Take a fresh look at your lifestyle.

மகேஷ் பாபு புதிய படம்: முடிவை மாற்றிய ராஜமவுலி!

தெலுங்குத் தேசத்தின் பிரமாண்ட இயக்குநரான எஸ்.எஸ். ராஜமவுலி ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு, கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

ராஜமவுலியையும், மகேஷ்பாபுவையும் குறிக்கும் வகையில் ‘SSMB – 29’ என படத்துக்குத் தற்காலிகமாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் மகேஷ்பாபுவுடன் பிரியங்கா சோப்ரா, பிரித்திவிராஜ் ஆகியோரும் இப்போது நடித்து வருகிறார்கள். பிற நடிகர்கள் விவரம் தெரியவில்லை.

புனைவு, சாகசம், மாயாஜாலம் என கலந்து கட்டி இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் காசி நகரைப்போல் பிரமாண்ட அரங்கு அமைத்து முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஒடிசா வனப்பகுதியிலும் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது. இந்தக் காட்சிகளை யாரோ, செல்போனில் படம் பிடித்து, இணையத்தில் வெளியிட்டதால், ராஜமவுலி அதிர்ச்சி அடைந்தார்.

இரண்டு கட்ட ‘ஷூட்டிங்’ முடிந்துள்ள நிலையில், இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆப்பிரிக்க காடுகளில் நடைபெற உள்ளது.

ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும், இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட ராஜமவுலி முதலில் திட்டமிட்டிருந்தார். தற்போது இப்படத்தை ஒரு பாகமாக மட்டுமே எடுக்க முடிவு செய்திருக்கிறார் ராஜமவுலி.

ஆர்.ஆர்.ஆர். படம் போல், இந்தப் படமும் மூன்றரை மணி நேரம் ஓடும் வகையில் தயாராகிறது. இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

முதன் முறையாக படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட 2 நிமிடங்கள் ஓடும் வீடியோ தயாராகி உள்ளது.

படத்தின் முக்கியக் காட்சிகளை ஏற்கனவே ராஜமவுலி படமாக்கி விட்டார். அதில் இருந்து 2 நிமிட வீடியோ தயாராகியுள்ளது.

இது ‘பான் வேர்ல்டு’ படம் என்பதால் இந்த வீடியோவை ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியிட ராஜமவுலி முடிவு செய்திருக்கிறார்.

இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பும் அடுத்த ஆண்டு மத்தியில் முடிந்துவிடும். அதன் பிறகு எடிட்டிங், டப்பிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட வேலைகள் உள்ளன. படத்தை 2027 ஆம் ஆண்டு வெளியிடத் திட்டம்.

– பாப்பாங்குளம் பாரதி.