Take a fresh look at your lifestyle.

“அன்பு என்னும் பொருளை எந்த உலகில் வாங்கலாம்?”

திரைத் தெறிப்புகள் – 68 :

*

பொதுவாக, மனித மனத்தின் ஈரம் என்று தான் அன்பைச் சொல்ல வேண்டும்.

அந்த அளவுக்கு அன்பு தான் வாழ்வின் எல்லா நிறைவிற்குமான ஊற்றுக் கண்ணாக அமைந்திருக்கிறது.

இதை வலியுறுத்தும் விதத்தில் தனி மெருகுடன் அமைந்திருக்கிறது திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் இசையமைத்த இந்த அருமையான பாடல்.

“அன்பு என்பதே தெய்வமானது.
அன்பு என்பதே இன்பமானது…”

என்று துவங்கும் இந்தப் பாடல் இடம்பெற்றிருப்பது 1963-ம் ஆண்டில் வெளிவந்த ‘ஆசை அலைகள்’ என்கிற படத்தில்.

இத்திரைப்படத்தில் குறிப்பிட்ட பாடல் காட்சியில் குழுவினராகச் சேர்ந்து பாடும் இந்தப் பாட்டில், சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரி, ஜமுனா ராணி ஆகியோரின் குரல்கள் ஒருங்கிணைந்து ஒலிக்கும்.

“அள்ளி அள்ளிக் கொடுத்த போதும் குறைவில்லாதது.
கள்ளருக்கும் காவலர்க்கும் எளிமையானது.

உள்ளம் என்பதுள்ளவர்க்கு உண்மையானது.
உலகம் என்பதுள்ளவரை உறுதியானது…”

இவ்வளவு எளிமையாக அன்பைப் பகுத்தாய்வு செய்ய முடியுமா? என்கிற அளவுக்கு மனிதர்களின் அன்பை, வகைகளாகப் பிரித்துக் காட்டியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

கீழ்க்கண்ட வரிகளை பாருங்களேன்!

“மதத்தின் மீது வைத்த அன்பு பக்தி ஆனது.
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது.

இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது.
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது…”

என்னதான் வசதிகள் பெருகி, வாழ்வின் உயர்ந்த நிலைக்குப் போனாலும், மிக உயர்ந்த பதவிகளுக்குப் சென்றாலும், எந்த நிலையிலும் அன்பை எதிர்பார்க்கக் கூடிய மனமே, இயந்திரமாகத் தன்னை உணராத மனிதர்களிடம் பொதுவாக இருக்கிறது.

அதைத்தான் உணர்த்துகிறது எளிமை ததும்பும் இந்தப் பாடல்.

“அறிவில்லாத மனிதர் உள்ளம் அருளில்லாதது.
அருளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது.

பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது.
பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது…”

நிறைவாக, இந்தப் பாடலின் ஊடே இடம்பெற்றிருக்கும் “அன்பு என்னும் பொருளை எந்த உலகில் வாங்கலாம்?” என்கிற கேள்விக்கு கவியரசர் தந்திருக்கும் பதில் எவ்வளவு நேசமிக்கதாக இருக்கிறது.

“பொன் படைத்த மனிதர் கோடி நகைகள் வாங்கலாம்.
பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம்.

அன்பு என்னும் பொருளை எந்த உலகில் வாங்கலாம்?
நல்ல அன்னை தந்தை பிள்ளை வாழும் மனையில் வாங்கலாம்…”

குத்துப் பாடல்களும், விரசமான பாடல்களும், மளித்திருக்கும் திரையிசைச் சூழல்களுக்கிடையே பசும் நாற்றைப் போல அன்புமயமாக ஒரு பாடல் இப்படி மலர்ந்திருப்பது ஆச்சரியம் அளிக்கும் ஒன்றில்லையா? 

*

– மணா.

*