாந்தர்களையும் உருவாக்கி, தொழில்நுட்பச் செறிவோடு மக்களை மகிழ்விக்கும் ஒரு கருவி மட்டுமே என்ற அடிப்படைப் புரிதலுள்ளவர்கள் கேரள மக்கள்.
கதாநாயகன் ஒருவன் வந்து நம் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவான் என்ற அற்ப புரிதலற்ற மக்கள். எனவே தான் நாயகத்தனம் அங்கு அரசியலில் எடுபடுவதில்லை. கதாநாயகர்களும் அதை நோக்கி முயற்சிப்பதில்லை.
மம்முட்டி ஒருமுறை சொன்னார்.
“கேரள மக்கள் தங்கள் அரசியல் தலைவர்களை திரையில் தேடுவதில்லை. தரையில் (களத்தில்) தேடுகிறார்கள்” என்றார்.
களம்காவல் திரைப்படத்தில் அவர் எடுத்தது முதல் முயற்சி அல்ல. இதுபோல் வில்லனாக பல படங்களிலும் நடித்திருக்கிறார். கதாநாயக தற்குறி மனநிலையை அடித்து உடைத்திருக்கிறார்.
அத்தகைய முயற்சி தமிழ்த் திரைப்படங்களிலும் தொடங்க வேண்டும். அதை நோக்கிய மக்கள் மனநிலைகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
விஜய் சேதுபதி அத்தகைய முயற்சியை எடுத்தார். மக்களுக்கான அரசியல் தெளிவுள்ளவர்களால் மட்டுமே அத்தகைய சிந்தனையுடன் செயல்பட முடியும்.
மம்முட்டி, விநாயகன் இருவரும் அடிப்படையில் இடதுசாரி அரசியல் சிந்தனை கொண்டவர்களும் கூட. களம்காவல் படக்குழுவிற்கு வாழ்த்துகள்.
தமிழ்நாட்டு மக்கள் இப்படத்தைப் பார்க்க வேண்டுமெனபதற்காகவே கதைக்களத்தை கர்நாடகம் – கேரளா என்பதிலிருந்து மாற்றி, தமிழ்நாடு – கேரளாவில் நடப்பதாக வடிவமைத்துள்ளார்கள். படத்தைப் பாருங்கள். கதாநாயக மனநிலை உடைந்து போகும்.
– நன்றி: சூர்யா சேவியர்