Take a fresh look at your lifestyle.

டி.எம்.எஸ்.ஸுக்குச் சிம்மாசனம் தந்த எம்.ஜி.ஆரும், சிவாஜியும்!

இன்றைய வாசிப்பு: குரலில் பல்சுவைகளைப் பரிமாறிய அபூர்வமான திரைப்படப் பின்னணிப் பாடகர்  டி.எம். சௌந்தரராஜன்.

இதையொட்டி கவிப்பேரரசு வைரமுத்து தினந்தந்தி நாளிதழில் (24.03.2020) “வீட்டுக்கொரு தேன்குடம் தந்த பாட்டுக் கலைஞன்’’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி: 

“1952 முதல் 58 வரையிலான ஏழாண்டுகள் தமிழ்த் திரையுலகம் மடை மாறிய காலங்கள். பழையன கழிந்து, புதியன புகுந்து, புதுமைகள் பொலிந்து அடுத்த நூற்றாண்டுப் பயணத்திற்கான கலையூட்டம் பெற்ற காலம் அது.

மலைக்கள்ளன் (1954), குலேபகாவலி (1955), மதுரைவீரன் (1956), தாய்க்குப் பின் தாரம் (1956), மகாதேவி (1957), நாடோடி மன்னன் (1958) போன்று ஏறுமுகப் படங்கள் எம்.ஜி.ஆருக்கு ஏணி தந்தன.

தூக்குத்தூக்கி (1954), நான் பெற்ற செல்வம் (1956), அம்பிகாபதி (1957), தங்கமலை ரகசியம் (1957), உத்தம புத்திரன் (1958), வீரபாண்டிய கட்டபொம்மன் (1958) போன்ற படங்கள் சிவாஜிக்குச் சிறகு கட்டின.

இந்த இரண்டு பேரும் உச்சம் தொடுவதற்குத் தன் உயிர்க் காற்றை ஊதிக் கொடுத்தார் டி.எம். சௌந்தரராஜன்.

சிதம்பரம் ஜெயராமன், திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம். ராஜா, கண்டசாலா, எஸ்.சி. கிருஷ்ணன், பி.பி. ஸ்ரீனிவாஸ் என்று எல்லாப் பாடகர்களுக்கும் நாற்காலி போட்டுக் கொடுத்த எம்.ஜி.ஆரும், சிவாஜியும், சௌந்தரராஜனுக்கு மட்டும் ஒரே ஒரு சிம்மாசனம் போட்டு உட்கார வைத்தார்கள்’’.