Take a fresh look at your lifestyle.

ரசித்து சிலிர்க்கும் மல்டி ஸ்டாரர் சினிமா ‘சின்னதம்பி பெரியதம்பி’!

‘ஒரு ஊர்ல ஒரு ராஜா’ என்று தொடங்கும் கதைகளை எந்நேரமும் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. அவ்வப்போது, ‘ஒரு அரண்மனையில சுயம்வரம் நடந்தப்போ பல நாட்டு ராஜாக்கள் கலந்துகிட்டாங்க’ என்று கதை சொன்னால்தான் வழக்கத்திற்கு மாறான அனுபவம் கிடைக்கும்.

நம்மூர் சினிமா ஹீரோக்கள் இந்த விஷயத்தை கண்டுகொள்வதே கிடையாது. ஏனென்றால், ‘ஒரு உறையில ரெண்டு கத்தி எப்படி வைக்க முடியும்’ என்கிற எண்ணம் தான்.

மலையென உயர்ந்து நிற்கும் அந்த சிந்தனையையும் சிறு உளிக் கொண்டு உடைத்து, சில இயக்குநர்கள் ‘மல்டி ஸ்டாரர்’ படங்களைத் தந்திருக்கின்றனர்.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாயகர்கள், நாயகிகள் நடிக்கும்போது, ‘எல்லோருக்கும் சமமான முக்கியத்துவம்தான்’ என்ற வாக்குறுதியைத் தருவதோடு செயல்படுத்திக் காட்டுவதன் மூலமாக அதனைச் சாதித்திருக்கின்றனர். அவ்வாறு அமைந்த படங்கள் ‘செம’ வெற்றியைப் பெற்றிருக்கின்றன.

அவற்றுள் ஒன்று பிரபு, சத்யராஜ், நதியா இணைந்து நடித்த ‘சின்னதம்பி பெரியதம்பி’. என்றென்றைக்கும் ரசித்துச் சிலிர்க்கிற மாதிரியான ‘மல்டிஸ்டாரர் சினிமா’க்களில் ஒன்று இப்படம்.

சண்முகப்ரியனின் கதையொன்றை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருந்தார் மணிவண்ணன். கங்கை அமரன் இதற்கு இசையமைத்திருந்தார்.

சி.த.பெ.த. கதை!

இரண்டு சகோதரர்கள். ஒரு முதிய பெண்மணி அவர்களை வளர்த்து வருகிறார்.

அவரை இருவரும் ‘ஆத்தா’ என்றழைக்கின்றனர். தாங்கள் இருவரும் யாருமற்ற அனாதைகளாக இருந்தவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.

அந்த வயதான பெண்மணிக்கு ஒரு மகன்.

அவர் காதல் திருமணம் செய்துகொண்டு நகரத்திற்குச் சென்ற காரணத்தால், அப்பெண்மணி தனியாகக் கிராமத்தில் இருக்கிறார்.

பெரிய பங்களா, சொந்தமாக நிறுவனம் என்றிருக்கிறார் அப்பெண்மணியின் மகன். கல்லூரியில் படிக்கிற மகளுக்கு ஒரு ஆலை அதிபரின் மகனுக்குத் திருமணம் செய்துகொடுக்க முடிவு செய்கிறார். அதனைச் சொல்ல, தனது கிராமத்திற்கு வருகிறார்.

அது தெரியாமல், பேரன்களாக எண்ணித் தான் வளர்த்து வருபவர்களில் ஒருவருக்குப் பேத்தியைத் திருமணம் பேசி முடிக்கத்தான் மகன் வருவதாக நினைத்துக் கொள்கிறார் அந்த முதிய பெண்மணி. அந்த இளைஞர்களும் அதுவே உண்மை என்று நினைத்துக் கொள்கின்றனர்.

ஒருகட்டத்தில் உண்மையை அறிந்ததும் அவர்கள் பின்வாங்குகின்றனர். ஆனால், அந்த பெண்மணியோ கோபத்தின் உச்சத்திற்குச் செல்கிறார். மகன் என்றும் பாராமல், ‘நீ நாசமா போவ’ என்று சாபமிடுகிறார்.

அவர் வாக்கு பலித்ததோ அல்லது அதுதான் இயற்கையோ’ என்று புலம்பும் அளவுக்கு, திருமணத்திற்கு முன்னதாக அப்பெண்மணியின் மகனும் மருமகளும் விபத்தில் அகால மரணமடைகின்றனர்.

அதன்பிறகு, அந்த பேத்தியின் நிலை கேள்விக்குள்ளாகிறது. அதுநாள்வரை வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்தவர் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார்.

தந்தை வாங்கிய கடனுக்காக வீடு, நிறுவனம் என்று அனைத்து சொத்துகளும் பறிபோகின்றன. திருமணம் நின்றுபோய், மாப்பிள்ளை வீட்டார் சென்றுவிடுகின்றனர். அப்பெண் நடுத்தெருவுக்கு வந்து விடுகிறார்.

அப்போது, பாட்டியின் வீட்டில் கண்ட இளைஞர்கள் மட்டும் தன் முன்னே நிற்பதை அந்த இளம்பெண் பார்க்கிறார். அவர்களோடு சேர்ந்து கிராமத்திற்குச் செல்கிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக, பாட்டி மற்றும் அந்த இளைஞர்களின் நல்ல மனதைப் புரிந்து கொள்கிறார். கிராமத்து வாழ்வுக்கு ஏற்பத் தனது இயல்பை மாற்றுகிறார்.

அந்தக் காலகட்டத்தில் அந்த இளைஞர்கள் இருவரும் ‘அப்பெண்ணைக் கவர்வது நான் தான்’ என்று போட்டி போடுகின்றனர்.

அந்தப் பெண் இருவரில் யாரை விரும்பினார்? அந்தக் காதலுக்குத் தடையாக ஏதும் இருந்ததா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

இந்தக் கதையில் சின்னதம்பியாக பிரபுவும் பெரியதம்பியாக சத்யராஜும், அவர்களை வளர்க்கும் முதிய பெண்மணியாக காந்திமதியும், அவரது மகனாக டி.எஸ்.ராகவேந்தரும் நடித்திருந்தனர்.

நதியா இதில் நாயகியாகத் தோன்றியிருந்தார். அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையாக, இக்கதையில் வில்லனாக நிழல்கள் ரவி நடித்திருந்தார்.

பெரும்பாலான காட்சிகள் யதார்த்தமாக இருக்குமாறு, இதன் திரைக்கதையை அமைத்திருந்தார் மணிவண்ணன். ஆனால், ராகவேந்தர் பாத்திரம் இறந்ததாகக் காட்டப்படுகிற காட்சியை மட்டும் ‘அலேக்’ என்று சொல்லும் வகையில் தாண்டித் திரைக்கதையின் இன்னொரு இடத்திற்குச் சென்றிருப்பார். அது மட்டுமே இப்படத்தின் பெரிய மைனஸ்.

சிறப்பான ஆக்கம்!

சிறுகதை வடிவத்தில் சில பக்கங்களுக்குக் கதை இருந்தால் போதும். அதற்கேற்ற பாத்திர வார்ப்பு, வசனங்கள், பாடல்கள், சண்டைக்காட்சிகள், நகைச்சுவை காட்சிகளை நிரப்பி முழுநீளத் திரைப்படமாக மாற்றிட முடியும்.

எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த பல திரைப்படங்கள் அப்படி உருவானவை தான். அதேநேரத்தில், அவை திரையில் உருவாக்கிய மாயாஜாலம் ஈடிணையற்றதாக இருந்தன.

அதனைச் சின்னதம்பி பெரியதம்பி திரைப்படமும் சாதித்தது.

பிரபுவும் சத்யராஜும் இணைந்து தோன்றுகிற நகைச்சுவைக் காட்சிகள் மட்டுமல்லாமல் செண்டிமெண்ட் காட்சிகளும் நம்மைச் சட்டென்று ஈர்க்கக்கூடிய வகையில் இருந்தன.

நதியாதான் இதில் நாயகி; என்றபோதும், சுதா சந்திரன் இதில் இரண்டாவது நாயகியாக வந்து போயிருப்பார்.

கைம்பெண் பாத்திரத்தில் அவரும், அவரது சகோதரராக விஜயனும் நடித்திருந்தனர்.

கிளைமேக்ஸ் சண்டைக்கு முன்னதாக, நதியா உடனான தனது காதல் கைகூடாத வருத்தத்தை மறைத்துக்கொண்டு ‘உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கறதுல ஆட்சேபணை இல்லையே’ என்று சுதா சந்திரனிடம் சத்யராஜ் கேட்பதாக ஒரு காட்சி உண்டு.

அந்த வார்த்தைகளை நேரடியாகச் சொல்வதற்குப் பதிலாக, ‘இனி வெள்ளைப் புடவை வேண்டாம், இந்தப் புடவையையே நீ கட்டிக்கலாம்’ என்று சொல்வார் சத்யராஜ்.

அதனைக் கேட்டதும் சுதா வெட்கப்படுவார்; அவரது அண்ணனாக வரும் விஜயன் மகிழ்ச்சியில் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்.

கைம்பெண் திருமணத்தை ஆதரிக்கிற இந்தக் காட்சிக்கு, தியேட்டரில் அப்ளாஸ் அள்ளியிருக்கும் என்பதில் சந்தேகமே தேவையில்லை.

அதேபோல வில்லன் அடியாளாக வரும் ஜான் அமிர்தராஜை சத்யராஜ் ஒரு காட்சியில் புரட்டியெடுப்பார்.

பின்னர், சிறையில் அவர் அடைக்கப்படுகிறபோது பிரபுவை அழைத்து வருவார் ஜான் அமிர்தராஜ். அப்போது, அவரது செய்கைக்கு நன்றி தெரிவிக்கும் உடல்மொழியை வெளிப்படுத்தியவாறே உரிமையோடு கோபப்படுவார் சத்யராஜ்.

‘இப்படித்தானே ஒரு சாதாரண மனிதன் இருப்பான்’ என்பதாகவும் அந்தக் காட்சியை எடுத்துக்கொள்ள முடியும். அந்த நாயகரின் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரிக்கத்தக்க இடமாகவும் அது அமைந்திருக்கும்.

அனைத்துக்கும் மேலே, இப்படிப் பத்து, பதினைந்து காட்சிகள் இருந்தாலே ’பீல்குட்’ படமாகக் கொண்டாடப்படும் என்கிற உத்தரவாதத்தைத் தரும்.

அதே போல, இந்தப் படத்தின் திரைக்கதையில் பாடல்கள் வருகிற இடங்களை வழக்கத்திற்கு மாறானதாக வடிவமைத்திருந்தார் இயக்குநர் மணிவண்ணன்.

மாமன் மகளைக் கவர்வதற்காக சத்யராஜ் வாங்கி வந்த நவநாகரிக ஆடைகளை வேண்டாம் என்று நதியா மறுத்துவிடுவார்.

அந்த ஆடைகளை வெறுமையோடு எடுத்துச் செல்லும் சத்யராஜ், வழியில் தென்படும் சிறுவர்களிடம் அவற்றைக் கொடுப்பார்.

அடுத்த காட்சியில், அவர்களது சகோதரிகள், உறவினர் பெண்கள் அந்த ஆடைகளை அணிந்துகொண்டு ‘யாயா..யா’ என்று பாடுவார்கள். இந்த உதாரணமே போதும், அந்த சிச்சுவேஷன் வழக்கத்திற்கு மாறானது என்பதை உரைக்க.

இதே ரகத்தில் “மாமன் பொண்ணுக்கு தேதி வச்சாச்சு”, “எம் பாட்டைக் கேட்டா போதும்..”, “மழையின் துளியில்”, “ஒரு காதல் என்பது” பாடல்களுக்கான சிச்சுவேஷன்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

ரொமான்ஸ், சென்டிமெண்ட், காமெடி, டிராமா, ஆக்‌ஷன் என்று எல்லா அம்சங்களும் கலந்து நிற்கிற ‘சின்னதம்பி பெரியதம்பி’, இன்றும்கூட சேட்டிலைட் சேனல்களில் ஒளிபரப்பாகிறபோது டிஆர்பியில் சில புள்ளிகளைப் பெறுகிறது. காரணம், அப்படத்தில் இருக்கும் கமர்ஷியல் அம்சங்கள்தான்.

இதே கதையைத் தமிழ்நாட்டில் உள்ள ஏதேனும் ஒரு வட்டாரத்தில் நிகழ்வதாக வடிவமைத்து, லாஜிக் மீறல்களைச் சரிப்படுத்தும்விதமாகத் திரைக்கதையைச் சற்றே மாற்றியமைத்து, தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பான முறையில் ‘மறுஆக்கம்’ செய்ய முடியும்.

இன்றைய சூழலுக்குத் தகுந்தாற்போல, இக்கதையை ‘உல்டா’வாக மாற்றி ‘ரீபூட்’ செய்யவும் முடியும். என்ன செய்தாலும், இதில் மீதமிருக்கிற கமர்ஷியல் அம்சங்கள் நம்மைத் திரையோடு ஒன்றச் செய்யும் என்பது நிச்சயம்.

அந்த உறுதியைத் தருவதுதான் இப்படத்தின் வெற்றி. அதற்காக, ’சின்னதம்பி பெரியதம்பி’யில் பங்குகொண்ட அத்தனை கலைஞர்களுக்கும் நாம் தலைவணங்க வேண்டும்.

‘இது பழைய படம்’ என்ற எண்ணத்தை மட்டும் துறந்துவிட்டால், ‘சின்னதம்பி பெரியதம்பி’ போன்ற படங்களை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது, சலிக்காது. அதுவே இவற்றின் சிறப்பு!

– உதய் பாடகலிங்கம்.