‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘வேட்டையன்’ படத்தைத் தொடர்ந்து இப்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, நம்ம ஊர் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள்.
படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் டைட்டில் ‘டீசர்’ அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
படப்பிடிப்புக்கு இடைவெளி கொடுத்து விட்டு, ரஜினிகாந்த், மனைவி லதாவுடன் துபாய் சென்றுள்ளார். தங்கள் 44-வது திருமணநாளை அங்குக் கொண்டாடினர். இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் ‘கூலி’ படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆட உள்ளதாக கூறப்படுகிறது.
‘‘ஜெயிலர்’ படத்தில் தமன்னாவின் குத்தாட்டம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. அதேபோல் ‘கூலி’ படத்தில் பூஜா ஹெக்டேயின் நடனம் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூஜா ஹெக்டே, தமிழில் இப்போது விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’, சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
– பாப்பாங்குளம் பாரதி.