Take a fresh look at your lifestyle.

விஜய்யும் இல்லை, அஜித்தும் இல்லை – அப்புறம் யார்?

‘சினிமா ஒரு கூட்டு முயற்சி’ என ஆண்டாண்டு காலமாகச் சொல்லப்பட்டு வந்தாலும், நட்சத்திரங்களை நம்பியே இங்குப் பிழைப்பு நடக்கிறது என்பதே உண்மை.

தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு சின்ன கணக்கு. பெப்சி, பட விநியோகம், திரை அரங்குகள் ஆகிய மூன்று அமைப்புகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைப் பார்க்கிறார்கள்.

இவர்களில் 80 சதவீதம் பேருக்கு வேலை கொடுப்பது ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய நான்கு உச்ச நட்சத்திரங்களின் படங்கள்தான்.  

இந்த நான்குப் பேருமே ஆண்டுக்கு ஒரு படம் கொடுத்தாலேயே அதிசயம் என்பதே யதார்த்தம். கமல் அரசியலுக்கு வந்து விட்டார்.

‘தக் லைஃப்’ முடித்த கையோடு, மேல்படிப்புக்கு வெளிநாடு சென்றுள்ளார். அவர், திரும்பி வரும்போது, தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கி இருக்கும். கொஞ்ச ஆண்டுகளுக்கு அவர் மேக்கப் போடப்போவதில்லை.

கமல் பாதையிலேயே, விஜய்யும் பயணத்தைத் தொடங்கியுள்ளார். கோடம்பாக்கத்தை துறந்து விட்டு, கோட்டையைப் பிடிக்க தயாராகிவிட்ட அவர், இப்போது தனது கடைசி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினியும், அஜித்தும் மட்டுமே, இனி சோறு போடுவார்கள் என நம்பி இருந்த பல லட்சம் தொழிலாளர்கள் வயிற்றில் நெருப்பு வார்த்திருக்கிறார், ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித்.

கார் பந்தயத்தில் கலந்துகொள்ள துபாய் சென்றுள்ள அஜித், அங்கேயே ‘டேரா’ போட்டு விட்டார். அக்டோபர் மாதம் வரை சினிமாவில் நடிக்கப்போவதில்லை’ என குண்டு வீசியுள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர் எந்தப் பேட்டியும் அளித்ததில்லை. கார் ரேஸ், அவரை ஊடகங்கள் பக்கம் திருப்பி இருக்கிறது. கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அஜித், துபாயில் நேற்று பேட்டி கொடுத்தார்.

கார் ரேஸ் குறித்து நீட்டி முழங்கியவர், சினிமா  பற்றியும் கொஞ்சம் வாய் திறந்துள்ளார்.

“நான்,  ‘அஜித்குமார் ரேசிங் கிளப்’ எனும் கம்பெனியைத் தொடங்கி இருக்கிறேன் – என் சிந்தனை முழுக்க இப்போது கார் ரேசில் மட்டுமே இருக்கிறது – எனவே இந்த ரேஸ் முடியும் வரை, அதாவது அக்டோபர் மாதம் வரை புதிய படங்களில் நடிக்க மாட்டேன்” என அதிரடியாக அறிவித்துள்ளார்.

அதாவது இன்னும் ஓராண்டுக்குப் பிறகே அவர், புதிய படத்தில் நடிப்பதற்கான ஆயத்தங்களைத் தொடங்குவார். அவர் நடித்து முடித்துள்ள விடாமுயற்சி, எப்படியும் இந்த மாதமோ அல்லது அடுத்த மாதமோ ரிலீஸ் ஆகிவிடும். ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் மாதம் வெளியாகிறது.

இன்னும் ஒரு ஆண்டுக்குப் பின்னர், நடிக்க ஆரம்பித்து, அது எப்போது முடிந்து, எப்போது, அரங்குகளை எட்டிப்பார்க்கும் எனத் தெரியவில்லை.

சினிமா எனும் வணிகச் சந்தையில் இன்றைய தினம் இருக்கும் ஒரே சரக்கு ரஜினிகாந்த் மட்டுமே. மற்ற சரக்குகள் இல்லாமல் இல்லை. கிராக்கி உள்ள ஒரே சரக்கு; சூப்பர் ஸ்டார் மட்டும்தான்.

இந்த நான்கு பேருக்கு அடுத்த நிலையில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிம்பு, ஜெயம் ரவி என ஒரு டஜன் நடிகர்கள் இருந்தாலும், விஜய் – அஜித் இடங்களை அவர்கலால் நிரப்ப முடியாது என்பது நிஜம்.

ரஜினி, ஒரு ஆள், எத்தனைப் பேருக்கு சோறு போடுவார்? கொரோனாவுக்குப் பிறகு, கோடம்பாக்கம் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கப்போகிறது என்பதே, சினிமா ஆய்வாளர்கள் கருத்து.

– பாப்பாங்குளம் பாரதி.