Take a fresh look at your lifestyle.

பஞ்ச் டயலாக் பேசுவது எப்படி?

கண்டக்டர் உங்களுக்கு தர வேண்டிய பேலன்ஸ் எட்டணாவைத் தரவில்லை. அதை நீங்கள் கேட்கும்போதெல்லாம், “பிள்ளையாா் கோவில் பஸ் ஸ்டாப் வரட்டும், தர்றேன்”, “சில்லறை கொஞ்சம் சேந்ததும் தந்துர்றே”, “பொறுய்யா, ஒன்னோட எட்டாணாவுல என்னோட வீடா கட்டிற போறே.

இறங்கும்போது வாங்கிக்க…” என்று போக்கு காட்டிக் கொண்டே இருக்கிறார்.

ஒவ்வொரு முறை கேட்கும்போதும், மரியாதை படிப்படியாக குறைவதுதான் மிச்சம். கண்டக்டருடன் பஸ் டிப்போவுக்கே போய், அடுத்த ஸ்டாப் வரை காத்திருந்தாலும் எட்டணா கிடைக்காது என்பது உங்களுக்குத் தெரிந்து விடுகிறது.

நாக்கைப் பிடுங்குகிற மாதிரி கண்டக்டரிடம் நாளு கேள்விகள் கேட்க வேண்டும் என்று ஆவேசம் உடம்பில் சூடான ரத்தம்போல அங்குமிங்கும் ஓடுகிறது.

சிவந்த கண்கள், கோபத்தில் எகிறும் மார்பு, சொடுக்குப் போட்டுப் பேசத் தயாராகும் கை விரல்கள் எல்லாம் தயார். ஆனால் பிசிறு தட்டாமல் பேசவேண்டிய பஞ்ச் டயலாக்தான் மிஸ்ஸிங்.

அவசரப்பட்டு ஆக்‌ஷனில் இறங்கிவிட்டு, ‘பஞ்ச்’ கிடைக்காமல் நீங்கள் திணற வேண்டாம். கண்டக்டரிடம் நீங்கள் பேச வேண்டிய பஞ்ச் டயலாக்கை சண்டே ஸ்பெஷல் டீம் எடுத்துக் கொடுக்கிறது.

“சில்லறைத் தனமான நடந்துக்காம
பேலன்ஸ் கொடுத்தேன்னா
எட்டணா என் பாக்கெட்டில் இருக்கும்…
சில்லறைக்கு ஆசைப்பட்டு
பேலன்ஸ் இல்லாம நடந்துக்கிட்டேனா..
ஒத்த ரூபா உன் நெத்தியில் இருக்கும்…!”
*
பஸ்ஸில் செம கூட்டம். முறைப்படி வாசல் வழியாக நுழைந்தால் புட் போர்டில் கூட இடம் கிடைக்காது என்று உங்களுக்கு தெரிந்து விடுகிறது.

ஜன்னல் வழியாக உங்கள் கர்சீப்பை அலட்சியமாக ஒரு சீட்டில் போடுகிறீர்கள்.
“அப்பாடா, சீட் ரிசர்வ்டு”.

உங்கள் சாமர்த்தியத்தை நீங்களே மெச்சிக்கொண்டு ரொம்ப தெனாவட்டாக பஸ்சுக்குள் நுழைகிறீர்கள்… நீங்கள் கர்சீப்போட்ட சீட்டை தேடுகிறீர்கள்… கர்சீப்பையும் காணோம்.. சீட்டையும் காணோம்..

முகத்தில் எந்த ரெஸ்பான்சும் காட்டாமல் எல்லாரும் உட்கார்ந்து இருக்கிறார்கள். கொஞ்ச நேரம் நிதானமாக தேடிய பிறகுதான் ஒரு உண்மை உங்களுக்குப் புரிகிறது.

நீங்கள் போட்ட கர்ச்சீப்பை இடது கை நுனி விரலால் அப்புறப்படுத்திவிட்டு, ஒருவர் அந்தச் சீட்டில் உட்கார்ந்து இருக்கிறார்.

நீங்கள் ரொம்ப பொறுமையாக உங்களது, ‘கர்சிப் ரிசர்வேஷன்’ மேட்டரைப் பற்றிச் சொன்னாலும், மனுசன் அசைந்து கொடுப்பதாக இல்லை.

‘நாட்டாமை’ யில் வருகிற விஜயகுமார் ஸ்டைலில், “அதெல்லாம் செல்லாது, செல்லாது” என்று உங்களிடம் ஈசியாக பதில் சொல்லிவிட்டு தாடையைத் தடவுகிறார்.

நரநரவென்று உங்களது பற்களுக்கு இடையே ஒரு சவுண்டு புறப்படுவது உங்களுக்கு மட்டுமே கேட்கிறது. மொத்தத்தில் நீங்கள் பஞ்ச் டயலாக் சொல்லும் நேரம் வந்துவிட்டது.

“என்னோட கர்ச்சீப்பை சீட்டு மேலே போட்டேன்..
கண்டக்டர் விசில் ஊதுறதை நீ கேட்குறே…
அதே கர்ச்சீப்பை உன் மூக்கு மேல போட்டேன்னா..
உனக்கு சங்கு ஊதுறதை கண்டக்டா் கேட்பாரு…!”
*
ஆபீசுக்கு ‘பால் பாயிண்ட்’ பேனாவோடு வருகிற ஆள் நீங்கள். உங்கள் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து இருப்பவருக்கு சொந்தப் பேனா வைத்துக்கொள்கிற பழக்கமே கிடையாது.

தினமும் காலையில் நீங்கள் வருகைப் பதிவேட்டில் “உள்ளேன் ஐயா” கையெழுத்து போடுவதோடு சரி. உங்களுக்கும் உங்கள் பேனாவுக்கும் இருக்கும் தொடர்பு முடிந்து விடுகிறது.

பக்கத்து சீட் பார்ட்டி, உங்களிடம் பேனாவை வாங்கிக் கொள்வார். அதைத் திருப்பித் தர வேண்டுமே என்ற உணர்வே இல்லாமல் எழுதிக்கொண்டே இருக்கிறார்.

தப்பித் தவறிக்கூட பேனாவை திருப்பித் தருவதில்லை. நீங்கள் சூசகமாக, நாசுக்காக, நாகரீகமாக எப்படி எல்லாமோ சொல்லி பார்த்தீர்கள்.

“ஓ.. சாரி… மறந்துட்டேன்” என்று போலியான ஜர்க்குடன் உங்களிடமே திருப்பித் தந்துவிடுவார். இந்த சந்தோசம் உங்களுக்கு ரொம்ப நேரம் இருக்காது.

பக்கத்து சீட் பார்ட்டி அடுத்த அரை மணி நேரத்திலே உங்களிடம் மறுபடியும் பேனா இரவல் கேட்கிறார். மீண்டும் அது உங்கள் கைக்கு வர குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ஆகும்.

பக்கத்து சீட் பார்ட்டி உங்களிடம் பேனாவை வாங்குவதும், அவற்றை சாமர்த்தியமாக தன்னுடைய ‘பிராப்பர்டி’ ஆக்கிக் கொள்வதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நீங்கள் அவரிடம் இழந்த பேனாக்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது.

“ஒரு பேனாவைப் பத்திரமாக வைத்திருக்க துப்பு இல்லை. உனக்கு எல்லாம் ஜெல் பேனா கேட்குதா? இனிமே ஆபீசுக்குப் பாதி தீர்ந்துபோன ஒரு நடராஜ் பென்சில் மட்டும் கொண்டு போ..” என மனசாட்சி உங்களைப் பார்த்து கேவலமாகப் பேசுகிறது.

மன உளைச்சலில் பக்கத்து சீட் பார்ட்டியைப் பார்த்து பஞ்ச் டயலாக் சொல்வதற்கு உங்கள் உதடுகள் துடிக்கின்றன. இதோ அந்த சிச்சுவேஷனுக்கான டயலாக்…

“எம் பேனாவைப் பிடிங்கி எழுதினா
மாறலாம் உன் கையெழுத்து…
எந்த பேனாவைப் பிடுங்கி எழுதினாலும்
மாறாதுடா உன் தலையெழுத்து…!”
*
விடிந்த பிறகும் அசந்துபோய் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தலையணைக்குப் பக்கத்தில் கிடக்கும் செல்போன் திடீரென அலறுகிறது. போனை எடுத்துப் பார்க்கிறீர்கள். அலறல் நின்றுவிடுகிறது உங்கள் நண்பனின் நம்பர்.

அலுப்புடன் படுக்கையில் விழுகிறீர்கள். மறுபடியும் செல்போன் கூப்பிடுகிறது. அப்போதும் பொறுமையை இழக்காமல் போனை எடுத்துப்பேச முயல்கிறீர்கள். போன் சைலண்ட்டாகிறது.

அதே நம்பர்தான். உங்கள் நண்பன்தான் சீக்கிரமே எழுந்து, நேரம் போகாமல் விளையாடிக் கொண்டிருக்கிறான் என்பது தெரிந்து விடுகிறது.

அந்த சமயம் பார்த்து டி.வி.யில் சாலமன் பாப்பையா, “இந்த நாள் இனிய நாள்” என நிகழ்ச்சியை முடிக்க உங்களுக்கு ஆத்திரம் தலைக்கேறுகிறது.

ஆத்திரத்தை அதிகப்படுத்திவது போல மறுபடியும் மிஸ்டுகால். நேரம், காலம் தெரியாமல் மிஸ்டு கால் கொடுக்கும் உங்கள் நண்பனை இதுவரை பயன்படுத்தாதக் கெட்ட வார்த்தைகளால் திட்ட வேண்டும் என துடிக்கிறீர்கள். அப்போது நீங்கள் சொல்ல வேண்டிய பஞ்ச் டயலாக்…

“காலங்கார்த்தால நீ மிஸ்டு கால் கொடுத்தா
காலத்துக்கும் ப்ளாங்க் கால் கொடுப்பேன்டா…
இஷ்டத்துக்கு நீ ஜம்ப்பீங் கால் கொடுத்தா..
உன் கஷ்டத்துக்கு ராங்க் கால் கொடுப்பேண் டா…!”

– 2006 ஜூனில் வெளிவந்த தினமலர் ‘சண்டே ஸ்பெஷல்’ இதழில் ஆனந்த செல்லையா எழுதிய கட்டுரை…