Take a fresh look at your lifestyle.

“துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?”

 திரைத் தெறிப்புகள் – 71 :

*

அறிஞர் அண்ணா வசனம் எழுதிய ‘ஓர் இரவு’ திரைப்படத்தில் புரட்சிக்கவி பாரதிதாசனின் நெகிழ்வான காதல் பாட்டு, இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.

இத்திரைப்படத்தில் கதாநாயகனான நாகேஸ்வர ராவும், பத்மினியின் சகோதரியான லலிதாவும் இணைந்து, இப்பாடல் காட்சியில் நடித்திருப்பார்கள்.

சிறந்த நடனக் கலைஞரான லலிதா, இப்பாடலுக்கிடையே அருமையாக நடனமாடியிருப்பார். 

பாடல் துவங்குவதற்கு முன்பு கதாநாயகியைப் பார்த்து “துன்பம் வரும்போது இன்பம் தரும் “பாடலைப் பாடு” என்று சொன்னதும் அழகிய பாவனையுடன் பாட ஆரம்பிப்பார் கதாநாயகி.

பாடல் இப்படித் துவங்கும்,

“துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?”

என்று வீணை இசைப்பது மாதிரியான குரலில் எம்.எஸ். ராஜேஸ்வரி பாட, இடையிடையே சில வரிகளைப் பாடியிருப்பார் வி.ஜே. சர்மா.

“எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா? – நல்
அன்பில் நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்கமாட்டாயா? – கண்ணே
அல்லல் நீக்கமாட்டாயா?”

சுதர்சனம் அவர்களின் இசையமைப்பில் உருவான இந்தப் பாடல், இத்திரைப்படம் வெளிவந்த ஐம்பதுகளில் (1951) அக்காலத்தியே பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட பலருக்கும் பிடித்தமான பாடலாக இருந்தது என்பது தனிச் சிறப்பு.

“வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க – எம்
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட்டாயா? – கண்ணே
ஆடிக் காட்டமாட்டாயா?”

இப்பாடலில் இடம்பெற்றிருக்கும் அக்காலத் தமிழ்ச் சொற்களைக் கேட்டுப் பாருங்கள், பாரதிதாசனின் தனித்திறமை தெரியும்.

“அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது – யாம்
அறிகி லாத போது – தமிழ்
இறைவனாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? – நீ
இயம்பிக் காட்டமாட் டாயா?”

தற்போதைய முன்னணி கர்நாடக இசைக் கலைஞர்கள் பலர் மேடைகளில் பாடும் தமிழ் இசைப் பாடலாகவும், இப்பாடல் தொடர்ந்து திகழ்ந்து கொண்டிருக்கிறது.

மருத்துவர் ராமதாஸின் விருப்பமான பாடலாக அவரது முகநூலில் இடம்பெற்றிருக்கிறது இந்தப் பாடல்.

“புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் – தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் – நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச்
செல்வம் ஆகமாட்டாயா? – தமிழ்ச்
செல்வம் ஆகமாட்டாயா?”

என்று இந்தப் பாடல் நிறைவுபெறுபோது நம் மனதுக்கு அருகில் அலையடித்து ஓய்ந்தது போன்றதொரு உணர்வைப் பெறமுடியும்.

பாரதிதாசன் இப்படியும் தமிழ்மயமான காதல் உணர்வை பாடல் வழியே கடத்தியிருக்கிறார். 

*

-மணா

*